பெர்லின்: இந்தியாவில் பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் குறித்த செய்திகள் அதிகம் வெளியாவதன் காரணத்தால், ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் சேர்க்கைக்காக முயன்ற இந்திய மாணவருக்கு அங்குள்ள பேராசிரியை அனுமதி மறுத்து அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார். என்னிடம் மாணவிகள் அதிகம் பயில்கின்றனர். அதனால் உங்களைப் போன்றவர்களுக்கு இங்கே சேர்க்கைக்கு அனுமதி கிடையாது என்று கூறியுள்ளார். லீப்சிக் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் ஒருவர் இன்டர்ன்ஷிப் அனுமதிக்கு விண்ணப்பித்தார். ஆனால், பலாத்கார சம்பவங்கள் பிரச்னையைக் காரணம் காட்டி, அவர் மறுத்தார். அன்னெட் பெக்-சிக்கிங்கர் என்ற அந்தப் பேராசிரியை, அந்த மாணவருக்கு அனுப்பிய பதில் மின்னஞ்சலில், எதிர்பாராத விதமாக என்னால் இந்திய மாணவர்களின் இன்டர்ன்ஷிப்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, இந்தியாவில் அதிகமான பாலியல் பலாத்காரங்கள் நடப்பதாக நாங்கள் கேள்விப் படும் செய்தியை எங்களால் ஆதரிக்க முடியவில்லை. எங்கள் குழுவில் என்னிடம் அதிக அளவிலான மாணவிகள் உள்ளனர். எனவே இது போன்ற செயல்பாடுகளுக்கு நான் ஆதரவளிக்க முடியாது” என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பேராசிரியைக்கும் பாதிக்கப்பட்ட மாணவருக்கும் இடையே நடைபெற்ற மின்னஞ்சல் பறிமாற்றங்களை, அவரது சக மாணவர் ஒருவர் இணையத்தில் அம்பலப்படுத்தினார். இந்த மின்னஞ்சல் பதில், அந்த மாணவரால் இணையத்தில் அதிகம் பரவவிடப் பட்டது. வைரல் போன்று ஞாயிறு அதிகம் சுற்றுக்கு விடப்பட்ட இந்த மின்னஞ்சல், தில்லி ஜெர்மன் தூதரகத்தின் கதவையும் தட்டியது. இதை அடுத்து, பேராசிரியை பெக்–சிக்கிங்கரின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்தது. தில்லியில் உள்ள ஜெர்மனி தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் அவருக்கு பதில் மின்னஞ்சல் கடிதம் எழுதினார். நான் உங்களுக்கு மிகவும் வலுவாக தெரிவிப்பது, இந்தியா ஒன்றும் பலாத்காரம் செய்பவர்களின் நாடு அல்ல, இங்கே இந்தப் பிரச்னையை அரசு மிகவும் தீவிரமாக அணுகுகிறது. நாடு தழுவிய அளவில் ஆரோக்கியமான, பொது விவாதங்கள் நடக்கின்றன. நேர்மையான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. உங்கள் செயலை நான் கண்டிக்கிறேன். நீங்கள் இந்தியாவைப் பற்றி இன்னும் நிறைய படிக்க வேண்டும், அதற்கு உங்களை நான் ஊக்குவிக்கிறேன். மிகவும் துடிப்பான, அனைத்தையும் திறந்த மனதுடன் அணுகக் கூடிய விசாலமான அறிவு கொண்ட இந்திய மக்கள் உள்ளனர். உங்கள் மனதில் இந்தியாவைப் பற்றி பதிந்துள்ள பிம்பத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கடிதம் எழுதினார். அவரது கடிதத்துக்கு பதிலாக, தான் தவறு செய்து விட்டதாகவும், தனது செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் பேராசிரியை பெக்–சிக்கிங்கர் கூறி இருந்தார். இதனை வெளிப்படுத்தி, ஜெர்மனி தூதரகம் செய்திக் குறிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டது.
எனக்கு மாணவிகள் உள்ளனர்; உங்களுக்கு அனுமதியில்லை: இந்திய மாணவருக்கு ஜெர்மன் பல்கலை.யில் அவமானம்!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week