உத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்!
திருமணத்துக்காக மதமாற்றம் செய்தால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்கும் அவசர சட்டத்துக்கு, உத்தரப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஹிந்துப் பெண்களைக் காதலித்து கட்டாயப்படுத்தி மாதமாற்றி திருமணம் செய்யும் லவ் ஜிகாத் சம்பவங்கள் நாடு முழுதும் திட்டமிட்ட ரீதியில் அதிகரித்து வருகின்றன. இதனால் சமூகப் பதற்றங்களும் ஏற்படுகின்றன. இந்த நிலையில், லவ் ஜிஹாத் சம்பவங்களுக்கு தடை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக., ஆளும் உத்தர பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் தெரிவித்து வந்தன. இவற்றில் உ.பி., மாநில அரசு முந்திக் கொண்டுள்ளது.
உ.பி., மாநில அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங் தெரிவித்தபோது… திருமணம் செய்வதற்காக மதம் மாற்றப்படுவது அதிகரித்து வருகிறது. சில இடங்களில் காதலித்து கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்படுவதால், சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.
இது போன்ற சூழல்களைத் தடுக்கும் வகையில் திருமணத்துக்காக மதமாற்றம் செய்வது குற்றம் என்ற வகையில் அவசரச் சட்டத்தை அமல்படுத்த அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்தது. இந்தச் சட்டத்தின்படி மதமாற்றம் செய்தால் 1 முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
இளம் சிறுமியர், எஸ்.சி., – எஸ்.டி., மற்றும் பழங்குடியினப் பெண்களை மதமாற்றம் செய்து திருமணம் செய்தால், 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஒரு குழுவாக மதமாற்றம் செய்தால், அதில் ஈடுபடும் அமைப்புக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
எனினும், திருமணத்துக்குப் பின் மதம் மாறுவதற்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பே விண்ணப்பித்து அதற்கு அனுமதி பெற வேண்டும்… என்று கூறினார் சித்தார்த் நாத் சிங்.