Home இந்தியா உள்ளூர் தயாரிப்புகளை வாங்கி… நம் மக்களின் வாழ்வில் தீப ஒளி ஏற்றுங்கள்!

உள்ளூர் தயாரிப்புகளை வாங்கி… நம் மக்களின் வாழ்வில் தீப ஒளி ஏற்றுங்கள்!

manadhinkural 1

மனதின் குரல் – 82ஆவது பகுதி
ஒலிபரப்பு நாள்: 24.10.2021
– சென்னை வானொலி நிலையம் –
~ தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்
~

        எனதருமை நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள், கோடானுகோடி வணக்கங்கள்.  நான் ஏன் கோடானுகோடி என்று கூறுகிறேன் என்றால், 100 கோடி தடுப்பூசித் தவணைகளுக்குப் பிறகு இன்று தேசத்திலே புதிய உற்சாகம், புதிய சக்தி பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது.  நமது தடுப்பூசித் திட்டத்தின் வெற்றி, பாரதத்தின் வல்லமையைப் பறைசாற்றுகிறது, அனைவரின் முயற்சி என்ற மந்திரத்தின் சக்தியைப் பிரதிபலிக்கிறது.

        நண்பர்களே, 100 கோடித் தடுப்பூசிகள் என்ற புள்ளி விவரம் மிகவும் பெரியது தான் என்றாலும், இதிலே இலட்சோபலட்சம் சின்னச்சின்ன உத்வேகமளிக்கும் கூறுகள், பெருமிதம் கொள்ளச் செய்யும் பல அனுபவங்கள், பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.  தடுப்பூசி போடப்படுதல் தொடங்கிய உடனேயே இந்த இயக்கம் இத்தனை பெரிய வெற்றியை எட்டும் என்பது எப்படி எனக்கு தெரியும் எனக் கடிதங்கள் வாயிலாகப் பலர் என்னிடம் கேட்கிறார்கள். ஏன் எனக்கு இந்த உறுதியான நம்பிக்கை ஏற்பட்டது என்று சொன்னால், நமது தேசம், நம் தேசத்தவருடைய திறமைகளை, ஆற்றல்களை நான் நன்கு அறிவேன்.  நமது சுகாதாரப் பணியாளர்கள், தடுப்பூசி போடப்படுவதைச் செய்து முடிப்பதில் எந்த விஷயத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.  நமது சுகாதாரப் பணியாளர்கள் தங்களுடைய கடுமையான உழைப்பாலும், மனவுறுதிப்பாட்டாலும் ஒரு புதிய எடுத்துக்காட்டை முன்வைத்திருக்கிறார்கள், அவர்கள் புதுமைகள் படைப்போடு கூடவே மன உறுதிப்பாட்டுணர்வோடு சேவை புரிதலுக்கான ஒரு புதிய அளவுகோலையே நிறுவி இருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய எடுத்துக்காட்டுக்கள் கணக்கிலடங்காதவை.  இவை எல்லாம் தெரிவிப்பது ஒன்றே ஒன்று தான் – எப்படி இவர்கள் அனைத்துச் சிரமங்களையும் தாண்டி, பெருவாரியான மக்களுக்கு பாதுகாப்புக் கவசத்தை அளித்தார்கள் என்பது தான்.  நாமெல்லாம் பல செய்தித் தாள்களிலே படித்திருப்போம், வெளியே கேள்விப்பட்டிருப்போம், ஒன்றை விஞ்சும் அளவுக்கு மற்றொன்று என்ற வகையிலே கருத்தூக்கமளிக்கும் உதாரணங்கள் நம் கண்முன்னே வருகின்றன. நான் இன்றைய மனதின் குரலின் நேயர்களுக்கு உத்தராகண்டின் பாகேஷ்வரைச் சேர்ந்த இப்படிப்பட்ட ஒரு சுகாதாரப் பணியாளரான பூனம் நௌடியால் அவர்களை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.  நண்பர்களே, இந்த உத்தராகண்டானது 100 சதவீதம் தடுப்பூசி போடும் பணியை நிறைவேற்றி வைத்திருக்கிறது.  இவர் உத்தராகண்டின் பாகேஷ்வர் என்ற பகுதியில் இருந்து வருகிறார் என்றால், உத்தராகண்டின் அரசும் இந்த விஷயத்தில் பாராட்டுதல்களுக்கு உரியது; ஏனென்றால், இங்கே பல கடினமான பகுதிகள், அணுக சிரமமான இடங்கள் இருக்கின்றன.  இதைப் போலவே ஹிமாச்சல் மாநிலத்திலும், இப்படிப்பட்ட பல இடர்பாடுங்களைத் தாண்டி, 100 சதவீதம் தவணைகள் பணி நிறைவடைந்திருக்கிறது.  தடுப்பூசி போடும் பணியில் இரவு பகலாகப் பணியாற்றினார் பூனம் அவர்கள் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர்: பூனம் அவர்களே, வணக்கம்.  

பூனம் நௌடியால்:  ஐயா. வணக்கம்.

பிரதமர்:  பூனம் அவர்களே, உங்களைப் பத்தி, நாட்டு மக்களுக்குக் கொஞ்சம் சொல்லுங்க.

பூனம் நௌடியால்:  ஐயா, நான் பூனம் நௌடியால்.  உத்தராகண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தைச் சேர்ந்த சானீ கோராலீ மையத்தில ANMஆ மகப்பேறுத் தாதியா வேலை பார்த்திட்டு இருக்கேன்.

பிரதமர்:  பூனம் அவர்களே, பாகேஷ்வருக்கு வரக்கூடிய பேறு எனக்குக் கிடைச்சது, அதை ஒரு வகையில புனிதத்தலம்னே சொல்லலாம், அங்க பழமையான கோயில்கள்லாம் உண்டு, பல நூற்றாண்டுக்காலம் முன்னாலயே அங்க மக்கள் எப்படி பணியாற்றியிருப்பாங்கங்கற விஷயம் எனக்குள்ள ஒரு தாக்கத்தை ஏற்படுத்திச்சு.

பூனம் நௌடியால்:  ஆமாங்கய்யா.

பிரதமர்:  பூனம் அவர்களே, நீங்க உங்க பகுதியில இருக்கற எல்லாருக்கும் தடுப்பூசி போட்டாச்சா?

பூனம் நௌடியால்:  ஆமாங்கய்யா, எல்லாரும் போட்டுக்கிட்டாங்க.

பிரதமர்:  உங்களுக்கு எந்த விதமான பிரச்சனை ஏதும் ஏற்பட்டிச்சா?

பூனம் நௌடியால்:  ஆமாங்கய்யா. இங்க தீவிர மழையால பாதையில தடை ஏற்பட்டிரும்.  நாங்க நதியைக் கடந்து போக வேண்டி இருந்திச்சு.  மேலும் வயதானவங்க, மாற்றுத்திறனாளிகளுக்கான கோவிட் மையங்களோட செயல்பாட்டை மாதிரி நாங்க ஒவ்வொரு வீட்டுக்கும் போனோம்.  தடுப்பூசி மையங்களுக்கு வர முடியாத வயதானவங்க, மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள்,  இந்த மாதிரியானவங்க.  

பிரதமர்:  ஆனா, அங்க மலைகள்ல எல்லாம் வீடுகள் ரொம்ப தொலைவுல இல்லையா இருக்கும்!      

பூனம் நௌடியால்:  ஆமாங்கய்யா.

பிரதமர்:  நாளொன்றில உங்களால எவ்வளவு தூரம் போக முடிஞ்சுது?

பூனம் நௌடியால்:  கிலோமீட்டர் கணக்குப்படி பார்த்தா சராசரியா 8 லேர்ந்து 10 கிலோமீட்டர்.

பிரதமர்:  நல்லது, தாழ்நிலத்தில வசிக்கறவங்க இவங்க, இவங்களுக்கு 8-10 கிலோமீட்டர்ங்கறதுன்னா என்ன அப்படீங்கறது தெரியாது.  8-10 கிலோமீட்டர்ன்னா, இதை பயணிக்க ஒரு நாள் முழுக்க செலவாகும்னு எனக்குத் தெரியும்.

பூனம் நௌடியால்:  ஆமாங்க.

பிரதமர்:  ஆனா இது ரொம்ப கடினமான வேலை, மேலும் தடுப்பூசிக்குத் தேவையான எல்லா பொருட்களையும் வேற சுமந்துக்கிட்டு போகணும். உங்களுக்கு யாராவது உதவியாளர்கள் இருக்காங்களா?

பூனம் நௌடியால்:  ஆமாங்க. குழுங்கற வகையில நாங்க ஐந்து பேர்கள்.

பிரதமர்:  சரி.

பூனம் நௌடியால்:  இதில மருத்துவர், ஒரு மருத்துவத்தாதி, ஒரு மருந்தியலாளர், ஒரு ஆஷா பணியாளர், ஒரு தரவுப் பதிவாளர்.

பிரதமர்:  சரி, தரவுப் பதிவாளர்னு சொன்னீங்களே, அங்க இணைய இணைப்பு கிடைக்குமா இல்லை பாகேஷ்வருக்குத் திரும்பி வந்த பிறகு தான் தரவேற்றம் செய்வீங்களா?

பூனம் நௌடியால்:  ஐயா, சில இடங்கள்ல கிடைக்கும், சில வேளை, நாங்க பாகேஷ்வர் வந்த பிறகு தான் தரவுப்பதிவும் தரவேற்றமும் செய்வோம்.

பிரதமர்:  சரி.  பூனம் அவர்களே, நீங்க உங்க கடமை உணர்வைத் தாண்டியும் மக்களுக்குத் தடுப்பூசி போட்டிருக்கறதா சொன்னாங்க.  இப்படி செயல்படணுங்கற உணர்வு உங்க மனசுல எப்படி வந்திச்சு, இதை நீங்க எப்படி செயல்படுத்தினீங்க?

பூனம் நௌடியால்:  நாங்க, எங்க குழுவினர் எல்லாரும் ஒரு தீர்மானம் செஞ்சுக்கிட்டோம், ஒருத்தர் கூட இந்த தடுப்பூசி போடப்படுறதிலிருந்து விடுபட்டுப் போயிரக் கூடாதுன்னு.  நம்ம நாட்டிலேர்ந்து கொரோனா நோயை நாம விரட்டியாகணும்.  நானும் ஆஷா செவிலியருமா இணைஞ்சு, கிராமந்தோறும் இருக்கற ஒவ்வொருத்தர் பத்தின தகவல் அடங்கின பட்டியலைத் தயாரிச்சோம்.  பிறகு இதன்படி, மையத்துக்கு வந்தவங்களுக்கு மையத்திலயே ஊசி போட்டோம்.  பிறகு நாங்க வீடுவீடா போனோம்.  ஐயா, இதற்குப் பிறகு யாரெல்லாம் விடுபட்டுப் போனாங்களோ, யாரால எல்லாம் மையத்துக்கு வர முடியாம போனதோ……

பிரதமர்:  மக்களுக்குப் புரிய வைக்க வேண்டியிருந்திச்சா?

பூனம் நௌடியால்:  ஆமாங்க, அவங்களுக்குப் புரிய வைச்சோம்.

பிரதமர்:  தடுப்பூசி எடுத்துக்கணுங்கற ஆர்வம் மக்கள் மனசுல இன்னும் இருக்கா?

பூனம் நௌடியால்:  கண்டிப்பா இருக்குங்கய்யா.  இப்ப எல்லாம் மக்கள் நல்லா புரிஞ்சுக்கிட்டாங்க.  முதல்ல எல்லாம், இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது தான், நல்லா வேலை செய்யும், நாங்களுமே போட்டுக்கிடாச்சு நீங்களே பாருங்க, நாங்க நல்லாத் தானே இருக்கோம், உங்க முன்னால தானே இருக்கோம், எங்க பணியாளர்கள் எல்லாருமே போட்டுக்கிட்டாச்சு, நாங்க நல்லாவே இருக்கோம்னு புரிய வைக்க நாங்க கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்திச்சு.

பிரதமர்:  எங்கயாவது தடுப்பூசி போட்டுக்கிட்ட துக்குப் பின்னால ஏதும் குற்றச்சாட்டு வந்திச்சா?

பூனம் நௌடியால்:  கிடையவே கிடையாதுய்யா.  அப்படி நடக்கவே இல்லை.

பிரதமர்:  ஒண்ணுமே ஆகலை, இல்லையா?

பூனம்:  ஆமாம்

பிரதமர்: எல்லாருக்கும் சந்தோஷம் தானே!

பூனம் நௌடியால்: கண்டிப்பா.

பிரதமர்: எல்லாம் நல்லபடியா போச்சுன்னு.

பூனம் நௌடியால்:  ஆமாங்க.

பிரதமர்:  நல்ல வேலை செஞ்சீங்க பூனம் அவர்களே.  இந்தப் பகுதி முழுக்கவும் எத்தனை கடினமான ஒண்ணுன்னு எனக்கு நல்லாவே தெரியும், இந்த மலைகள்ல எல்லாம் நடந்து தான் போயாகணும்.  ஒரு மலையில ஏறணும், பிறகு கீழ இறங்கணும், பிறகு இன்னொரு மலை மேல ஏறணும், மேலும் ஒவ்வொரு வீட்டுக்கு இடையிலயும் இருக்கற தொலைவு வேற.  இதையெல்லாம் தாண்டி நீங்க ரொம்ப சிறப்பா பணியாற்றி இருக்கீங்க.

பூனம் நௌடியால்: ரொம்ப நன்றிங்கய்யா.  உங்க கூட பேசற சந்தர்ப்பம் எனக்கு இன்னைக்கு வாய்ச்சதே எனக்குப் பெரிய பாக்கியம்ங்கய்யா!!

உங்களை மாதிரியான இலட்சக்கணக்கான சுகாதாரப் பணியாளர்களோட கடும் உழைப்பு காரணமாத் தான் இன்னைக்கு பாரதம் 100 கோடி தடுப்பூசித் தவணைகள்ங்கற கட்டத்தைத் தாண்ட முடிஞ்சிருக்கு.  இன்னைக்கு நான் உங்களுக்கு மட்டும் நன்றி தெரிவிக்கலை, ஆனா யாரெல்லாம் அனைவருக்கும் தடுப்பூசி, இலவச தடுப்பூசிங்கற இயக்கத்தை இத்தனை பெரிய உச்சத்துக்குக் கொண்டு போய் வெற்றி பெறச் செய்திருக்காங்களோ, அவங்க எல்லாருக்கும் இன்னைக்கு என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவிச்சுக்கறேன். உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் என்னோட பலப்பல நல்வாழ்த்துக்கள்!!

        எனதருமை நாட்டுமக்களே, உங்களுக்கெல்லாம் தெரியும், அடுத்த ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று சர்தார் படேல் அவர்களின் பிறந்த நாளாகும்.  மனதின் குரலின் ஒவ்வொரு நேயரின் தரப்பிலிருந்து, என் தரப்பிலிருந்து, இரும்பு மனிதருக்கு நான் பலப்பல வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன்.  

mannkibaat

        நண்பர்களே, அக்டோபர் மாதம் 31ஆம் தேதியை நாம் தேசிய ஒருமைப்பாட்டு தினமாகக் கொண்டாடுகிறோம்.  நாம் ஒற்றுமையின் செய்தியை அளிக்கக்கூடிய ஏதாவது ஒரு நெறியோடு நம்மைக் கண்டிப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது நம்மனைவரின் கடமையாகும்.  கட்ச்சின் லக்பத் கோட்டை தொடங்கி, ஒற்றுமைச் சிலை வரையிலான ஒரு இரு சக்கர வாகனப் பேரணியை குஜராத் காவல்துறையானது தற்போது தான் நிறைவு செய்தது என்பதை நீங்களே கவனித்திருக்கலாம்.  திரிபுரா காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள், ஒருமைப்பாட்டு தினத்தைக் கொண்டாடும் வகையிலே, திரிபுராவிலிருந்து ஒற்றுமைச் சிலை வரையிலான ஒரு இரு சக்கர வாகனப் பேரணியை மேற்கொண்டு வருகிறார்கள்.  அதாவது கிழக்கிலிருந்து தொடங்கி மேற்கு வரை பயணித்து தேசத்தை இணைத்து வருகிறார்கள்.  ஜம்மு-கஷ்மீரத்தைச் சேர்ந்த காவலர்களும், உரீ தொடங்கி படான்கோட் வரை இப்படியானதொரு இரு சக்கர வாகனப் பேரணியை மேற்கொண்டு தேசத்திற்கு ஒற்றுமை பற்றிய செய்தியை அளித்து வருகிறார்கள். இந்தக் காவலர்கள் அனைவருக்கும் நான் சிரம் வணங்குகிறேன்.  ஜம்மு-கஷ்மீரத்தின் குப்வாடா மாவட்டதின் பல சகோதரிகளைப் பற்றியும் எனக்குத் தகவல்கள் கிடைத்தன.  இந்தச் சகோதரிகள் கஷ்மீரத்தில் இருக்கும் இராணுவம் மற்றும் அரசு அலுவலகங்களுக்காக மூவண்ணக் கொடியை நெசவு செய்யும் பணியாற்றி வருகிறார்கள்.  இந்தப் பணி தேசபக்தி உணர்வு நிறைந்த ஒன்று.  நான் இந்த சகோதரிகளின் இந்த ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்.  நீங்கள்  அனைவரும் கூட, பாரத நாட்டின் ஒற்றுமைக்காக, பாரத நாட்டின் உயர்வுக்காக, ஏதாவது ஒன்றைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.  உங்கள் மனதிலே ஏற்படும் மன நிறைவை நீங்கள் உணர்வீர்கள் பாருங்கள்!!

        நண்பர்களே, சர்தார் ஐயா கூறுவதுண்டு – “நாம் நமது ஒன்றுபட்ட உழைப்பால் மட்டுமே தேசத்தைப் புதிய மகத்தான உச்சங்களுக்குக் கொண்டு செல்ல முடியும்.  நம்மிடத்திலே ஒற்றுமை உணர்வு ஏற்படவில்லை என்று சொன்னால், நாம் புதியபுதிய இடர்களில் நம்மை சிக்க வைத்துக் கொண்டு விடுவோம்”.  அதாவது, தேச ஒற்றுமை என்றால் சிகரம், முன்னேற்றம்.  நாம் சர்தார் படேல் அவர்களின் வாழ்க்கையிலிருந்து, அவரது சிந்தனைகளிலிருந்து, ஏராளமானவற்றைக் கற்க முடியும்.  தேசத்தின் தகவல் ஒலிபரப்புத் துறையும் கூட தற்ப்போது சர்தார் ஐயாவின் வாழ்க்கை சரிதத்தைப் பற்றிய ஒரு படத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.  நமது இளைய நண்பர்கள் அனைவரும் இதைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  சர்தார் ஐயா பற்றி சுவாரசியமான முறையிலே தெரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்.

        எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, தொடர்ச்சியான வளர்ச்சியை வாழ்க்கை விரும்புகிறது, முன்னேற்றத்தை விழைகிறது, சிகரங்களைக் கடந்து செல்ல அவாவுகிறது.  அறிவியல் என்ன தான் முன்னேற்றம் அடைந்தாலும், வளர்ச்சியின் வேகம் என்ன தான் விரைவாக இருந்தாலும், கட்டிடம் என்ன தான் மகத்தானதாக இருந்தாலும், வாழ்க்கையில் ஒரு வெறுமை உணரப்படுகிறது.  ஆனால், இவற்றிலே பாடல்-இசை, கலை, நடனம், இலக்கியம் போன்றவை இணையும் போது, இவற்றின் தாக்கம், இவற்றின் உயிர்ப்பு, பல மடங்கு அதிகரித்து விடுகிறது.  ஒரு வகையில் இவை அனைத்தும் தேவை என்பதால் தான் இது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது. இந்த அனைத்து விஷயங்களும், நமது வாழ்க்கைக்கு ஒரு வினையூக்கியாக, ஒரு உந்துகோலாக இருக்கின்றன, நமது சக்தியை அதிகரிக்கின்றன என்பார்கள்.   மனித மனத்தின் உள்மனதை மேம்படுத்த, நமது உள்மனதின் பயணத்தை உருவாக்கவும் கூட, பாடல்-இசை மற்றும் பல்வேறு கலைகளின் பெரும்பங்கு உண்டு, இவற்றுக்கென இருக்கும் விசேஷமான ஆற்றல் என்னவென்றால், இவற்றைக் காலத்தாலும் கட்டிவைக்க முடியாது, எல்லைகளாலும் கட்டுப்படுத்த முடியாது, சமயங்களும் கருத்து வேறுபாடுகளுமே கூட முடக்கி விட முடியாது.  அமிர்த மஹோத்சவத்தையும் கூட நம்முடைய கலை, கலாச்சாரம், பாடல், சங்கீதத்தின் வண்ணங்களால் கண்டிப்பாக நாம் நிரப்ப வேண்டும்.  அமிர்த மஹோத்சவம் மற்றும் கீதம்-சங்கீதம்-கலையின் இந்தச் சக்தியோடு தொடர்புடைய பல ஆலோசனைகள் உங்களிடமிருந்து எனக்கு வந்திருக்கின்றன.  இந்த ஆலோசனைகள் அனைத்தும் எனக்கு மிகவும் விலைமதிப்பில்லாதவை.  நான் இவற்றை கலாச்சார அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.   அமைச்சகம் மிகவும் குறைவான நேரத்தில் இந்த ஆலோசனைகளை மிகவும் ஆழமாக ஆய்வு செய்து, இதன் மீது பணியாற்றி இருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இவற்றிலே ஒரு ஆலோசனை என்னவென்றால், தேசபக்திப் பாடல்களோடு தொடர்புடைய போட்டி!!  சுதந்திரப் போராட்டத்தின் போது, பல்வேறு மொழிகளில், வழக்குமொழிகளில், தேசபக்திப் பாடல்கள் மற்றும் பஜனைப்பாடல்கள் நாடனைத்தையும் ஒருமைப்படுத்தின.  இப்போது அமிர்தகாலத்தில், நமது இளைஞர்கள், இத்தகைய தேசபக்திப் பாடல்களை எழுதி, இந்தக் கொண்டாட்டத்திற்கு ஆற்றல் நிரப்பலாம்.  இந்த தேசபக்திப் பாடல்கள் தாய்மொழியில் இருக்கலாம், தேசியமொழியில் இருக்கலாம், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கலாம்.  ஆனால், கண்டிப்பாக இந்தப் பாடல்கள் புதிய பாரதத்தின் புதிய எண்ணம் கொண்டவையாக, தேசத்தின் தற்கால வெற்றியிலிருந்து கருத்தூக்கம் பெற்று, எதிர்காலத்தின் பொருட்டு, தேசத்திற்கு உறுதி கூட்டுபவையாக இருக்க வேண்டும்.  கலாச்சார அமைச்சகத்தின் தயாரிப்புகள், வட்டம் அளவிலிருந்து தொடங்கி, தேசிய அளவு வரை இணைந்த போட்டியாக இது அமைக்கப்பட வேண்டும்.

mann ki baat apr 26

        நண்பர்களே, இதே போல மனதின் குரலின் நேயர் ஒருவர் எனக்கு ஒரு ஆலோசனையை அளித்திருக்கிறார்.  அதாவது அமிர்த மஹோத்சவத்தினை ரங்கோலிக் கலையோடும் இணைக்கலாமே என்பது தான் அது.  ரங்கோலி அதாவது கோலம் போடுதல் வாயிலாக பண்டிகைக் காலத்தில் வண்ணங்களால் இட்டு நிரப்புவது என்ற பாரம்பரியம் பல நூற்றாண்டுக்காலமாகவே நமது நாட்டிலே இருந்து வருகிறது.  கோலம் போடுதல் என்பது தேசத்தின் பன்முகத்தன்மையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.  பல்வேறு மாநிலங்களில், பல்வேறு பெயர்களால், பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தும் ரங்கோலிக் கோலம் போடப்படுகிறது.  ஆகையால், கலாச்சார அமைச்சகம் இதோடு தொடர்புடைய தேசியப் போட்டி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யவிருக்கிறது.  நீங்களே கற்பனை செய்து பாருங்கள், சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்புடைய ரங்கோலிக் கோலத்தைத் தங்கள் வீடுகளின் வாயில்களில், சுவர்களில் சுதந்திரத்தின் ஒரு சம்பவத்தை வண்ணங்களில் மக்கள் இழைக்கும் போது, அமிர்த மஹோத்சவத்தின் வண்ணம் மேலும் மெருகடையும்.

        நண்பர்களே, மேலும் ஒரு பாரம்பரியம் நம் நாட்டிலே இருக்கும் லோரீ, அதாவது தாலாட்டுப் பாடல். நம் நாட்டிலே இந்தத் தாலாட்டுப் பாடல்கள் வாயிலாகப் பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்கள் கற்றுத் தரப்படுகின்றன, கலாச்சாரம் அவர்களுக்கு அடையாளப்படுத்தப் படுகிறது. தாலாட்டுப் பாடல்களுக்கே உரித்தான பன்முகத்தன்மை உண்டு.  இந்த அமிர்த காலத்திலே, இந்தக் கலைக்கும் புத்துயிர் அளித்து, தேசபக்தியோடு கலந்த இப்படிப்பட்ட தாலாட்டுப் பாடல்கள், கவிதைகள், பாடல்கள் என ஏதாவது ஒன்றினை நாம் எழுதலாமே!!  இவற்றை மிக எளிதாக, ஒவ்வொரு இல்லத்தின் அன்னையும் தங்களுடைய குழந்தைகளுக்கு பாடிக்காட்ட முடியுமே!!  இந்தத் தாலாட்டுப் பாடல்கள் நவீன பாரதத்தைப் பின்புலமாகவும், 21ஆம் நூற்றாண்டுப் பாரதம் பற்றிய கனவுகளை படம்பிடித்துக் காட்டும் விதமாகவும் இருக்க வேண்டும்.  நேயர்களான உங்கள் அனைவரின் ஆலோசனைகளுக்குப் பிறகு, அமைச்சகம் இதோடு தொடர்புடைய போட்டியை நடத்தவும் தீர்மானித்திருக்கிறது.

        நண்பர்களே, இந்த மூன்று போட்டிகளும் அக்டோபர் 31ஆம் தேதியன்று சர்தார் ஐயாவுடைய பிறந்த நாளிலிருந்து தொடங்கப்பட இருக்கின்றன.  வரவிருக்கும் தினங்களில் கலாச்சார அமைச்சகம் இது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அளிக்கும்.  இந்தத் தகவல்கள், அமைச்சகத்தின் இணையத்தளத்திலும் இருக்கும், சமூக ஊடகங்களிலும் இடம் பெறும்.  நீங்கள் அனைவரும் இதிலே கலந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  நமது இளைய நண்பர்கள் கண்டிப்பாக இதிலே தங்களுடைய கலை, தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.  இதனால் உங்கள் பகுதிகளின் கலை மற்றும் கலாச்சாரம், தேசத்தின் அனைத்து இடங்களையும் சென்றடையும், உங்களின் கதைகளை தேசம் முழுவதும் செவிமடுக்கும்.

        என் மனம்நிறை நாட்டுமக்களே, இந்த வேளையில் நாம் அமிர்த மஹோத்ஸவத்தின் போது, தேசத்தின் வீரர்கள்-வீராங்கனைகளின் மகத்தான புண்ணிய ஆன்மாக்களை நினைவு கூர வேண்டும்.  அடுத்த மாதம், நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று நமது தேசத்தின் ஒரு மஹாபுருஷர், போராட்ட வீரர், பகவான் பிர்ஸா முண்டா அவர்களின் பிறந்த நாள் வருகிறது.  பகவான் பிர்ஸா முண்டா தர்தீ ஆபா என்றும் அழைக்கப்படுகிறார்.  இதன் பொருள் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?  இதன் பொருள் பூமித் தந்தை. பகவான் பிர்ஸா முண்டா, எந்த முறையில் தனது கலாச்சாரம், தனது காடுகள், தனது பூமி ஆகியவற்றைப் பாதுகாக்க போராடினாரோ, இதை பூமித் தந்தையால் மட்டுமே புரிய முடியும்.  நம்முடைய கலாச்சாரம் மற்றும் வேர்கள் மீதான பெருமிதத்தை அவர் நமக்குக் கற்பித்திருக்கிறார்.  அந்நிய எதேச்சாதிகாரம் அவருக்கு விடுத்த ஏராளமான மிரட்டல்கள், அழுத்தங்கள் அனைத்தையும் தாண்டி, அவர் பழங்குடியின கலாச்சாரத்தைத் துறக்கவில்லை.  இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மூலம் நேசிப்பதை நம்மால் கற்க முடிந்தால், இந்த விஷயத்தில் தர்தி ஆபாவான பிர்ஸா முண்டா நமக்கு மிகப்பெரிய உத்வேகமாக விளங்குகிறார்.  அந்நிய ஆட்சியின் எந்த விதிமுறைகள் எல்லாம் இயற்கைக்குத் தீமை விளைவிக்குமோ, அந்த அனைத்தையும் அவர் கடுமையாக எதிர்த்தார்.  ஏழைகள் மற்றும் சிரமங்களில் சிக்கிய மனிதர்களுக்கு உதவ, பகவான் பிர்ஸா முண்டா எப்போதும் முதல் மனிதராக இருப்பார்.  அவர் சமூகத் தீமைகளுக்கு முடிவு கட்ட சமூகத்திலே விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.  உல்குலான் போராட்டத்திற்கு அவர் தலைமையேற்று நடத்தியதை யாரால் மறக்க இயலும்?  இந்தப் போராட்டம் தான் ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.  இதன் பிறகு ஆங்கிலேயர்கள் பகவான் பிர்ஸா முண்டாவைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு மிகப் பெரிய வெகுமதியை அறிவித்தார்கள்.  ஆங்கிலேயர்களின் யதேச்சாதிகாரம் அவரை சிறையில் தள்ளியது, அவரை எந்த அளவுக்குச் சித்திரவதை செய்து துன்புறுத்தியது என்றால், 25 வயதிலேயே அவர் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.  அவருடைய பூதவுடல் வேண்டுமென்றால் நம்மை விட்டுப் பிரிந்து சென்றிருக்கலாம்; ஆனால் மக்களின் மனங்களிலே பகவான் பிர்ஸா முண்டா காலகாலத்திற்கும் வீற்றிருந்து உத்வேகம் அளித்து வருகிறார்.  இன்றும் கூட, அவருடைய சாகஸங்கள் மற்றும் வீரம் நிறைந்த நாட்டுப்புறப் பாடல்களும் கதைகளும் பாரதத்தின் மத்திய பகுதியில் மிகவும் பிரபலமானவையாக விளங்குகின்றன.  நான் தர்தீ ஆபா என்ற பூமித் தந்தையான பகவான் பிர்ஸா முண்டாவுக்குத் தலை வணங்குகிறேன், இளைஞர்களே, உங்களிடத்தில் வேண்டிக் கொள்கிறேன், அவரைப் பற்றிப் படியுங்கள்.  பாரதத்தின் சுதந்திர வேள்வியில் நமது பழங்குடியின சமூகத்தின் சிறப்பான பங்களிப்பு பற்றி நீங்கள் எத்தனை தெரிந்து கொள்கிறீர்களோ, அத்தனை பெருமிதம் கொள்வீர்கள்.

PM Modi Addresses Nation On 50th Edition of ‘Mann Ki Baat’

எனதருமை நாட்டுமக்களே, இன்று அக்டோபர் மாதம் 24ஆம் தேதி, ஐ.நா. தினம் கொண்டாடப்படுகிறது.  இந்த நாளன்று தான் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது, அந்தத் தொடக்கத்திலிருந்தே பாரதம் இதோடு தொடர்பு கொண்டிருக்கிறது.  நாடு சுதந்திரம் அடையும் முன்பாகவே 1945ஆம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகளின் சாஸனத்தில் பாரதம் கையெழுத்திட்டது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.  ஐக்கிய நாடுகளோடு இணைந்த ஒரு விசித்திரமான விஷயம் என்னவென்றால், ஐக்கிய நாடுகளின் தாக்கத்தையும் அதன் சக்தியையும் அதிகரிப்பதில் பாரத நாட்டின் பெண்களின் சக்தி மகத்தான பங்களிப்பை அளித்திருக்கிறது.  1947-48இல், ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் உருவாக்கப்பட்ட போது, அந்தப் பிரகடனத்தில் All Men are created equal, அதாவது அனைத்து ஆண்களும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று எழுதப்பட்டிருந்தது.  ஆனால் பாரத நாட்டின் ஒரு பிரதிநிதி இதற்குத் தனது ஆட்சேபத்தைத் தெரிவித்த பிறகு, உலகளாவிய பிரகடனத்தில் அந்த வாக்கியம் மாற்றியமைக்கப்பட்டு, All Human Beings are created equal, அதாவது அனைத்து மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று திருத்தப்பட்டது.  இந்த விஷயம் பாரத நாட்டின் பழமையான பாலின சமத்துவத்திற்கு இசைவான ஒன்றாகும்.  அந்தப் பிரதிநிதியின் பெயர் ஹன்ஸா மெஹ்தாவாகும்; இவர் காரணமாகத் தான் இது சாத்தியமானது.  இதே சந்தர்ப்பத்தில், மேலும் ஒரு பிரதிநிதியான திருமதி லக்ஷ்மி மேனன் அவர்களும், பாலின சமத்துவம் குறித்து வலுவான முறையிலே தனது தரப்பை முன்வைத்தார்.  இது மட்டுமல்ல 1953ஆம் ஆண்டிலே திருமதி விஜயலக்ஷ்மி பண்டிட், ஐ.நா. பொதுசபையின் முதல் பெண் தலைவராகவும் ஆனார்.

        நண்பர்களே, நாம் எத்தகைய பூமியைச் சேர்ந்தவர்கள் தெரியுமா?

ॐ द्यौ: शान्तिरन्तरिक्षॅं शान्ति:,
पृथ्वी शान्तिराप: शान्तिरोषधय: शान्ति:।
वनस्पतय: शान्तिर्विश्र्वे देवा: शान्तिर्ब्रह्म शान्ति:,
सर्वॅंशान्ति:, शान्तिरेव शान्ति:, सा मा शान्तिरेधि।।
ॐ शान्ति: शान्ति: शान्ति:।।

ஓம் த்யௌ: சாந்திரந்தரிக்ஷம் சாந்தி:

ப்ருத்வீ சாந்திராப: சாந்திரோஷதய: சாந்தி:.

வனஸ்பதய: சாந்திர்விச்ரவே தேவா: சாந்திர்ப்ரும்ம சாந்தி:,

ஸர்வேசாந்தி:, சாந்திரேவ சாந்தி:, ஸா மா சாந்திரேதி.

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:.

இப்படிப்பட்ட நம்பிக்கை உடையவர்கள், இந்த வகையில் பிரார்த்தனை செய்யும் பூமியைச் சேர்ந்தவர்கள்.  பாரதம் என்றுமே உலக அமைதிக்காகவே பணியாற்றி வந்திருக்கிறது.  1950 தஸாப்தம் தொடங்கி, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளில் பாரதம் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது என்பது நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயம்.  ஏழ்மையை அகற்றவும், சூழல் மாற்றம் மற்றும் தொழிலாளர்களோடு தொடர்புடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படுத்துவதிலும், பாரதம் முன்னணிப் பங்கினை ஆற்றி வந்திருக்கிறது.  இவை தவிர, யோகக்கலை மற்றும் ஆயுஷினை பிரபலமாக்கவும் பாரதம் உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றி வருகிறது.  மார்ச் மாதம் 2021ஆம் ஆண்டிலே, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிவிப்பு என்னவென்றால், பாரத நாட்டின் பாரம்பரியமான சிகிச்சை முறைகளுக்கென ஒரு உலகளாவிய மையத்தை நிறுவத் தீர்மானித்திருக்கிறது என்பது தான்.

        நண்பர்களே, ஐக்கிய நாடுகள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையிலே எனக்கு அடல் அவர்களின் சொற்கள் நினைவிற்கு வருகின்றன.  1977ஆம் ஆண்டிலே, அவர் ஐக்கிய நாடுகளில் ஹிந்தி மொழியில் உரை நிகழ்த்தி வரலாறு படைத்தார்.  இன்று மனதின் குரல் நேயர்களுக்கு அடல் அவர்களின் இந்த உரையின் ஒரு சிறு பகுதியை ஒலிக்க விழைகிறேன்.  கேளுங்கள், அடல் அவர்களின் உத்வேகமளிக்கும் குரலிலே,

”இங்கே நான் நாடுகளின் அதிகாரம் மற்றும் மாட்சிமை பற்றி எண்ணமிடவில்லை.  எளிய மனிதனின் கண்ணியம் மற்றும் முன்னேற்றம் மட்டுமே என்னைப் பொறுத்த மட்டிலே அதிக மகத்துவம் வாய்ந்தது.  நிறைவாக, நமது வெற்றிகளும் தோல்விகளும் ஒரே அளவுகோல் கொண்டே அளக்கப்பட வேண்டும், உண்மையிலேயே, ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், சிறுவர் சிறுமியருக்கும், ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும், நீதியும் கண்ணியமும் கிடைப்பது உறுதி செய்யப்படுவதில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்”.

நண்பர்களே, அடல் அவர்களின் இந்தச் சொற்கள், இன்றும் கூட நமக்குப் பாதையைக் காட்டுகிறது.  இந்த பூமியை மேலும் சிறப்பானதாக, மேலும் பாதுகாப்பானதாக ஆக்க பாரத நாட்டின் பங்களிப்பு, உலகம் முழுவதற்கும் மிகப்பெரிய உத்வேகம் அளிக்கிறது.

        எனதருமை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாகத் தான் அக்டோபர் மாதம் 21ஆம் தேதியன்று நாம் காவலர் நினைவு தினத்தைக் கடைப்பிடித்தோம்.  காவலர்களின் எந்த சகாக்கள் நாட்டுப் பணியில் தங்களுடைய உயிரை அர்ப்பணித்திருக்கிறார்களோ, இந்த நாளன்று நாம் அவர்களை சிறப்பான வகையிலே நினைவில் கொள்கிறோம்.  இன்று நான் நம்முடைய இந்தக் காவலர்களோடு கூடவே, அவர்களின் குடும்பத்தாரையும் நினைவிலே கொள்ள விழைகிறேன்.  குடும்பத்தின் ஒத்துழைப்பும் தியாகமும் இல்லாமல், காவல்துறைப்பணி போன்ற சிரமமான சேவை புரிவது என்பது மிகவும் கடினமானது.  காவல்துறை சேவையில் இணைந்திருக்கும் மேலும் ஒரு விஷயம் குறித்து நான் மனதின் குரல் நேயர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  இராணுவம் மற்றும் காவல்துறை போன்ற சேவைகள் ஆண்களுக்கானவை என்ற கருத்து முன்பெல்லாம் நிலவியிருந்தது.  ஆனால், இன்றோ அப்படி அல்ல.  காவல்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணியகத்தின் புள்ளிவிவரப்படி, கடந்த சில ஆண்டுகளில் பெண் காவலர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது.  2014ஆம் ஆண்டு இவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஐந்தாயிரமாக கிட்டத்தட்ட இருந்த நிலையில் 2020ஆம் ஆண்டு வரை இது இரண்டு பங்கிற்கும் அதிகமாகி, கணிசமாக அதிகரித்திருக்கிறது, இப்பொழுது இரண்டு இலட்சத்து பதினையாயிரத்தை எட்டியிருக்கிறது. எந்த அளவுக்கு என்றால் மத்திய ஆயுதமேந்திய காவல் படையினரிடத்திலும் கூட, கடந்த ஏழு ஆண்டுகளில் பெண்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி இருக்கிறது.  மேலும் நான் வெறும் எண்ணிக்கை பற்றி மட்டுமே பேசவில்லை.  இன்று தேசத்தின் பெண்கள் மிகவும் கடினமான பணிகளையும் முழுச்சக்தியோடும், தன்னம்பிக்கையோடும் புரிந்து வருகிறார்கள்.  எடுத்துக்காட்டாக, பல பெண்கள் இப்போது மிகவும் கடினமானதாகக் கருதப்படும் பயிற்சிகளில் ஒன்றான, சிறப்புத்திறன் கொண்ட வனப்போர்ப்பயிற்சிக் கமாண்டோக்களுக்கான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.  இவர்கள் நம்முடைய கோப்ரா படைப்பிரிவின் அங்கத்தினர்களாக ஆவார்கள்.

        நண்பர்களே, இன்று நாம் விமானநிலையங்களுக்குச் செல்கிறோம், மெட்ரோ நிலையங்களுக்குச் செல்கிறோம், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் துணிச்சலான பெண்கள், புரிதல் தேவையான ஒவ்வொரு இடத்திற்கும் பாதுகாப்பளித்து வருகிறார்கள். இதன் மிக ஆக்கப்பூர்வமான தாக்கம், நமது காவல்துறையோடு கூடவே, சமூகத்தின் மனோபலத்தின் மீதும் ஏற்பட்டு வருகிறது.  பெண் பாதுகாப்புப் பணியாளர்கள் இருப்பதால், மக்களிடத்தில், குறிப்பாகப் பெண்களிடத்தில் இயல்பானதொரு நம்பிக்கை பிறக்கிறது.  தங்களில் ஒருவராக அவர்களைப் பெண்கள் பார்க்கிறார்கள்.  பெண்களின் புரிந்துணர்வு காரணத்தால், மக்கள் அவர்கள் மீது அதிக நம்பிக்கை கொள்கிறார்கள்.  நமது இந்த பெண் காவலர்கள், தேசத்தின் இலட்சக்கணக்கான பெண்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக உருவாகி வருகிறார்கள்.  நான் பெண் காவலர்களிடத்திலே விடுக்கும் வேண்டுகோள், பள்ளிகள் திறந்த பிறகு தங்களின் பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு அவர்கள் சென்று, பெண் குழந்தைகளோடு உரையாட வேண்டும் என்பது தான்.  இந்த உரையாடல் காரணமாக நமது புதிய தலைமுறையினருக்குப் புதிய பாதை திறக்கும் என்பது எனது நம்பிக்கை.  இனிவருங்காலத்தில், மேலும் அதிக எண்ணிக்கையில் பெண் காவலர்கள் காவல்துறைப் பணியில் தங்களை இணைத்துக் கொள்வார்கள், நமது தேசத்தின் புதுயுக காவல் பணிக்குத் தலைமை ஏற்பார்கள் என்று விழைகிறேன்.

        என் மனம் நிறை நாட்டுமக்களே, கடந்த சில ஆண்டுகளில், நமது தேசத்தில் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு எந்த வேகத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றால், இது குறித்து நான் மனதின் குரலில் பேச வேண்டும் என்று நேயர்கள் அடிக்கடி கேட்டுக் கொள்கிறார்கள்.  இன்று நான் பகிரவிருக்கும் இந்த விஷயம், நமது தேசம், குறிப்பாக நமது இளைஞர்கள், நமது சிறார்கள் வரை அனைவரின் கற்பனைகளில் படர்ந்திருக்கும் ஒன்று.  அது தான் ட்ரோன், ட்ரோன் தொழில்நுட்பம் பற்றியது.  சில ஆண்டுகள் முன்பு வரை, ட்ரோன் என்ற சொல் காதிலே விழுந்தவுடன், மக்களின் மனதில் முதலில் எழும் உணர்வு என்ன?  இராணுவம், ஆயுதங்கள், போர் பற்றியது தான்.  ஆனால் இன்று நமது பல திருமணங்கள், பல விழாக்களில் நாம் ட்ரோன் வாயிலாக படம் பிடிப்பதை, காணொளிகளைப் பதிவு செய்வதைப் பார்க்க முடிகிறது. ட்ரோனின் பயணம், அதன் சக்தி, இந்த மட்டோடு நின்று விடவில்லை.  நமது கிராமங்களின் நிலப்பரப்பை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் தயாரிப்புப் பணிகளில் ட்ரோன்களை ஈடுபடுத்தும் உலகின் முன்னோடி நாடுகளில் ஒன்றாக பாரதம் இன்று ஆகி வருகிறது.  சரக்குப் போக்குவரத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்துவது குறித்து பரவலான வகையிலே பணிகள் நடைபெற்று வருகின்றன.  கிராமங்களின் விவசாயத்திற்காகட்டும், வீட்டிற்குப் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதாகட்டும், பேரிடர்க்காலங்களில் உதவிகளைக் கொண்டு சேர்ப்பதாகட்டும், சட்டம் ஒழுங்கைக் கண்காணிப்பதாகட்டும்.  ட்ரோன்கள் நமது அனைத்துத் தேவைகளுக்கும் தயாராக வந்து நிற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.  இவற்றிலே பல துறைகளில் தொடக்கம் செய்யப்பட்டாகி விட்டது.  எடுத்துக்காட்டாக, சில நாட்கள் முன்பாக, குஜராத்தின் பாவ்நகரில் ட்ரோன்கள் வாயிலாக வயல்களில் நேனோ யூரியா தெளிக்கப்பட்டது.  கோவிட் தடுப்பூசி இயக்கத்திலும் கூட ட்ரோன்கள் தங்களுடைய பங்களிப்பை அளித்தன.  இதை நாம் மணிப்பூரிலே பார்க்க முடிந்தது.  ஒரு தீவிற்கு அங்கே ட்ரோன் வாயிலாக தடுப்பூசி கொண்டு சேர்க்கப்பட்டது.  தெலங்கானாவிலே ட்ரோன்கள் வாயிலாகத் தடுப்பூசிகள் கொண்டு சேர்க்கும் சோதனை ஓட்டங்கள் முடிந்தாகி விட்டன.  இது மட்டுமல்ல, இப்போது கட்டமைப்பின் பல பெரிய திட்டங்களின் மீது கண்காணிப்பு செய்ய வேண்டியும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  நான் ஒரு இளம் மாணவனைப் பற்றியும் படித்திருக்கிறேன்; இவர் தனது ட்ரோன் உதவியோடு, மீனவர்களின் உயிர்களைக் காக்கும் பணியைச் செய்திருக்கிறார். 

நண்பர்களே, முன்பெல்லாம் இந்தத் துறையில் ஏகப்பட்ட விதிமுறைகள், சட்டங்கள், கட்டுப்பாடுகள் எல்லாம் போடப்பட்டு, ட்ரோன்களின் மெய்யான திறமை சாத்தியமாகாமலேயே இருந்தன.  எந்தத் தொழில்நுட்பத்தை நல்லதொரு சந்தர்ப்பமாக நாம் காண வேண்டுமோ, அது சங்கடமாகப் பார்க்கத் தொடங்கப்பட்டது.  ஏதோ ஒரு வேலைக்கு நீங்கள் ட்ரோன்களைப் பறக்க விரும்பினால், இதற்கு உரிமம் மற்றும் அனுமதி என்ற முறையில் இருந்த கட்டுப்பாடுகளைக் கண்டு மக்கள் அந்தத் திசைக்கே ஒரு கும்பிடு போட்டார்கள்.  இந்த மனோநிலையை மாற்ற வேண்டும், புதிய போக்குகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம்.  ஆகையால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதியன்று தேசத்தின் ஒரு புதிய ட்ரோன் கொள்கையை அறிமுகப்படுத்தினோம்.  இந்தக் கொள்கை, ட்ரோன்களோடு தொடர்புடைய தற்போதைய மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கிறது.  இதற்காக இப்போது பல படிவங்களை நிரப்ப வேண்டிய அவசியமில்லை, முன்பிருந்ததைப் போல அதிக கட்டணத்தைச் செலுத்தவும் தேவையில்லை. இந்தப் புதிய ட்ரோன் கொள்கை வந்த பிறகு பல ட்ரோன் ஸ்டார்ட் அப்புகளில், அயல்நாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள்.  பல நிறுவனங்கள் உற்பத்தி அலகுகளையும் ஏற்படுத்தி வருகின்றன.  தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படைகள், பாரத நாட்டு ட்ரோன் நிறுவனங்களுக்கு 500 கோடிக்கும் அதிகமான தேவை ஆணைகளை வழங்கியிருக்கின்றன.  இது ஒரு தொடக்கம் தான்.  நாம் இங்கே தாமதப்பட்டு விடக் கூடாது.  ட்ரோன் தொழில்நுட்பத்தின் முன்னணி நாடாக நாம் மாற வேண்டும்.  இதற்காக அரசும் சாத்தியமான அனைத்து முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டு வருகிறது.  ட்ரோன் கொள்கை ஏற்படுத்தப்பட்ட பிறகு உருவாகியிருக்கும் சந்தர்ப்பங்களால் பயனடைவது பற்றிக் கண்டிப்பாக நீங்கள் சிந்தியுங்கள், முன்வாருங்கள் என்று நான் நாட்டின் இளைஞர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, உத்தர பிரதேசத்தின் மேரட்டைச் சேர்ந்த மனதின் குரலின் நேயர் ஒருவரான திருமதி பிரபா சுக்லா அவர்கள், தூய்மை இயக்கம் தொடர்பான கடிதம் ஒன்றினை எனக்கு எழுதியிருக்கிறார்.  அதிலே, “பாரத நாட்டிலே நாம் பண்டிகைகளின் போது தூய்மையைக் கொண்டாடுகிறோம்.  இதைப் போலவே நாம் தூய்மையை, ஒவ்வொரு நாளும் நமது பழக்கமாகவே ஆக்கிக் கொண்டோமென்றால், நாடு முழுவதுமே தூய்மையாகி விடும்” என்று எழுதியிருக்கிறார்.  பிரபா அவர்களின் இந்தக் கருத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.  உண்மையிலேயே, எங்கே தூய்மை இருக்கிறதோ, அங்கே தான் உடல்நலமும் இருக்கிறது, எங்கே உடல் நலம் இருக்கிறதோ, அங்கே தான் வல்லமை இருக்கிறது, எங்கே வல்லமை இருக்கிறதோ, அங்கே தான் நிறைவு இருக்கிறது.  ஆகையால் தானே தூய்மை பாரதம் இயக்கத்தின் மீது தேசம் அதிக அழுத்தம் அளித்து வருகிறது.

நண்பர்களே, ராஞ்சியின் ஒரு கிராமமான சபாரோம் நயா சராய் பற்றித் தெரிந்து கொள்ளும் போது இதமாக இருந்தது.  இந்த கிராமத்திலே ஒரு குளம் இருந்தது.  மக்கள் இந்தக் குளக்கரையிலே திறந்த வெளியிலே மலஜலம் கழித்துக் கொண்டிருந்தார்கள். தூய்மை பாரதம் இயக்கத்தின்படி, அனைவருடைய இல்லங்களிலும் கழிப்பறைகள் கட்டப்பட்ட பிறகு, ஏன் நாம் கிராமத்தைத் தூய்மைப்படுத்துவதோடு கூடவே அழகானதாகவும் ஆக்கக் கூடாது என்று கிராமவாசிகள் சிந்தித்தார்கள்.  அப்புறமென்ன! அனைவருமாக இணைந்து குளக்கரைப் பகுதியில் ஒரு பூங்காவை அமைத்தார்கள்.  இன்று இந்த இடம் மக்களுக்கான, குழந்தைகளுக்கான ஒரு பொதுவிடமாகி விட்டது.  இதனால் கிராமம் முழுவதன் வாழ்க்கையிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டுப் போனது.  மேலும் நான் சத்தீஸ்கட்டின் தேவூர் கிராமத்துப் பெண்கள் பற்றியும் கூற விரும்புகிறேன்.  இங்கே இருக்கும் பெண்கள் ஒரு சுயவுதவிக் குழுவை நிர்வகித்து வருகிறார்கள், அனைவரும் இணைந்து கிராமத்தின் தெருமுனை சந்திப்புகளில், சாலைகளில், கோயில்களில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

நண்பர்களே, உத்தர பிரதேசத்தின் காஜியாபாதைச் சேர்ந்த ராம்வீர் தன்வர் அவர்களை மக்கள் குள மனிதன் என்றே பெயரிட்டு அழைக்கிறார்கள்.  ராம்வீர் அவர்கள் இயந்திரவியல் படிப்பு படித்த பிறகு வேலை பார்த்து வந்தார். ஆனால் அவருடைய மனதிலே தூய்மை சுடர் விடத் தொடங்கியது, தனது வேலையைத் துறந்து குளங்களைத் தூய்மை செய்யும் பணியிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.  ராம்வீர் அவர்கள் இப்போது வரை, ஏகப்பட்ட குளங்களைத் துப்புரவு செய்து, அவற்றை மீளுயிர்ப்பித்திருக்கிறார்.

swach bharath abiyan arts

நண்பர்களே, தூய்மை தொடர்பான முயற்சிகள் எப்போது முழுமையாக வெற்றி பெறும் என்று சொன்னால், இதோடு கூட குடிமகன் ஒவ்வொருவரும் தனது பொறுப்பினை உணரும் போது தான்.  இப்போது தீபாவளியின் போது நாம் நமது இல்லங்களைத் தூய்மையாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்போம்.   ஆனால் இந்த வேளையில், நமது வீட்டுடன் கூடவே நமது அக்கம்பக்கமும் தூய்மையாக, துப்புரவாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனத்தைச் செலுத்த வேண்டும். நமது வீடு தூய்மையாக இருந்தால் மட்டும் போதாது, நமது வீட்டுக் குப்பைகளை நமது வீட்டிற்கு வெளியே, தெருக்களில் போட்டு விடக் கூடாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  தூய்மை பற்றிப் பேசும் நேரத்தில், தயவு செய்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களை நாம் ஒரேடியாக விட்டொழிப்பதையும் மறந்து விடக் கூடாது.  வாருங்கள், தூய்மை பாரதம் இயக்கத்தின் உற்சாகத்தை குறைய விட மாட்டோம் என்று நாம் உறுதியேற்போம். நாமனைவருமாக இணைந்து நமது நாட்டை முழுமையான வகையிலே தூய்மையானதாக மாற்றுவோம், தூய்மையாக வைத்திருப்போம்.

        எனதருமை நாட்டுமக்களே, அக்டோபர் மாதம் முழுவதும் பண்டிகைகளால் அலங்கரிக்கபடுகிறது, சில நாட்கள் கழித்து தீபாவளியும் வரவிருக்கிறது. தீபாவளிக்குப் பிறகு கோவர்த்தன் பூஜை, பிறகு பாயி தூஜ். இந்த மூன்று பண்டிகைகளோடு கூடவே சட் பூஜையும் வரவிருக்கிறது.  நவம்பரில் தான் குருநானக் தேவின் பிறந்த நாளும் வருகிறது.  இத்தனை பண்டிகைகள் ஒருசேர வரும் வேளையில் இவற்றுக்கான தயாரிப்பு ஏற்பாடுகள் முன்பேயே தொடங்கப்பட்டு விடும்.  இப்போதிலிருந்தே நீங்கள் பொருட்களை வாங்கும் திட்டமிடலில் ஈடுபட்டிருப்பீர்கள் என்றாலும், உங்களுக்கு எல்லாம் நினைவிருக்கிறது இல்லையா!!  வாங்குவது என்றால், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம், VOCAL FOR LOCAL.  நீங்கள் உள்ளூர் பொருட்களை வாங்கினால், உங்களுடைய பண்டிகைகளும் பிரகாசிக்கும், ஒரு ஏழை சகோதர சகோதரி, ஒரு கைவினைஞர், ஒரு நெசவாளியின் வீட்டிலேயும் பிரகாசம் ஒளிகூட்டும்.  இந்த இலக்கை நாம் அனைவருமாக இணைந்து தொடங்கினோம், இந்த முறை பண்டிகைகளின் போது இதற்கு மேலும் வலுகூட்டப்படும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.  நீங்கள் உங்கள் பகுதிகளில் இருக்கும் உள்ளூர் பொருட்களை வாங்குங்கள், இவற்றைப் பற்றி சமூக ஊடகங்களில் பகிரவும் செய்யுங்கள்.  உங்களுடன் இருப்போருக்கும் இதுபற்றிச் சொல்லுங்கள்.  அடுத்த மாதம் நாம் மீண்டும் சந்திப்போம், இதைப் போலவே ஏராளமான விஷயங்கள் குறித்து அலசுவோம்.

உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள்.  வணக்கம்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version