ஜோஷிமத் விவகாரம் தொடர்பாக பல்வேறு துறையினரும் ஆய்வுகளை நடத்தி வரும் நிலையில், பத்திநாத் தேசிய நெடுஞ்சாலையிலும் விரிசல்கள் ஏற்பட்டிருக்கிறது.
இந்த ஒரே பாதை தான் பத்ரிநாத் மற்றும் மனா பகுதிகளுக்கு செல்லும் வழியாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல், இதுதான் இந்திய – சீன எல்லையோரம் அமைந்திருக்கும் இந்தியாவின் கடைசி கிராமமாகும்.
பத்ரிநாத் நெடுஞ்சாலைகளில் தற்போது விரிசல் ஏற்பட்டிருப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. எனினும், இது மழை மற்றும் பனிக்காலங்களில் வழக்கமாக ஏற்படுவதுதான் என்றும் கூறப்படுகிறது.
சாலையின் நிலப்பரப்பு சற்று தளர்வாக இருப்பதால் இந்த விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் மறுபக்கம், இதுபோன்ற சில அறிகுறிகள் ஜோஷிமத் பகுதியில் சிறிது காலத்துக்கு முன்பு நேரிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் நாள்களில் பனி மற்றும் மழை அதிகரித்தால், இந்த விரிசல்கள் மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பத்ரிநாத் கோயிலுக்கு 25 லட்சம் வாகனங்கள் இந்த சாலையைப் பயன்படுத்துவதாகவும், இது இப்பகுதிக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.