
ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் 1,48,995 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் கடந்த மார்ச் 29, 2017 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2017 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் வசூலான ஜிஎஸ்டி வருவாய் நிலவரம் குறித்து ஒன்றிய அரசு தகவல் தெரிவித்து வருகிறது. இதன் மூலம் சரக்கு மற்றும் சேவை வரி எவ்வளவு குறைந்துள்ளது அல்லது கூடியுள்ளது என்பது உடனடியாக தெரிய வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் 1,48,995 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாத ஜிஎஸ்டி வரியை விட இந்த ஆண்டு 28 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து கிடைத்த மாத வருவாயில் இது இரண்டாவது அதிக தொகை ஆகும். இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.25,751 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.32,807 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.79,518 கோடி, செஸ் வரி ரூ.10,920 கோடி ஆகும். ஜிஎஸ்டி வசூல் 1.4 லட்சம் தாண்டுவது 6வது முறை. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து 5வது முறையாக ரூ.1.4 லட்சதை தாண்டியுள்ளது. தொடர்ந்து 13 மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.ஒரு லட்சம் கோடியை கடந்துள்ளது. மகராஷ்டிரா மாநிலம் 22,129 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளது.
9,795 கோடி ரூபாயுடன் கர்நாடகா, 2ம் இடத்திலும், 9,183 கோடியுடன் குஜராத் 3ம் இடத்திலும், 8,449 கோடியுடன் தமிழ்நாடு 4ம் இடத்திலும், 7,074 கோடி ரூபாயுடன் உத்தரப் பிரதேசம் 5ம் இடத்திலும், 6,791 கோடி ரூபாயுடன் அரியானா 6ம் இடத்திலும் உள்ளது.