
உடல் நலத்துடன் தொடர்புடைய யோகக் கலை, சிறுதானியங்கள்
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, யோகக்கலை தினத்திற்கும், நம்முடைய பலவகையான சிறுதானியங்களுக்கும் இடையே பொதுவான விஷயம் என்னவென்று நான் உங்களிடம் கேட்டால், இவற்றுக்கிடையே என்ன ஒப்புமை காண முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்? இரண்டுக்கும் இடையே கணிசமான பொதுவான கூறுகள் உண்டு என்று நான் கூறுவேன் என்றால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். உள்ளபடியே ஐக்கிய நாடுகள் சபையானது சர்வதேச யோகக்கலை தினத்தையும், சர்வதேச சிறுதானிய ஆண்டினையும் பற்றிய தீர்மானத்தை, பாரதம் முன்மொழிந்ததை ஒட்டியே மேற்கொண்டது.
இரண்டாவதாக, யோகக்கலையும் உடல்நலத்தோடு தொடர்புடையது, சிறுதானியங்களும் உடல்நலத்துக்கு மகத்துவமான பங்களிப்பை அளிப்பது. மூன்றாவதாக, மகத்துவம் வாய்ந்த விஷயம் – இரண்டுமே மக்கள் இயக்கங்களாக மாறி, மக்கள் பங்கெடுப்பின் காரணமாக புரட்சிகரமான முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எந்த வகையில் மக்கள் பரவலான முறையில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, யோகம் மற்றும் உடலுறுதியைத் தங்களுடைய வாழ்க்கையின் அங்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்களோ, இதைப் போலவே சிறுதானியங்களையும் கூட மக்கள் பெரிய அளவில் ஏற்றுக் கொண்டு வருகிறார்கள்.
மக்கள் இப்போது சிறுதானியங்களைத் தங்களுடைய உணவுகளில் அங்கமாக ஆக்கிக் கொண்டு வருகின்றார்கள். இந்த மாற்றத்தின் மிகப்பெரிய தாக்கத்தையும் நம்மால் காண முடிகிறது. இதனால் பாரம்பரியமாகவே சிறுதானியங்களை உற்பத்தி செய்து வந்த சிறு விவசாயிகள் மிகவும் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். உலகம் இப்போது சிறுதானியங்களின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறது என்பதில் அவர்களுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. வேறொரு புறத்தில் விவசாயிகள்-உற்பத்தியாளர்கள் சங்கங்களான FPOக்களும், தொழில் முனைவோரும் இப்போது சிறுதானியங்களைச் சந்தைப்படுத்துவது, மக்களுக்குக் கிடைக்கச் செய்வது போன்ற முயற்சிகளைச் செய்யத் தொடங்கி விட்டார்கள்.
ஆந்திரப் பிரதேசத்தின் நாந்தயால் மாவட்டத்தில் வசிக்கும் கே.வி. ராமா சுப்பா ரெட்டி அவர்கள், சிறுதானியங்களை விளைவிக்கும் பொருட்டு, தனது நல்ல சம்பளம் தரும் வேலையைத் துறந்தார். தாயாரின் கையால் உருவாக்கப்பட்ட சிறுதானியத் தின்பண்டங்களின் சுவை அவர் நினைவுகளில் எந்த அளவுக்கு ஊறியிருந்தது என்றால், இவர் தனது கிராமத்தில் கம்பு தானியத்தைப் பதனிடும் அலகைத் தொடங்கினார். சுப்பா ரெட்டி அவர்கள், மக்களுக்குக் கம்பு தானியத்தின் ஆதாயங்களையும் எடுத்துக் கூறுகிறார், இதை எளிதாகக் கிடைக்குமாறும் செய்கிறார்.
மஹாராஷ்டிரத்தின் அலீபாகுக்கு அருகே கேநாட் கிராமத்தில் வசிக்கும் ஷர்மிளா ஓஸ்வால் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக சிறுதானிய விளைச்சலில், தனித்தன்மை வாய்ந்த முறையில் பங்களிப்பு அளித்து வருகிறார். இவர் விவசாயிகளுக்கு ஸ்மார்ட் – திறம்பட்ட விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார். இவருடைய முயற்சிகளின் பலனாக சிறுதானியங்களின் விளைச்சல் மட்டும் அதிகரிக்கவில்லை, மாறாக, விவசாயிகளின் வருவாயும் அதிகரித்திருக்கின்றது.
சத்திஸ்கட்டின் ராய்கட் செல்லக்கூடிய வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால், இங்கே இருக்கும் சிறுதானிய கஃபேயுக்குக் கண்டிப்பாகச் சென்று பாருங்கள். சில மாதங்கள் முன்பாகத் தான் தொடங்கப்பட்ட இந்த சிறுதானிய சிற்றுண்டியகத்தில் அப்பங்கள், தோசை, மோமோஸ், பீட்ஸாக்கள், மஞ்சூரியன் போன்ற தின்பண்டங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.
நான் உங்களிடம் மேலும் ஒரு விஷயம் பற்றிச் சொல்லவா? நீங்கள் entrepreneur என்ற சொல் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், அதாவது தொழில்முனைவோர். ஆனால் நீங்கள் Milletpreneurs பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? ஒடிஷாவில் Milletpreneurகள் எனப்படும் சிறுதானியத் தொழில்முனைவோர் இப்போதெல்லாம் செய்திகளில் அதிகமாகக் காணப்படுகிறார்கள். பழங்குடியினத்தவர் மாவட்டமான சுந்தர்கட்டுக்கு அருகே, 1,500 பெண்களின் சுயவுதவிக் குழுவானது, ஓடிஷா சிறுதானியங்கள் இயக்கத்தோடு இணைந்திருக்கிறது. இங்கே இருக்கும் பெண்கள், சிறுதானியங்களில் குக்கீஸ் தின்பண்டம், ரஸ்குல்லா, குலாப் ஜாமுன், கேக்குகள் போன்றவற்றைத் தயார் செய்கிறார்கள். சந்தையில் இவற்றுக்கான தேவை அதிக அளவில் இருக்கும் காரணத்தால், வருவாயும் அதிகரித்து வருகிறது.
கர்நாடகத்தின் கல்புர்கியில் ஆலந்த் புதாயி சிறுதானிய குடியானவர்கள் உற்பத்தியாளர் கம்பெனியானது கடந்த ஆண்டு சிறுதானிய ஆய்வுக்கான இந்தியக் கழகத்தின் மேற்பார்வையில் தனது பணியைத் தொடக்கியது. இங்கே தயாரிக்கப்படும், காக்ரா, பிஸ்கட்டுகள், லட்டு போன்றவை மக்களின் விருப்பத்தைப் பெற்று வருகின்றன. கர்நாடகத்தின் பீதர் மாவட்டத்தில், ஹுல்சூர் சிறுதானிய உற்பத்தியாளர் கம்பெனியோடு தொடர்புடைய பெண்கள், சிறுதானியங்களைப் பயிர் செய்வதோடு கூடவே, அவற்றை மாவாக அரைத்தும் தயார் செய்து கொடுக்கிறார்கள். இதனால் இவர்களின் வருவாயில் கணிசமான அதிகரிப்பும் இருக்கிறது. இயற்கை விவசாயத்தோடு தொடர்புடைய சத்திஸ்கட்டின் சந்தீப் ஷர்மா அவர்களின் விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம் இன்று, 12 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளோடு தொடர்புடையதாக இருக்கிறது. பிலாஸ்புரைச் சேர்ந்த இந்த விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம், எட்டு வகையான சிறுதானியங்களின் மாவையும், சுவையான தின்பண்டங்களையும் தயார் செய்து வருகிறது.
நண்பர்களே, இன்று இந்தியாவின் அனைத்து இடங்களிலும் ஜி-20 மாநாடுகள் தொடர்ந்து நடந்தேறி வருகின்றன, தேசத்தின் ஒவ்வொர் இடத்திலும், எங்கெல்லாம் ஜி-20 மாநாடு நடந்து வருகிறதோ, அங்கெல்லாம் சிறுதானியங்களில் தயார் செய்யப்பட்ட ஊட்டச்சத்துமிக்க, சுவையான தின்பண்டங்கள் இடம் பெறுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கே கம்பினால் தயாரிக்கப்பட்ட கிச்சடி, அவல் தின்பண்டம், பாயசம், ரொட்டியோடு கூடவே ராகியால் தயாரிக்கப்பட்ட பாயசம், பூரி, தோசை போன்ற தின்பண்டங்களும் பரிமாறப்படுகின்றன. ஜி-20க்கான அனைத்து இடங்களிலும் சிறுதானியங்களின் கண்காட்சிகளில், சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கிய பானங்கள், கூளவகைகள், நூடுல்ஸ் ஆகியவை காட்சிப்படுத்தப்படும்.
உலகெங்கும் இருக்கும் இந்திய த்தூதரகங்களிலும் கூட இவற்றின் வெகுஜனவிருப்பத்தை அதிகரிக்க, முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசத்தின் இந்த முயற்சியும், உலகிலே அதிகரித்துவரும் சிறுதானியங்களின் தேவையும், நமது சிறுவிவசாயிகளுக்கு எத்தனை பலத்தை அளிக்கவல்லது என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
இன்று எத்தனை வகையான புதியபுதிய பொருட்ள்கள், சிறுதானியங்களைக் கொண்டு தயார் செய்யப்படுகின்றனவோ, அவையனைத்தும் இளைய தலைமுறையினருக்கு மிகவும் பிடித்திருக்கின்றன என்பதைக் காணும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டின் இப்படிப்பட்ட அருமையான தொடக்கத்திற்காகவும், இதைத் தொடர்ந்து மேற்கொண்டு சென்றமைக்கும், மனதின் குரலின் நேயர்களுக்கும் நான் என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.