திருவனந்தபுரம்:
நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதும் கைதாவதும் அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக இன்னொரு சம்பவமாக, நடிகை சனுஷா ஓடும் ரயிலில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிய சம்பவம் திரையுலகத்தினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த நடிகை சனுஷா, வினயன் இயக்கிய நாளை நமதே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.
தமிழில் ரேணிகுண்டா, பீமா, அலெக்ஸ் பாண்டியன், உள்ளிட்ட படங்களில் சனுஷா நடித்துள்ளார். நடிகர் திலீப் கதாநாயகனாக நடித்த மிஸ்டர் மருமகன் என்ற மலையாளப்படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.
இவர் கேரள மாநிலம் கன்னூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது ஓடும் ரயிலில், பக்கத்து பெர்த்தில் படுத்திருந்த இளைஞர் ஒருவர், சனுஷா மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த சனுஷா அவரது கைகளை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டதுடன், டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து அவர் போலீசாரிடம் கூற, விரைந்து வந்த ரயில்வே போலீசார் அந்த இளைஞரைக் கைது செய்து விசாரித்தனர். அதில், அந்த இளைஞர் ஆண்டோ போஸ் என்பதும், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
முன்னதாக, தன்னிடம் ஆபாசமாக பேசியதாக நடிகை அமலாபால் அளித்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் அழகேசன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.