அசாம் – மேகாலயா மாநில எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இரு மாநில எல்லையில் உள்ள ஜைன்டியா மலைப்பகுதியில் உள்ள முக்ரோ என்ற இடத்தில் அசாம் வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு காரணமாக பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேகாலயாவில் 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இண்டர்நெட் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களும் 884.9 கி.மீ., தூர எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. அதில் சில இடங்கள் குறித்து இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை உள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னையை தீர்ப்பது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமாண்டா சர்மா மற்றும் மேகாலயா முதல்வர் கன்ராட் சர்மா இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது தொடர்பாக கடந்த ஆக., மாதம் இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பிரச்னைக்குரிய பகுதிகளில் ஒன்றாக துப்பாக்கிச்சூடு நடந்த இடம் உள்ளது.
அந்த பகுதிகளை மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு சிலர் வாகனங்களில் வந்தனர். அப்போது அங்கிருந்த வனத்துறை அதிகாரிகள் வாகனத்தின் டயர்களில் சுட்டனர். அதனால் கோபமடைந்த டிரைவர்கள் அருகில் இருந்த கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
மக்கள் அங்கு குவிந்தனர். இச்சூழ்நிலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். அதில் 4 பேர் சம்பவ இடத்திலேயும், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். அசாம் வனத்துறை அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கன்ராட் சர்மா உடனடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி அளிக்க உத்தரவிட்டதுடன், 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இணைய சேவையை துண்டிக்கவும் கூறியுள்ளார். துப்பாக்கிச்சூடு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
