உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த லாரியின் பின்னால் கார் வேகமாக மோதிய விபத்தில் 8பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள மஹ்லா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர், இன்று அதிகாலை காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், சித்தார்த்நகர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்றுக் கொண்டிருந்த லாரியின் பின்னால் கார் வேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது.
இந்த பயங்கர விபத்தில் காரில் இருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீதமுள்ள 3 பேர் படுகாயங்களுடன் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டிச் சென்ற நபர் தூங்கியதே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பிரதமர் நரேந்திர மோடி
இந்த விபத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமும் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.