
மத்தியப் பிரதேசத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்தில் 15பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவின் ஹைதராபாத் நகரில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பஹரி பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர். அவர்களில் 20 பேர் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். விபத்து நடந்ததற்கான காரணம் பற்றி விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக ரேவா மாவட்ட எஸ்.பி. நவநீத பாஸின் தெரிவித்துள்ளார். பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விபத்திற்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரணமும் உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.விபத்து நடந்ததற்கான காரணம் பற்றி போலீசார் தீவிர விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.