சட்ட விரோத போராட்டங்களால் ஜனநாயகத்தைத் தகர்க்க அனுமதிக்க முடியாது: ட்ரம்புக்கு மோடி ‘குட்டு’!
அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு முற்றுகையிட்டு, அமெரிக்க அதிபராக பைடனை அங்கீகரிக்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தால் அமெரிக்காவே ஸ்தம்பித்தது. துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டதில், 4 பேர் வரை உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுவதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவர் வரும் 20 ஆம் தேதி அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.
ஆனால், பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாத தற்போதைய அதிபர் டிரம்ப், தேர்தல் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
எனினும், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், மாகாண தேர்தல் அதிகாரிகளிடம் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்க ஏற்பாடு செய்யும்படியும் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கும்படியும் பேசுவது போன்ற ஒலிப்பதிவுகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டி போராட்டம் நடத்தினர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் உத்தரவிட்டனர்.
ஆனால் போராட்டக் காரர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், அவர்கள் மீது போலீசார் துப்பாகி சூடு நடத்தினர். அதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்த வன்முறைச் சம்பவத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்ததாகக் கூறப் படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெறும் அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்…
‘வாஷிங்டனில் நடைபெறும் வன்முறை தொடர்பான செய்திகள் மன வேதனை அளிக்கிறது. அமைதியான வழியில் அதிகார மாற்றம் நடைபெற வேண்டும். சட்டவிரோதமான போராட்டங்கள் மூலம் ஜனநாயக நடைமுறைகளை தகர்க்க அனுமதிக்க முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்.