― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாதேவ் தீபாவளி: குருநானக் பிறந்த நாளில் 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் (மோடி உரை)

தேவ் தீபாவளி: குருநானக் பிறந்த நாளில் 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் (மோடி உரை)

modiji dev deepavali wishes
- Advertisement -

குருநானக் தேவ் பிறந்த நாளில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் முழு வடிவம்!
ஒலிபரப்பு: வானொலி நிலையம், சென்னை
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். இன்று, தேவ் தீபாவளி என்ற பவித்திரமான நாள். இன்று, குருநானக் தேவ்ஜி அவர்களுடைய, பவித்திரமான பிறந்தநாளும் ஆகும். நான் உலகம் எங்கிலும், இருக்கும் மக்கள் அனைவருக்கும், மேலும் நாட்டுமக்கள் அனைவருக்கும், இந்த பவித்திரமான நன்னாளன்று, என் மனம்நிறை வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். மேலும் ஒரு நிறைவான விஷயம் என்னவென்றால், ஒண்ணரை ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, கர்த்தார்புர் சாஹிப் இடைவழி, இப்போது மீண்டும் திறக்கப்பட்டு விட்டது.

நண்பர்களே, குருநானக் அவர்கள் கூறியிருக்கிறார் – பீச்சு துனியா, சேவி கமாயியே, த தர்குஹி பேசனு பாயியே. அதாவது, உலகத்திலே சேவை மார்க்கத்தினைப் பின்பற்றுவதன் மூலமாகவே, வாழ்க்கை வெற்றி அடையும்.

நம்முடைய அரசாங்கம், இந்த சேவை மனப்பான்மையோடு தான், நாட்டுமக்களுடைய வாழ்க்கையை, எளிதாக்குவதில் முனைந்திருக்கிறது. எத்தனையோ தலைமுறைகள், எந்தக் கனவுகளை நனவாக்கிக் காண வேண்டும் என்று விரும்பியனவோ, பாரதம், இன்று அந்தக் கனவுகளை, நிறைவேற்றி வைக்கும் முழுமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நண்பர்களே, என்னுடைய 5 தசாப்தங்கள் அடங்கிய பொதுவாழ்க்கையிலே, நான் விவசாயிகளுடைய சிரமங்களை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை, மிகவும் நெருக்கமான முறையிலே பார்த்திருக்கிறேன். உணர்ந்திருக்கிறேன். ஆகையினாலே, தேசம் என்னிடத்திலே, 2014ஆம் ஆண்டிலே, பிரதம மந்திரி என்ற வகையிலே, சேவை செய்யும் வாய்ப்பளித்த போது, அப்போது நாங்கள் விவசாய முன்னேற்றம், மற்றும் விவசாயிகள் நலனுக்கு, அதிகபட்ச முதன்மை அளித்தோம்.

dev deepavali

நண்பர்களே, ஒரு உண்மை பற்றி பல பேருக்குத் தெரியாது. அதாவது, தேசத்தின், நூற்றில் 80 விவசாயிகள், சிறுகுறு விவசாயிகள். அவர்களிடத்திலே, இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலமே உள்ளது. உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இந்தச் சின்ன விவசாயிகளுடைய எண்ணிக்கை, பத்து கோடிக்கும் அதிகமாக உள்ளது. அவர்களுடைய வாழ்க்கை முழுவதினுடைய ஆதாரமும், இந்தச் சின்னஞ்சிறு துண்டு நிலம் தான். இது தான் அவருடைய வாழ்க்கை அனைத்துமே. மேலும், இந்தச் சின்ன நிலத்தின் துணையோடு தான், அவர் தன்னுடைய, மற்றும் தன்னுடைய குடும்பத்தின் வயிற்றைக் கழுவ வேண்டியிருக்கிறது. தலைமுறை தலைமுறையாக, குடும்பங்களில் பாகப்பிரிவினை காரணமாக, இந்த நிலம் மேலும் சிறுத்துக் கொண்டே வருகிறது.

ஆகையினாலே, தேசத்தின் சிறுவிவசாயிகள் சந்திக்கும் சவால்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டி, நாங்கள், விதை, காப்பீடு, சந்தை, மற்றும் சேமிப்பு. இவை அனைத்து தொடர்பாகவும், அனைத்துக் கோணங்களிலும் பணியாற்றியிருக்கிறோம். நம்முடைய அரசாங்கம், நல்ல தரமுள்ள விதைகளோடு கூடவே, விவசாயிகளை, வேப்பெண்ணை பூசப்பட்ட யூரியா, நிலவள அட்டை, நுண்ணீர்பாசனம் போன்ற வசதிகளோடு கூட இணைத்தது. நாங்கள் 22 கோடி நிலவள அட்டைகளை, விவசாயிகளுக்கு அளித்திருக்கிறோம். மேலும், இந்த விஞ்ஞானபூர்வமான இயக்கம் காரணமாக, விவசாய உற்பத்தியும் அதிகரித்தது.

நண்பர்களே, நாங்கள் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை, மேலும் அதிக திறன்மிக்கதாக ஆக்கினோம். இதன் வரையறைக்குள், அதிக அளவு விவசாயிகளைக் கொண்டு வந்தோம். பேரிடர்க்காலங்களிலே, அதிக அளவிலான விவசாயிகளுக்கு, எளிதான முறையிலே இழப்பீடு கிடைக்கும் வகையிலே, இதன் பொருட்டும் கூட, பழைய விதிமுறைகள் மாற்றப்பட்டன. இதன் காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளிலே, ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பீடு, நம்முடைய விவசாய சகோதர சகோதரிகளுக்குக் கிடைத்திருக்கின்றது. நாம் சிறுகுறு விவசாயிகள், மற்றும் வயல்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் வரை, காப்பீடு, மற்றும் ஓய்வூதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். சிறுகுறு விவசாயிகளின் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, நேரடியாகவே, அவர்களின் வங்கிக் கணக்குகளிலே, ஒரு இலட்சத்து அறுபத்தி இரண்டு ஆயிரக் கோடி ரூபாயை, அளித்து விட்டோம். நேரடியாக அவர்களுடைய கணக்குகளிலே.

நண்பர்களே, விவசாயிகள் அளிக்கும் உழைப்பிற்கு பதிலாக, விளைச்சலுக்கான சரியான விலை கிடைக்க வேண்டும், இதற்காகவும் கூட, பல முனைவுகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. நம்முடைய தேசம், தனது ஊரகப்பகுதி சந்தைப்படுத்தல் கட்டமைப்பை வலுப்படுத்தியது. நாங்கள் அடிப்படை ஆதார விலையை அதிகரித்தோம், கூடவே, சாதனையளவுக்கு அரசு கொள்முதல் மையங்களையும் உருவாக்கினோம். எங்களுடைய அரசாங்கம் வாயிலாக, புரியப்பட்ட விளைபொருள் கொள்முதல், கடந்த பல தசாப்தங்களின் பதிவுகளையும் முறியடித்து விட்டது.

தேசத்தின் ஓராயிரத்திற்கும் மேற்பட்ட சந்தைகளை, ஈ நாம் திட்டத்தோடு இணைத்து, நாங்கள் விவசாயிகளை, எந்த இடத்திலும், தங்கள் மகசூலை விற்பனை செய்யக்கூடிய, ஒரு தளம் அளித்தோம். மேலும் இதோடு கூடவே, தேசமெங்கும் இருக்கும் விவசாய சந்தைகளின் நவீனமயமாக்கல் தொடர்பாகவும், நாங்கள் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்திருக்கிறோம்.

நண்பர்களே, இன்று மத்திய அரசின் விவசாயத்துறை பட்ஜெட், முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில், ஐந்து மடங்கு அதிகரித்திருக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும், ஒண்ணேகால் இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட, தொகை விவசாயம் மீது செலவிடப்படுகிறது. ஒரு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான விவசாய கட்டமைப்பு நிதி வாயிலாக, கிராமங்கள் மற்றும் வயல்களுக்கு அருகே, சேமிப்புக் கிடங்குகள், இவற்றின் அமைப்பு, விவசாயக் கருவிகள் போன்ற பல வசதிகளின் விரிவாக்கம், இந்த அனைத்து விஷங்களும், விரைவாக நடந்தேறி வருகின்றன. சிறுகுறு விவசாயிகளின் சக்தியை அதிகரிக்க வேண்டி, பத்தாயிரம், எஃப்பிஓக்கள், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் அமைக்கும் இயக்கமும் நடைபெறுகிறது. இதன் மீதும் கிட்டத்தட்ட, ஏழாயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு வருகிறது.

நுண்ணீர் பாசனத்திற்கான நிதி ஒதுக்கீடும் கூட, இரண்டு மடங்காக்கப்பட்டு, பத்தாயிரம் கோடி ரூபாயாக ஆக்கப்பட்டிருக்கின்றது. நாங்கள் பயிர்க்கடனையும் கூட, இரண்டு மடங்காக்கி இருக்கின்றோம். ஆக இந்த ஆண்டு, இது 16 இலட்சம் கோடி ரூபாயாகி விடும்.

இப்போது கால்நடை வளர்ப்பாளர்களுக்கு, மீன்வளர்ப்போடு தொடர்புடைய, நம்முடைய விவசாயிகளுக்கும் கூட, விவசாயிகள் கடன் அட்டையினால் ஆதாயம் கிடைப்பது……. தொடங்கப் பட்டாகி விட்டது. அதாவது, நம்முடைய அரசாங்கம், விவசாயிகளின் நலன்களுக்காக, சாத்தியமான அனைத்து, மேற்கொண்டு வருகிறது, தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக முயல்வுகளை மேற்கொண்டு வருகின்றது. விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்பட வேண்டும், அவர்களின் சமூகநிலை பலமானதாக வேண்டும், இதற்காக வேண்டி, முழு நேர்மையோடு அரசு பணியாற்றி வருகின்றது.

நண்பர்களே, விவசாயிகளின் நிலையை மேம்படுத்துவதற்கான, இந்தப் பேரியக்கத்திலே, தேசத்திலே, மூன்று விவசாயச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நோக்கம் என்னவென்றால், தேசத்தின் விவசாயிகளுக்கு, குறிப்பாக சிறுகுறு விவசாயிகளுக்கு, மேலும் பலம் கிடைக்க வேண்டும். அவர்களுக்கு அவர்களுடைய விளைச்சலுக்கான சரியான விலை, மேலும் மகசூலை விற்பனை செய்ய அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்க வேண்டும், பல ஆண்டுகளாக இந்தக் கோரிக்கை, தேசத்தின் விவசாயிகள், தேசத்தின் விவசாய வல்லுனர்கள், தேசத்தின் விவசாய பொருளாதார நிபுணர்கள், தேசத்தின் விவசாய சங்கங்கள், தொடர்ந்து முன்வைத்து வந்தார்கள். முன்பேயே கூட, பல அரசாங்கங்கள் இவை மீது ஆலோசனை செய்திருக்கின்றார்கள்.

இந்த முறையும் கூட, அவைகளில் விவாதங்கள் நடைபெற்றன, ஆலோசனை செய்யப்பட்டது. அப்புறம் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. தேசத்தின் அனைத்து மூலைகளிலே, கோடானுகோடி விவசாயிகளும், பல விவசாய சங்கங்களும், இதனை வரவேற்றார்கள், ஆதரவு தெரிவித்தார்கள். நான் இன்று, அவர்கள் அனைவருக்கும், மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன் நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

நண்பர்களே, நம்முடைய அரசாங்கம், விவசாயிகளின் நலன்களுக்காக, குறிப்பாக சிறுகுறு விவசாயிகளின் நலன்களுக்காக, தேசத்தின் விவசாயத் துறையின் நலனுக்காக, தேசத்தின் நலனுக்காக, கிராமங்கள் ஏழைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக, முழுமையான நேரிய நோக்கோடு, விவசாயிகளிடத்திலே முழுமையான அர்ப்பணிப்பு உணர்வோடு, நேர்மையான எண்ணத்தோடு, இந்தச் சட்டங்களை அறிமுகப்படுத்தியது.

ஆனால், இத்தனை பவித்திரமான விஷயத்தை, முழுமையான வகையிலே தூய, விவசாயிகளுக்கு நலன்தரு விஷயத்தை, நாங்கள் அனைத்து முயற்சிகளையும் செய்தும், எங்களால் சில விவசாயிகளுக்கு விளங்க வைக்க முடியவில்லை. என்ன தான், விவசாயிகளின் ஒரு பிரிவினர் தான் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்றாலும், இருந்தாலுமே கூட, இதுவும் எங்களுக்கு மகத்துவம் வாய்ந்தது தான். விவசாயத்துறை பொருளியல் நிபுணர்களும், விஞ்ஞான வல்லுனர்களும், முன்னோடு விவசாயிகளும் கூட, அவர்களுக்கு விவசாய சட்டங்களின் மகத்துவத்தை விளங்க வைக்க முழுமையாக முயன்றார்கள்.

நாங்கள் முழுமையான விநயத்தோடு, திறந்த மனத்தோடு, அவர்களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருந்தோம். பல வழிகளிலும் கூட, தனிப்பட்ட மற்றும் சமூக அளவில், பேச்சு வார்த்தை தொடர்ந்து நடந்து வந்தது. நாங்கள் விவசாயிகளின் கருத்துக்களை, அவர்களின் வாதங்களை, புரிந்து கொள்ளும் விஷயத்திலும் எந்த முயற்சியையும் விட்டு வைக்கவில்லை.

சட்டத்தின் எந்தப் பிரிவுகளில், அவர்களுக்கு ஆட்சேபம் இருந்ததோ, அரசாங்கம் அவற்றை மாற்றவும்கூட தயாராக இருந்தது. ஈராண்டுகள் வரை நாங்கள்….. இந்தச் சட்டங்களைத் தள்ளி வைக்கும் முன்மொழிவையும் அளித்தோம். இந்த வேளையிலே, இந்தப் பிரச்சனை மதிப்பிற்குரிய உச்சநீதிமன்றத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இந்த அனைத்து விஷயங்களும், தேசத்தின் முன்பாகவே இருக்கின்றது. ஆகையினாலே, இந்த விஷங்கள் குறித்து நான் விரித்துரைக்க விரும்பவில்லை.

நண்பர்களே, நான் இன்று நாட்டுமக்களிடத்திலே மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன், மெய்யான மனத்தோடு, தூய இதயத்தோடு கூற விரும்புகிறேன், ஒரு வேளை, எங்களுடைய அர்ப்பணிப்பிலே தான் ஏதோ குறை இருக்கக் கூடும். இதன் காரணமாகவே, தீபம் போன்று ஒளிரக்கூடிய வாய்மையை, எங்களால் சில விவசாய சகோதரர்களுக்கு விளங்க வைக்க முடியவில்லை. இன்று, குருநானக் தேவ்ஜியுடைய பவித்திரமான பிறந்த நாளாகும்.

இந்த வேளை, யாரையும் குற்றம் கூறக்கூடியது கிடையாது. இன்று நான், உங்களுக்கு, நாடு முழுமைக்கும், என்ன கூற வந்திருக்கிறேன் என்றால், அதாவது நாங்கள், மூன்று விவசாயச் சட்டங்களை, திரும்பப் பெறுவதற்கான Repeal செய்யும் முடிவினை எடுத்திருக்கிறோம். இந்த மாதக் கடைசியிலே, தொடங்கப்படவிருக்கும் கூட்டத்தொடரிலே இதே மாதத்திலே, நாங்கள் மூன்று விவசாயச் சட்டங்களையும், ரிபீல் செய்யும் அரசியல்சட்டபூர்வமான செயல்பாட்டை, நிறைவேற்றுவோம்.

நண்பர்களே, நான் இன்று, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அனைத்து விவசாய சகோதரர்களிடத்திலும் கேட்டுக் கொள்கிறேன், இன்று, குருவினுடைய மிகவும் பவித்திரமான நாள். இப்போது நீங்கள், உங்களுடைய இல்லங்களுக்குத் திரும்புங்கள். உங்கள் வயல்களுக்குச் செல்லுங்கள், உங்கள் குடும்பத்தாரிடம் செல்லுங்கள். வாருங்கள், ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொள்வோம். புதிய முறையிலே முன்னேறிச் செல்வோம்.

நண்பர்களே, இன்று தான், அரசாங்கம் விவசாயத்துறையோடு தொடர்புடைய, ஒரு முக்கியமான முடிவினை மேற்கொண்டிருக் கின்றது. பூஜ்யம் பட்ஜெட் விவசாயம். அதாவது இயற்கைவழி விவசாயத்தை ஊக்கப்படுத்த, தேசத்தின் மாறிவரும் தேவைகளை கவனத்திலே கொண்டு, பயிர்முறைகளை, அறிவியல்ரீதியாக மாற்றியமைக்க, எம் எஸ் பியை, குறைந்தபட்ச ஆதார விலையை, மேலும் வலிமையானதாக ஆக்கவும், வெளிப்படைத்தன்மையுடையதாக ஆக்கவும், இப்படி பல விஷயங்கள் குறித்தும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, முடிவுகளை மேற்கொள்ள, குழு ஒன்று அமைக்கப்பட இருக்கின்றது. இந்தக் குழுவிலே, மத்திய அரசு, மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இருப்பார்கள். விவசாயிகள் இருப்பார்கள், விவசாயத்துறை விஞ்ஞானிகள் இருப்பார்கள், விவசாயத்துறை பொருளாதார நிபுணர்கள் இருப்பார்கள்.

நண்பர்களே, நம்முடைய அரசாங்கம், விவசாயிகளின் நலன்களின் பொருட்டு பணியாற்றி வந்திருக்கிறது, வருங்காலத்திலும் தொடர்ந்து பணியாற்றி வரும். நான் குரு கோவிந்த் சிங்ஜியின் உணர்வோடு, என்னுடைய உரையினை நிறைவு செய்கிறேன். தேஹி சிவா பர மோஹி இஹை, சுப கரமன் தே கபஹூம் ந தரோம். ஹே தேவி, எனக்கொரு வரமளிப்பாய், அதாவது நான், நல்ல செயல்களைச் செய்வதிலிருந்து பின்வாங்கக் கூடாது. எதைச் செய்தோமோ, விவசாயிகளுக்காகவே செய்தோம். எதைச் செய்கிறோமோ, தேசத்திற்காகவே செய்கிறோம். உங்கள் அனைவரின் ஆசிகளோடும், எங்கள் உழைப்பினிலே, முன்பேயும் எந்தக் குறையையும் வைக்கவில்லை.

இன்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன், இனி மேலும் அதிக அளவு உழைப்பேன், அப்போது தான் உங்கள் கனவுகளை நனவாக்க முடியும், தேசத்தின் கனவுகளை மெய்யாக்க இயலும், உங்களுக்குப் பலப்பல நன்றிகள், வணக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version