புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் உள்கட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி உள்கட்சித் தேர்தல்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதில், அகில இந்திய தலைவராக் ராகுல் காந்தி தேர்வாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி தெரிவித்த போது, ”அகில இந்திய அளவில் இரண்டு கட்டங்களாக காங்கிரஸின் உட்கட்சித் தேர்தல்கள் நடைபெறுகிறது. முதல் கட்டமாக, ஜூலை 16 முதல் ஜூலை 31 வரை கேரளா உள்ளிட்ட 18 மாநிலங்களிலும், 2வது கட்டமாக ஜூலை 28 முதல் செப்டம்பர் 30 வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெறுகிறது.
- ஜூலை 28 முதல் ஆகஸ்டு 14 வரை வட்டார உறுப்பினர்கள் தேர்தலும்,
- ஆகஸ்டு 20 முதல் 31 வரை வட்டார காங்கிரஸ் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள், 6 மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒரு மாநிலக் குழு உறுப்பினர் தேர்தலும்,
- செப்டம்பர் 1 முதல் 15 வரை மாவட்டத் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் தேர்தலும்,
- செப்டம்பர் 21 முதல் 30 வரை மாநில தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், மாநில பிரதிநிதிகள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலும்,
- அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முழுமையான கூட்டத்தில், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் தேர்வும் நடைபெறும். இந்தக் கூட்ட தேதி பின்னர் முடிவு செய்யப்படும்” என்று கூறியுள்ளர்..
செப்டம்பர் 30ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் என்பதால், அன்றைய தினம் ராகுல் காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.