ஊட்டிக்கு சுற்றுலா வந்து கொண்டிருந்த கேரள பள்ளி மாணவர்கள் பயணித்த பேருந்து அரசு பேருந்து மீது மோதிய விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் 42 பேர் மற்றும் 5 ஆசிரியர்கள் புதன் கிழமை இரவு தனியார் சுற்றுலா பேருந்து மூலம் ஊட்டி க்கு சுற்றுலா செல்வதற்காக கிளம்பியுள்ளனர். அப்போது சுமார் 11.30 மணியளவில் சுற்றுலா பேருந்து கேரளாவில் வடக்கஞ்சேரி மங்கலம் அருகே வந்த போது முன்னால் கோவையை நோக்கிச் சென்ற கேரள அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து முன்னால் சென்ற அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் விஷ்னு, மாணவி அஞ்ஞனா அஜீத், இமானுவேல், தியா ராஜேஷ், கிரிஸ் வின்டர்பான் தாமஸ், எல்னா ஜோஸ், அரசு பேருந்தில் சென்ற அனூப், ரோஜித் ராஜ் (24), தீபு ஆகிய 9 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த வடக்கஞ்சேரி போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது படுகாயமடைந்த மாணவர்கள் மற்றும் அரசு பேருந்து பணிகளை திருச்சூர் அரசு மருத்துவமனை, மற்றும் பாலக்காடு, நெம்மாரா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே விபத்தில் சிக்கிய பேருந்தை பொக்லைன் மூலம் தூக்கிய போது பேருந்தின் அடியே ஆசிரியர் மற்றும் இரண்டு மாணவர்கள் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. விபத்தில் உயிரிழந்த 9 பேர் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதல் கட்ட விசாரணையில் சுற்றுலா பேருந்து ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே விபத்துக்கு முக்கிய காரணம் என தெரியவந்ததுள்ளது. இரவு உணவு சாப்பிட்டு விட்டு பேருந்தில் படம் பார்த்துக் கொண்டு உதகை நோக்கி பயணம் சென்ற மாணவர்கள், ஆசிரியர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

