
தொங்கு பாலம் புனரமைப்பு நிறுவன ஊழியர்கள் உள்பட 9 பேர் கைது
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 141 பேர் பலியான சம்பவத்தில் பாலத்தை புனரமைத்த நிறுவனத்தின் ஊழியர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொங்கு பாலத்தை புனரமைத்து ஒப்பந்தம் செய்த ஒரேவா குழுமத்தில் பணியாற்றி வரும் நடுத்தர ஊழியர்கள் சிலர், பல பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதன் காரணமாகவே இந்த கொடூர விபத்து நிகழ்ந்ததாகக் குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் நடந்த பிறகு, ஒரேவா நிறுவனத்தின் மிக முக்கிய அதிகாரிகள் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த ஒரேவா நிறுவனம், திட்டமிட்டக் காலத்துக்கு முன்பே, பாதுகாப்பு சான்றிதழ்கள் எதையும் பெறாமல் இந்த பாலத்தைத் திறந்திருப்பதாகவும் காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாலத்தை 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் எடுத்திருக்கும் இந்த நிறுவனம், இதனை புனரமைக்க ஆன செலவை, பயணிகளிடமிருந்து கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.
இந்த பாலத்தில் ஒரே நேரத்தில் 150 பேர் வரை மட்டுமே செல்லலாம் என்ற நிலையில், 500 பேர் வரை பாலத்தில் ஏறியதால் இந்த விபத்து நேரிட்டதாகவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த இந்த நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.