― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாபிர்ஸா முண்டா பிறந்த தினம்; பழங்குடியின மக்கள் கௌரவ தினம்: பிரதமர் உரையின் முழு வடிவம்!

பிர்ஸா முண்டா பிறந்த தினம்; பழங்குடியின மக்கள் கௌரவ தினம்: பிரதமர் உரையின் முழு வடிவம்!

- Advertisement -
janjadhiyo gaurav diwas

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஜனஜாதியோ கௌரவ் திவஸ் – பழங்குடியின மக்கள் கௌரவ தினம் – நிகழ்ச்சியில் பிரதமர் மோதி ஆற்றிய உரையின் முழு வடிவம் …
ஒலிபரப்பு: சென்னை வானொலி

தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்

जोहार मध्यप्रदेश ! राम राम सेवा जोहार ! मोर सगा जनजाति बहिन भाई ला स्वागत जोहार करता हूँ। हुं तमारो सुवागत करूं। तमुम् सम किकम छो? माल्थन आप सबान सी मिलिन,बड़ी खुशी हुई रयली ह। आप सबान थन, फिर सी राम राम ।

ஜோஹார் மத்தியபிரதேஷ் ! ராம் ராம் சேவா ஜோஹார் ! மோர் சகா ஜன் ஜாதி பாயி லா ஸ்வாகத் ஜோஹார் கர்தா ஹூன். ஹுன் தமாரோ சுவாகத் கரூன். தமும் ஸம் கிகம் ச்சோ? மால்தன் ஆப் ஸபான் சீ மிலின், படீ குஷீ ஹுயீ ரயலீ ஹ. ஆப் ஸபான் த்தன், ஃபிர் ஸீ ராம் ராம்.

மத்திய பிரதேசத்தின் ஆளுநர் மங்கூபாய் படேல் அவர்கள், தனது வாழ்க்கை முழுவதையும் பழங்குடியின மக்களின் நலனுக்காகவே அர்ப்பணித்தவர். இவர் தனது வாழ்க்கை முழுவதையும் பழங்குடியின மக்களின் நல்வாழ்விற்காக, சமூக அமைப்பு வாயிலாக, அரசின் அமைச்சராக அர்ப்பணித்து, பழங்குடியினத்தவரின் சேவகனாக வாழ்ந்தவர். எனக்கு மேலும் பெருமிதம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் மத்திய பிரதேசத்தின் முதல் பழங்குடியின ஆளுநர், இதற்கான முழுமையான கௌரவமும் மங்கூபாய் படேல் அவர்களையே சாரும்.
 
மேடையில் வீற்றிருக்கும் மத்திய பிரதேசத்தின் முதலமைச்சர், ஷிவ்ராஜ் சிங் சௌஹான் அவர்களே, மத்திய அமைச்சரவையில் என் சகாவான நரேந்திர சிங் தோமர் அவர்களே, ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, வீரேந்திர குமார் அவர்களே, பிரஹலாத் படேல் அவர்களே, ஃபக்கன் சிங் குலஸ்தே அவர்களே, எல். முருகன் அவர்களே, அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்றத்தின் என் சகாக்களான உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, மத்திய பிரதேசத்தின் பல்வேறு மூலைகளிலிருந்தும் நம்மனைவருக்கும் ஆசிகள் வழங்கிக் கொண்டிருக்கும் பழங்குடியின சமூகத்தின் எனது சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் பக்வான் பிர்ஸா முண்டாவின் பிறந்த நாளன்று பலப்பல நல்வாழ்த்துக்கள்.

இன்றைய நாளானது நாடு முழுவதற்கும், பழங்குடியின சமூகத்தவர் அனைவருக்கும் மிகப்பெரிய நாளாகும். இன்று பாரதம், தனது முதல் பழங்குடியின கௌரவ நாளைக் கொண்டாடி வருகிறது. சுதந்திரம் அடைந்த பிறகு தேசத்தில் முதன்முறையாக இத்தனை பெரிய அளவிலே, ஒட்டுமொத்த தேசத்தின் பழங்குடியின சமூகத்தின் கலை-கலாச்சாரம், சுதந்திரப் போராட்டத்திலும் தேச உருவாக்கத்திலும் அவர்களின் பங்களிப்பிற்கு, மரியாதை அளிக்கப்படுகிறது.

சுதந்திரத்தின் அமிர்த மஹோத்ஸவத்தின் இந்த புதிய உறுதிப்பாட்டிற்காக, நான் நாடு முழுமைக்கும் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இன்று இங்கே மத்திய பிரதேசத்தின் பழங்குடியின சமூகத்திற்கும் என் நன்றிகளை வெளிப்படுத்துகிறேன். கடந்த பல ஆண்டுகளாக, தொடர்ந்து உங்களுடைய நேசமும், நம்பிக்கையும் கிடைத்து வந்திருக்கிறது. உங்களுடைய இந்த அன்பு தான் உங்களுக்கு சேவை புரிய இரவு பகலாகப் பணியாற்றும் சக்தியை எங்களுக்கு அளிக்கின்றது.

நண்பர்களே, இதே சேவையுணர்வு காரணமாகவே இன்று பழங்குடியின சமூகத்திற்காக சிவ்ராஜ் அவர்களின் அரசு பல பெரிய திட்டங்களைத் தொடங்கி இருக்கின்றது. மேலும் இன்று நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே என்னுடைய பழங்குடியின சமுதாயத்தின் அனைத்து மக்களும் பல்வேறு மேடைகளில் பாடல்களோடு, கொண்டாட்ட உணர்வோடு தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அந்தப் பாடல்களைப் புரிந்து கொள்ள நான் முயன்றேன். ஏனென்றால், வாழ்க்கையில் ஒரு மகத்துவம் நிறைந்த காலகட்டத்தை நான் பழங்குடியினத்தவரோடு கழித்தேன் என்ற எனது அனுபவம் காரணமாக அவர்களுடைய ஒவ்வொரு விஷயத்திலும் ஏதோ ஒரு தத்துவ ஞானம் இருப்பதை நான் கவனித்திருக்கிறேன்.

வாழ்க்கையின் நோக்கத்தை, பழங்குடியினத்தவர்கள் தங்களுடைய ஆடல் நடனங்களில், தங்களுடைய பாடல்களில், தங்களுடைய பாரம்பரியங்களில் மிக நேர்த்தியாக வழங்குகிறார்கள். மேலும் ஒரு விஷயம், இன்றைய இந்தப் பாடலிடத்திலே என்னுடைய கவனம் ஈர்க்கப்படுவதும் கூட இயல்பான ஒன்று தான். பாடலின் பதங்களை நான் நுணுக்கமாக கவனித்த போது, பாடலை என்னால் பாட முடியாது, ஆனால் நீங்கள் பாடிய பாடலில், நாடு முழுவதிலும் இருக்கும் மக்களுக்கு உங்களின் ஒவ்வொரு சொல்லும் வாழ்க்கைக்கான காரணம், வாழ்வதற்கான நோக்கம், வாழ்க்கையை வாழ்வதற்காக மிகச் சிறப்பாக அளிக்கின்றது.

நீங்கள் உங்களுடைய நடனத்தின் வாயிலாக, உங்கள் பாடலின் வாயிலாக இன்று அளித்திருப்பதன் சாராம்சம் – உடல் 4 நாட்களுக்கானது, இறுதியில் அது மண்ணில் கலந்து விடும். உணவு பானம் நன்றாக கொண்டோம், பகவானின் பெயரை மறந்து விட்டோம். இந்த பழங்குடியின மக்கள் நமக்கு என்ன கூறுகிறார்கள் பாருங்கள்!!

உண்மையிலேயே இவர்கள் தாம் படித்தவர்கள், நாம் கற்க வேண்டியது இன்னும் இருக்கிறது. மேலும் என்ன கூறுகிறார்கள் – கேளிக்கை கொண்டாட்டங்களில் வயது வீணானது, வாழ்க்கை வெற்றி அடையவில்லை. நமது வாழ்க்கையில் நிறைய போராடினோம், வீட்டில் நிறைய பிள்ளைகள் பெற்றோம். அந்திமக் காலம் வந்த போது, கழிவிரக்கம் கொள்வது வீணான ஒன்று. நிலம், வயல்கள் எல்லாம் யாருக்கும் சொந்தம் அல்ல – பாருங்கள், பழங்குடியினத்தவர் நமக்கு என்ன கற்பிக்கிறார்கள்!!

pm modi in madhyapradesh

நிலம், வயல்வெளிகள் எல்லாம் யாருக்கும் சொந்தம் அல்ல, உங்கள் மனக் கற்பனை வீணானது. இந்த ஆஸ்தி பாஸ்தி எல்லாம் பயனில்லாதவை, இதை இங்கே விடுத்தே செல்ல வேண்டும். நீங்கள் கவனியுங்கள் – இந்த இசையிலே, இந்த நடனத்திலே இருக்கும் சொற்களில் கூறப்பட்டவை, இந்த உத்தமமான தத்துவ ஞானத்தை, காடுகளில் வாழ்க்கையைக் கழிக்கும் என்னுடைய பழங்குடியின சகோதர சகோதரிகள் இயல்பாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இதை விடப் பெரிய பலம் தேசத்திற்கு என்ன இருக்க முடியும்!! இதை விடப் பெரிய மரபு தேசத்திற்கு என்ன இருக்க முடியும்! இதை விட பெரிய மூலதனம் தேசத்திற்கு என்ன இருக்க முடியும்!

நண்பர்களே, இதே சேவை உணர்வு காரணமாகவே இன்று பழங்குடியின சமூகத்திற்காக சிவ்ராஜ் அவர்களின் அரசு, பல பெரிய திட்டங்களைத் தொடக்கி இருக்கிறது. அது ரேஷன் உங்கள் கிராமத் திட்டமாக இருக்கட்டும், அல்லது மத்திய பிரதேசத்தின் Sickle Cell இயக்கமாகட்டும், இந்த இரண்டு திட்டங்களும் பழங்குடியின சமூகத்திலே உடல்நலம் மற்றும் ஊட்டச் சத்தினை மேலும் சிறப்பாக்குவதில் முக்கியமான பங்களிப்பை அளிக்கும்.

எனக்கு மேலும் நிறைவளிக்கும் விஷயம், பிரதம மந்திரி ஏழைகள் நலன் உணவுப்பொருள் திட்டப்படி, இலவசமாக ரேஷன் பொருட்கள் கிடைத்ததால், கொரோனா காலகட்டத்தில் பழங்குடியினக் குடும்பங்களுக்கு இத்தனை பெரிய உதவி கிடைத்திருக்கிறது. இப்போது கிராமங்களில் உங்கள் வீடுகளுக்கு அருகிலேயே விலை மலிவான ரேஷன் பொருட்கள் கிடைப்பதோடு, உங்களுடைய நேரமும் மிச்சப்பட்டு, தேவையில்லாத செலவிலிருந்தும் உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.

ஆயுஷ்மான் பாரதம் திட்டத்தால் முதலிலேயே பல நோய்களிலிருந்து இலவச சிகிச்சை பழங்குடியின சமூகத்திற்கு கிடைத்து வருகிறது, தேசத்தின் ஏழைகளுக்குக் கிடைத்து வருகிறது. மத்திய பிரதேசத்தின் பழங்குடியின குடும்பங்களுக்கு விரைவாக இலவச தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. உலகின் மெத்தப் படித்த நாடுகளிலும் கூட தடுப்பூசி போடுதல் விஷ்யத்தில் பிரச்னைகள் இருப்பது பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் என்னுடைய பழங்குடியின சகோதர சகோதரிகள் தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டும் இருக்கிறார்கள், ஏற்றுக் கொண்டுமிருக்கின்றார்கள், தேசத்தைக் காக்க தங்களுடைய பங்களிப்பை அளித்தும் வருகிறார்கள்! இதை விடப் பெரிய புரிதல் வேறென்ன இருக்க முடியும்.

100 ஆண்டுகளில் வந்திருக்கும் இந்த மிகப் பெரிய பெருந் தொற்றோடு உலகம் அனைத்தும் போராடி வருகிறது. இந்த மிகப் பெரிய பெருந்தொற்றை எதிர்கொள்ள பழங்குடியின சமூகத்தின் அனைத்து நண்பர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருவது என்பது உள்ளபடியே கௌரவம் அளிக்கும் விஷயம். படித்தவர்கள் வாழும் நகரங்களில் வசிப்போர் கூட என்னுடைய இந்த பழங்குடியின சகோதரர்களிடமிருந்து நிறைய கற்க முடியும்.

pm modi in mp janjadhiya gaurav diwas2

நண்பர்களே, இன்று இங்கே போபால் வருவதற்கு முன்பாக நான் ராஞ்சியில் பகவான் பிர்ஸா முண்டா சுதந்திரப் போராட்ட வீரர் அருங்காட்சியகத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கும் பேறு கிட்டியது. சுதந்திரப் போராட்டத்திலே பழங்குடியின நாயகர்கள்-நாயகிகளின் வீரம்நிறை கதைகளை தேசத்தின் முன் வைப்பது, இவற்றை புதிய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவது என்பது நம்மனைவரின் கடமையாகும். அடிமைத்தளைக் காலத்திலே, அந்நிய ஆட்சிக்கு எதிராக காஸீ-காரோ போராட்டம், மிஸோ போராட்டம், கோல் போராட்டம் உட்பட பல போராட்டங்கள் வெடித்தன. கோண்ட் மஹாரானீ வீர் துர்க்காவதியின் தீரமாகட்டும், அல்லது ராணி கமலாபதியின் உயிர்த் தியாகமாகட்டும், தேசத்தால் இவற்றை எப்படி மறக்க முடியும்!

வீரன் மஹாராணா பிரதாப்பின் போர் பற்றி நாம், இந்த சாகஸமான ‘பீல்’களை விடுத்து நினைத்துப் பார்க்கவே முடியாது. இவர்கள் தாம் தோளோடு தோள் நின்று ராணா பிரதாபோடு போர்க்களத்திலே தங்கள் உயிரை பலி கொடுத்தார்கள். நாமனைவரும் இவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறோம். இவர்களிடத்திலே நாம் பட்ட கடனை நம்மால் திருப்பிச் செலுத்தவே முடியாது என்றாலும், இந்த மரபினைப் பாதுகாத்து, இதற்கு உகந்த இடமளித்து, நம்முடைய பொறுப்பினைக் கண்டிப்பாக நம்மால் நிறைவேற்ற முடியும்.

சகோதர சகோதரிகளே, இன்று நான் நமது பாரம்பரியத்தைப் பாதுகாப்பது பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, தேசத்தின் பிரபலமான வரலாற்றியலாளர் ஷிவ் ஷாஹீர் பாபாசாஹேப் புரந்தரே அவர்களையும் நினைவில் கொள்ள விரும்புகிறேன். இன்று காலையில் தான் எனக்குத் தெரிய வந்தது, அவர் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து மறைந்து விட்டார் என்ற செய்தி.

பத்ம விபூஷன் பாபா சாஹேப் புரந்தரே அவர்கள் சத்திரபதி ஷிவாஜி மஹராஜ் அவர்களின் வாழ்க்கையை, அவருடைய வரலாற்றை சாமானியர்கள் வரை கொண்டு செல்வதில் அளித்திருக்கும் பங்களிப்பு விலைமதிப்பற்றது. இந்த மாநில அரசு அவருக்கு காளிதாஸ் விருதும் அளித்து கௌரவித்திருக்கிறது. சத்ரபதி ஷிவாஜி மஹராஜின் எந்த கொள்கைகளை பாபாசாஹெப் புரந்தரே அவர்கள் தேசத்தின் முன்பாக வெளிச்சம் போட்டுக் காட்டினார்களோ, அந்தக் கொள்கைகள் நமக்கெல்லாம் நிரந்தரமாக கருத்தூக்கம் அளித்து வரும். நான் பாபாசாஹேப் புரந்தரே அவர்களுக்கு என்னுடைய உணர்வுபூர்வமான நினைவாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

நண்பர்களே, நாம் தேசிய அளவில், தேச நிர்மாணத்தில் பழங்குடியின சமூகத்தின் பங்களிப்பு பற்றிப் பேசும் போது, சிலருக்கு சற்று ஆச்சரியமாகவும் இருக்கும். பாரத நாட்டின் கலாச்சாரத்தை பலப்படுத்துவதில் பழங்குடியின சமூகத்திற்கு எத்தனை பெரிய பங்களிப்பு இருந்திருக்கிறது என்பது இப்படிப்பட்ட நபர்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை. இதற்கு என்ன காரணமென்றால், பழங்குடியின சமூகத்தவரின் பங்களிப்பு பற்றி தேசத்திற்கு உரைக்கப்படவே இல்லை, இருட்டடிப்பு செய்ய முழுமுயற்சி மேற்கொள்ளப்பட்டது, அப்படியே கூறப்பட்டாலும், மிகவும் குறுகிய அளவிலே தான் தகவல்கள் அளிக்கப்பட்டன.

ஏன் இப்படி செய்யப்பட்டதென்றால், சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்கள் வரை, யார் நாட்டை ஆட்சி புரிந்தார்களோ, அவர்கள் தங்களுடைய சுயநலம் நிறைந்த அரசியலுக்கே முதன்மை அளித்தார்கள். தேசத்தின் மக்கட்தொகையின் கிட்ட த்தட்ட 10 சதவீதம் இருப்பதையும் தாண்டி, பழங்குடியின சமூகத்தை பல தசாப்தங்களுக்கு, அவர்களின் கலாச்சாரம், அவர்களின் திறமைகள் ஆகியவற்றை முழுமையாக புறக்கணிப்பு செய்யப்பட்டது. பழங்குடியினத்தவர்களின் துக்கம், அவர்களின் கஷ்டங்கள், குழந்தைகளின் கல்வி, பழங்குடியினத்தவரின் உடல்நலம், இவையெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை.

நண்பர்களே, பாரதநாட்டின் கலாச்சாரப் பயணத்தில் பழங்குடியின சமூகத்தின் பங்களிப்பு இணைபிரியாத அங்கமாகவே இருந்திருக்கிறது. நீங்களே சொல்லுங்கள், பழங்குடியின சமூகத்தின் பங்களிப்பு இல்லாதிருந்தால், அண்ணல் இராமனுடைய வாழ்க்கையிலே வெற்றிகளைக் கற்பனை செய்து பார்த்திருக்க முடியுமா சொல்லுங்கள்? கண்டிப்பாக இல்லை. பழங்குடினத்த்வரோடு கழித்த காலம் தான் ஒரு அரசகுமாரனை அண்ணலாக மாற்றும் முக்கியமான பங்களிப்பை அளித்தது. வனவாசத்தின் அதே காலகட்டத்தில் அண்ணல் இராமபிரான், பழங்குடியின சமூகத்தின் பாரம்பரியம், பழக்க வழக்கங்கள், அவர்களின் வாழ்க்கை பற்றிய வழிமுறைகள் என வாழ்க்கையின் அனைத்துக் கோணங்களிலிருந்தும் உத்வேகம் அடைந்தார்.

நண்பர்களே, பழங்குடியின சமூகத்திற்கு உகந்த மகத்துவத்தை அளிக்காமல், முதன்மை அளிக்காமல், முந்தைய அரசுகள் செய்த குற்றத்தை, மீண்டும் மீண்டும் உரைக்க வேண்டியது அவசியமானது. ஒவ்வொரு மேடையிலும் விவாதப் பொருளாக்க வேண்டியது அவசியமானது. பல தசாப்தங்கள் முன்பாக நான் குஜராத்திலே எனது பொதுவாழ்க்கையைத் தொடங்கிய போது, அப்போது முதல் பார்த்து வருகிறேன், எப்படி தேசத்தின் சில அரசியல் கட்சிகள் வசதி வாய்ப்புகள், வளர்ச்சியின் அனைத்து சாதனங்களும் கிடைக்கவொட்டாமல், பழங்குடியினத்தவரை வஞ்சித்திருக்கிறார்கள் என்பதை. பற்றாக்குறையை ஏற்படுத்தியே வைப்பார்கள், தேர்தல் காலங்களில் இந்தப் பற்றாக்குறைகளை நிறைவேற்றும் பெயரிலே, மீண்டும் மீண்டும் வாக்கு சேகரிப்பார்கள், அதிகாரத்தைக் கைப்பற்றுவார்கள்.

ஆனால் இந்த பழங்குடியின சமூகத்திற்கு என்ன செய்யப் பட்டிருக்க வேண்டுமோ, எத்தனை செய்யப்பட்டிருக்க வேண்டுமோ, எப்போது செய்யப்பட்டிருக்க வேண்டுமோ, அது செய்யப்படவே இல்லை. சமூகத்தை நிராதரவாகத் தவிக்க விட்டார்கள். குஜராத்தின் முதல்வராக ஆன பிறகு நான் அங்கே இருக்கும் பழங்குடியின சமூகத்தவரின் நிலைமைகளை மாற்ற பல இயக்கங்களை தொடங்கினேன். தேசம் 2014ஆம் ஆண்டிலே சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த போது, பழங்குடியின சமூகத்தவரின் நலன்களை எனது ஆகச்சிறந்த முதன்மையாகக் கொண்டேன்.

சகோதர சகோதரிகளே, இன்று சரியான அளவிலே பழங்குடியின சமூகத்தின் அனைத்து நண்பர்களுக்கும், தேசத்தின் வளர்ச்சியிலே உசிதமான பங்கும், உரிமையும் அளிக்கப்பட்டு வருகிறது. இன்று ஏழைகளுக்கு வீடுகளாகட்டும், கழிப்பறைகளாகட்டும், இலவச மின்சாரம் மற்றும் எரிவாயுவாகட்டும், பள்ளிகளாகட்டும், சாலைகளாகட்டும், இலவச சிகிச்சையாகட்டும், அனைத்தும் எந்த விரைவில் தேசத்தின் பிற பாகங்களுக்குச் சென்றடைகிறதோ, அதே வேகத்தில் தான் பழங்குடியினப் பகுதிகளையும் சென்று சேர்க்கப்பட்டு வருகிறது.

தேசத்தின் பிற பாகங்களின் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளிலே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் நேரடியாகச் சென்று சேரும் போது, பழங்குடியினப் பகுதிகளில் இருக்கும் விவசாயிகளுக்கும் அதே நேரத்தில் கிடைத்து வருகிறது. இன்று தேசத்தின் கோடானுகோடி குடும்பங்களுக்கு சுத்தமான நீர், குழாய் வழியே வீடுகள் தோறும் கொண்டு சேர்க்கப்பட்டு வரும் போது, இதே விருப்ப ஆற்றலின் துணையோடு, அதே வேகத்தில் பழங்குடியினக் குடும்பங்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணி விரைவு கதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இல்லையென்றால் இத்தனை ஆண்டுகளாக பழங்குடியினப் பகுதிகளைச் சேர்ந்த சகோதரிகள் தாய்மார்கள், நீருக்காக எத்தனை சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்பதை, என்னை விட உங்களுக்குத் தான் நன்கு தெரிந்திருக்கும்.

ஜல் ஜீவன் இயக்கத்தின்படி, மத்திய பிரதேசத்தின் ஊரகப் பகுதிகளில் 30 இலட்சம் குடும்பங்களுக்கு இப்போது குழாய்வழி நீர் கிடைப்பது தொடங்கி விட்டது என்பது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. மேலும் இதிலே பெரும்பாலானோர் நமது பழங்குடியினப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

நண்பர்களே, பழங்குடியின முன்னேற்றம் பற்றிப் பேசும் அதே வேளையில், ஒரு விஷயத்தை என்னால் சொல்லாமல் இருக்க இயலவில்லை. ஒன்று கூறப்படுவதுண்டு, பழங்குடியினப் பகுதி புவியியல் ரீதியாக மிகவும் கடினமான ஒன்று. இங்கே வசதிகளைக் கொண்டு சேர்ப்பது சிரமமான ஒன்று என்றும் கூறப்படுவதுண்டு. இந்த சாக்கு, வேலை செய்யாமல் இருக்க சொல்லப்படுவது. இதே சாக்குப் போக்கைக் கூறி பழங்குடியின சமூகத்திற்கு வசதி வாய்ப்புகளுக்கான முதன்மை அளிக்கப்பட்டதே கிடையாது. அவர்களின் தலைவிதிப்படி அவர்கள் விடப்பட்டார்கள்.

நண்பர்களே, இப்படிப்பட்ட அரசியல், இப்படிப்பட்ட எண்ணம் காரணமாக பழங்குடியினர் பெரும்பான்மையாக இருக்கும் மாவட்டங்களுக்கு வளர்ச்சியின் அடிப்படை வசதிகள் கூட வஞ்சிக்கப்பட்டது. எந்த இடங்களிலே முன்னேற்றத்திற்கான முயல்வுகள் நடந்திருக்க வேண்டுமோ, இந்த மாவட்டங்களுக்குப் பின்தங்கிய மாவட்டங்கள் என்ற முத்திரையும் குத்தப்பட்டது.

சகோதர சகோதரிகளே, எந்த மாநிலமாகட்டும், எந்த மாவட்டமாகட்டும், எந்த மனிதனாகட்டும், எந்த சமூகமாகட்டும், வளர்ச்சிப் பயணத்தில் பின்தங்க விரும்புவதில்லை. ஒவ்வொருவரும், ஒவ்வொரு சமூகமும் எதிர்பார்ப்பு உடையது, அவர்களுக்கென்று கனவுகள் உண்டு. பல ஆண்டுகள் வஞ்சிக்கப்பட்ட இதே கனவுகள், இதே அபிலாஷைகளுக்கு சிறகு கட்டும் முயல்வினை இன்று நம்முடைய அரசு முதன்மையாகக் கொண்டிருக்கிறது.

உங்களுடைய ஆசிகளால், இன்று அப்படிப்பட்ட 100க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் முன்னேற்றத்தின் அபிலாஷைகள் நிறைவு செய்யப்பட்டு வருகின்றன. இன்று எத்தனை மக்கள்நலத் திட்டங்களை மத்திய அரசு உருவாக்கி வருகின்றதோ, அவற்றில் பழங்குடியின சமூகத்தவர் பெரும்பான்மையாக இருக்கும், அபிலாஷைகள் கொண்ட மாவட்டங்களுக்கு முதன்மை அளிக்கப்பட்டு வருகின்றது. அபிலாஷைகளுடைய மாவட்டங்கள் அல்லது இப்படிப்பட்ட மாவட்டங்கள், எங்கே மருத்துவமனைகள் இல்லாமை உள்ளதோ, அங்கே 150ற்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டாகி விட்டது.

நண்பர்களே, தேசத்தின் பழங்குடியினப் பகுதிகளில், ஆதாரங்கள் என்ற முறையில், இயற்கை வளங்கள் விஷயத்தில் எப்போதுமே வளமானவையாக இருந்துள்ளன. ஆனால் முந்தைய அரசுகள், இந்தப் பகுதிகளிடத்திடம் சுரண்டும் கொள்கையையே கடைப்பிடித்தது. நாம் இந்தப் பகுதிகளின் வல்லமையை சரியான முறையிலே பயன்படுத்தும் கொள்கையை மேற்கொண்டிருக் கிறோம். இன்று எந்த மாவட்டத்திலிருந்து தேச நலனுக்காக இயற்கை வளங்கள் எடுக்கப்படுகிறதோ, அதன் ஒரு பங்கு, அதே மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ஈடுபடுத்தவும் படுகிறாது. மாவட்ட கனிம நிதியின்படி, மாநிலங்களுக்கு கிட்டத்தட்ட 50,000 கோடி ரூபாய் கிடைத்திருக்கின்றது. இன்று உங்களுடைய வளங்கள், உங்களுக்குப் பயனாகின்றன, உங்களுடைய குழந்தைகளுக்குப் பயனாகின்றன. இப்போது சுரங்கத் தொழிலோடு தொடர்புடைய கொள்கைகளிலும் கூட, நாங்கள் செய்திருக்கும் மாற்றத்தால், பழங்குடியினப் பகுதிகளிலேயே வேலைவாய்ப்பிற்கான பரவலான வாய்ப்புகள் ஏற்படும்.

சகோதர சகோதரிகளே, சுதந்திரத்தின் அமிர்த காலம், தற்சார்பு பாரதத்தை நிர்மாணம் செய்யும் காலமாகும். பாரத த்தின் தற்சார்பு, பழங்குடியினத்தவரின் பங்களிப்பு இல்லாமல் சாத்தியமே கிடையாது. நீங்களே கவனித்திருக்கலாம், இப்போது, பத்ம விருதுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. பழங்குடியின சமூகத்திலிருந்து வருபவர்கள், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரும் போது, கால்களில் காலணி கூட இருக்கவில்லை, உலகமனைத்தும் இதைப் பார்த்து திகைத்துப் போனது, ஆச்சரியத்தில் ஆழந்தது. பழங்குடியினத்தவரும், ஊரகப் பகுதியில் வேலை செய்யும் மக்களும் தான் தேசத்தின் மெய்யான நாயகர்கள். இவர்கள் தான் நமது வைரங்கள், இவர்கள் தாம் நமது நாயகர்கள்.

சகோதர சகோதரிகளே, பழங்குடியின சமூகத்தின் திறன்களில் என்றைக்கும் எந்தக் குறைவும் இருந்தது இல்லை. ஆனால் துர்பாக்கியமாக, முந்தைய அரசுகளில், பழங்குடியின சமூகத்திற்கு வாய்ப்புகள் அளிக்க எந்த அரசியல் விருப்ப ஆற்றல் தேவையோ, அது குறைவாக இருந்தது, இல்லாமலே கூட இருந்தது. படைப்பாற்றல் என்பது பழங்குடியினத்தவர் பாரம்பரியத்தின் ஒரு அங்கம், நான் இங்கே வருமுன்னே, அனைத்து பழங்குடியினப் பெண்கள் கைகளால் உருவாக்கப்பட்டிருந்த பொருட்களைப் பார்த்த போது, உண்மையிலேயே என் மனதில் ஆனந்தம் மேலிட்டது. அவர்களின் கைவிரல்களிலே தான் எத்தனை சக்தி இருக்கிறது!!

படைப்புத்திறன் என்பது பழங்குடியினத்தவரின் பாரம்பரியத்தின் ஓர் அங்கம், ஆனால் பழங்குடி இனத்தவரின் படைப்புகள் சந்தைகளோடு இணைக்கப்பட்டதில்லை. மூங்கில் சாகுபடி போன்ற மிகச் சிறிய விஷயம் கூட, சட்டங்களின் வலைப் பின்னலில் சிக்க வைக்கப்பட்டிருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? மூங்கிலை வளர்த்து, அதனை சாகுபடி செய்து, அதை விற்று கொஞ்சம் வருமானம் பார்க்கக் கூட நமது பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு உரிமை இல்லையா? நாங்கள் வனச் சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தி, இந்த எண்ணப்பாட்டையே மாற்றி விட்டோம்.

நண்பர்களே, பல தசாப்தங்களாக எந்த சமூகத்தை, அதன் சின்னச்சின்னத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள நீண்ட காத்திருப்புக்கு உட்படுத்தப்பட்டதோ, அது புறக்கணிக்கப் பட்டதோ, இப்போது அந்த சமூகத்தை தற்சார்பு உடையதாக ஆக்க, தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மரம் மற்றும் கல்லிலே கைவினைப் பொருட்களைச் செய்வது என்பதை பழங்குடி சமூகம் பல நூற்றாண்டுகளாகவே செய்து வந்தாலும் இப்போது இவர்களால் தயாரிக்கப்படும் பொருட்களுக்குப் புதிய சந்தை அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகிறது. ட்ரைஃபெட் இணைய முகப்பு மூலமாக, பழங்குடியினக் கலைஞர்களின் உற்பத்திப் பொருட்கள், தேசம் மற்றும் உலகின் சந்தைகளில் இணையவழியில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எந்த கரடுமுரடான தானியம் ஒரு காலத்தில் இழிவானதாக கருதப்பட்டதோ, அதுவே இன்று பாரத நாட்டின் ப்ராண்டாக ஆகி வருகிறது.

நண்பர்களே, வனவளத் திட்டமாகட்டும், வன உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்குக் கொள்முதல் செய்வதாகட்டும், அல்லது சகோதரிகளின் கூட்டுசக்திக்குப் புதிய ஆற்றலளிப்பதாகட்டும், இந்த பழங்குடியினப் பகுதிகளில் கற்பனை செய்ய முடியாத சந்தர்ப்பங்களை உருவாக்கி அளிக்கின்றார்கள். முந்தைய அரசுகள் வெறும் 8-10 வன உற்பத்திப் பொருட்களை மட்டும் குறைந்தபட்ச ஆதார விலைக்குக் கொள்முதல் செய்தன. இன்று நம்முடைய அரசு, கிட்ட த்தட்ட 90 வன உற்பத்திப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையளிக்கின்றது. எங்கே 9-10, எங்கே 90? நாங்கள் 2500க்கும் அதிகமான வனவள வளர்ச்சி மையங்களை 37,000த்திற்கும் அதிகமான வனவள சுயவுதவிக் குழுக்களோடு இணைத்திருக்கிறோம். இதோடு இன்று சுமார் 7 ½ இலட்சம் நண்பர்கள் இணைந்திருக்கிறார்கள், இவர்களுக்கு வேலைவாய்ப்பும், சுயவேலைவாய்ப்பும் கிடைத்து வருகின்றது. நம்முடைய அரசு, வனங்களின் நிலத்தைப் பொறுத்த வரையில், புரிந்துணர்வோடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலங்களில் சுமார் 20 இலட்சம் நிலங்களுக்குப் பட்டா அளித்து, நாங்கள் இலட்சக்கணக்கான பழங்குடியின நண்பர்களின் மிகப்பெரிய கவலையைப் போக்கியிருக்கிறோம்.

சகோதர சகோதரிகளே, நம்முடைய அரசாங்கம், பழங்குடியின இளைஞர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றது. ஏகலவ்ய மாதிரி இருப்புப் பள்ளிகள் இன்று பழங்குடியினப் பகுதிகளில் கல்விக்குப் புதிய ஒளியை ஏற்றி வருகின்றன. இன்று இங்கே 50 ஏகலவ்ய மாதிரி இருப்புப் பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. எங்களுடைய இலக்கு, தேசம் முழுவதிலும், இப்படிப்பட்ட சுமார் 700 பள்ளிகளைத் திறப்பது தான். இவற்றில் பல ஏகலவ்ய பள்ளிகள் ஏற்கனவே திறக்கப் பட்டாகி விட்டன. 7 ஆண்டுகள் முன்பாக, ஒவ்வொரு மாணவன் மீதும் அரசாங்கம் கிட்டத்தட்ட 40000 ரூபாய் செலவு செய்து வந்தது, அது இன்று அதிகரித்து, ஒரு இலட்சம் ரூபாயை விட அதிகமாகி இருக்கின்றது. இதனால் பழங்குடியின மாணவ மாணவியருக்கு, மேலும் அதிகமான வசதிகள் கிடைத்து வருகின்றன. மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 இலட்சம் பழங்குடியின இளைஞர்களுக்குக் கல்வியூக்கத் தொகையும் வழங்கி வருகின்றது.

பழங்குடியின இளைஞர்களை, உயர்கல்வி மற்றும் ஆய்வோடு இணைக்கவும் வரலாறு காணாத பணிகள் புரியப்பட்டு வருகின்றன. சுதந்திரம் அடைந்த பிறகு வெறும் 18 பழங்குடியின ஆய்வுக் கழகங்களே உருவாக்கப்பட்டிருந்தன; ஆனால் இதுவே வெறும் 7 ஆண்டுகளில் மேலும் 9 புதிய கழகங்கள் நிறுவப்பட்டாகி விட்டன.

நண்பர்களே, பழங்குடியின சமூகப் பிள்ளைகளுக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய சிக்கல், படிக்கும் காலத்தில் மொழி ஏற்படுத்தும் பிரச்சனை. இப்போது தேசிய கல்விக் கொள்கையில் வட்டார மொழியில் படிப்புத் தொடர்பாக பெரிய அழுத்தம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனாலும் ஆதாயம் பழங்குடியின சமூகப் பிள்ளைகளுக்குக் கிடைப்பது உறுதி.

சகோதர சகோதரிகளே, பழங்குடியின சமூகத்தின் முயற்சிகள், அனைவரின் முயற்சி மட்டுமே, சுதந்திரத்தின் அமிர்தகாலத்தில் பலமான பாரதத்தின் நிர்மாணத்திற்கான சக்தியாகும். பழங்குடியின சமூகத்தின் சுயமரியாதையின் பொருட்டு, தன்னம்பிக்கையின் பொருட்டு, உரிமைகளின் பொருட்டு, நாங்கள் இரவுபகலாக பாடுபடுவோம், இன்று பழங்குடி இனத்தவரின் கௌரவ தினத்தன்று, நாமனைவரும் இந்த உறுதிப்பாட்டை மீண்டும் உரைக்க வேண்டும். மேலும் இந்த பழங்குடியினத்தவரின் கௌரவ தினத்தை, நாம் காந்தியடிகளின் பிறந்த நாளைக் கொண்டாடுவதைப் போலவே, நாம் சர்தார் படேலின் பிறந்த நாளைக் கொண்டாடுவதைப் போலவே, நாம் பாபாசாஹேப் அம்பேட்கரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதைப் போலவே, பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் மாதம் 15ஆம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும், பழங்குடியின மக்களின் கௌரவ தினம் என்ற வகையிலே நாடு முழுவதிலும் கொண்டாட வேண்டும்.

ஒரு முறை மீண்டும் உங்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்கள். என்னோடு இணைந்து இரு கரங்களையும் மேலே உயர்த்தி, முழுச்சக்தியோடு கூறுங்கள் –

பாரத் மாதா கீ ஜய்! भारत माता की जय ! भारत माता की जय ! பலப்பல நன்றிகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version