
காப்புரிமை குறித்த விழிப்பு உணர்வு
என் மனம் நிறை நாடுமக்களே, இப்போது மனதின் குரலில், நான் மேலும் ஒரு விஷயம் குறித்துப் பேசுகிறேன், இது உங்களுக்கு ஆனந்தத்தை அளிக்கும், பெருமிதம் பொங்கும், மனம் சந்தோஷப்படும் – பலே பலே, மனசு நிறைஞ்சு போச்சு!! என்று குதூகலிக்கும். தேசத்தின் மிகப் பழைமையான அறிவியல் நிறுவனங்களில் ஒன்று, பெங்களூரூவைச் சேர்ந்த Indian Institute of Science, IISc, அதாவது இந்திய அறிவியல் நிறுவனம்; இது அருமையான ஒரு விஷயத்தை நமக்கு அளிக்கிறது.
அதாவது இந்த நிறுவனம் நிறுவப்பட்டதன் பின்னணியில், பாரதத்தின் இரண்டு மகத்துவம் பொருந்திய ஆளுமைகளான ஜம்ஷேத்ஜி டாடாவும், ஸ்வாமி விவேகானந்தரும் உத்வேகக் காரணிகளாக இருந்தார்கள் என்று மனதின் குரலில் நான் முன்பேயே கூட பேசியிருந்தேன். உங்களுக்கும் எனக்கும் ஆனந்தமும், பெருமிதமும் ஏற்படுத்தக்கூடிய விஷயம் என்னவென்றால், 2022ஆம் ஆண்டிலே இந்த நிறுவனத்தின் பெயரில் மொத்தமாக 145 காப்புரிமைகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதே ஆகும். அதாவது, 5 நாட்களுக்கு ஒருமுறை இரண்டு உரிமைக்காப்புகள். இந்தச் சாதனை உள்ளபடியே அற்புதமானது. இந்த வெற்றிக்காக நான் IISc யின் குழுவினருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, இன்று உரிமைக்காப்புப் பதிவிலே பாரதத்தின் தரவரிசை, 7ஆம் இடத்திலேயும், வர்த்தகச் சின்னங்களைப் பொறுத்த மட்டிலே 5ஆவது இடத்திலும் இருக்கின்றது. உரிமைக்காப்புகள் விஷயத்தில் மட்டுமே, கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 50 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. உலகளாவிய கண்டுபிடிப்புக்கள் குறியீட்டிலும் கூட பாரதத்தின் தரவரிசையில், தீவிரமான மேம்பாடு காணப்பட்டிருக்கிறது, இப்போது அது 40ஆம் இடத்திற்கு வந்து விட்டது; ஆனால் 2015ஆம் ஆண்டிலே உலகக் கண்டுபிடிப்புகள் குறியீட்டில் பாரதம் 80ஆம் இடத்தில் இருந்தது. மேலும் ஒரு சுவாரசியமான விஷயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள். பாரதம் கடந்த 11 ஆண்டுகளில் முதன்முறையாக உள்நாட்டு உரிமைக்காப்புப் பதிவின் எண்ணிக்கை, அயல்நாட்டுப் பதிவை விட அதிகரித்திருக்கிறது. இது பாரதத்தின் அதிகரித்து வரும் விஞ்ஞானத் திறமையையும் காட்டுகிறது.
நண்பர்களே, 21ஆம் நூற்றாண்டின் பொருளாதாரத்தில் அறிவு மிகவும் தலையாயது என்பதை நாமனைவரும் நன்கறிவோம். நமது கண்டுபிடிப்பாளர்களும், அவர்களுடைய காப்புரிமைகளும் பாரதத்தின் டெக்கேட் பற்றிய கனவை கண்டிப்பாக முன்னெடுத்துச் செல்லும், நிறைவேற்றி வைக்கும் என்பது என் நம்பிக்கை. இதன் வாயிலாக நாமனைவரும், நமது நாட்டிலேயே தயார் செய்யப்பட்ட உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தையும் பொருட்களையும் முழுமையாகப் பயன்படுத்தி இலாபமடையலாம்.
எனதருமை நாட்டுமக்களே, நமோ செயலியில், தெலங்கானாவைச் சேர்ந்த ஒரு பொறியாளரான விஜய் அவர்கள் ஒரு பதிவினைத் தரவேற்றி இருந்தார். இதிலே, மின்பொருள்கழிவு பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். விஜய் அவர்களின் வேண்டுகோள் என்னவென்றால், மனதின் குரலில், இது பற்றி நான் விவாதிக்க வேண்டும் என்பது தான். இந்த நிகழ்ச்சியில் முந்தைய பகுதிகளிலேயே கூட நாம் கழிவிலிருந்து செல்வம் பற்றி பேசியிருக்கிறோம்; ஆனால் வாருங்கள், இன்றும் இதோடு தொடர்புடைய மின்பொருள் கழிவு பற்றிப் பேசுவோம்.