
பறவைகளுக்கும் வாழ்வளிக்கும் பண்பட்ட கலாசார மக்கள்
என் அன்பான நாட்டுமக்களே, இன்று உலகெங்கும் சூழல் மாற்றம் மற்றும் உயிரினப் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு குறித்து அதிகம் பேசப்படுகிறது. இந்தத் திசையில் பாரதத்தின் சிறப்பான முயற்சிகள் குறித்து நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். பாரதம் தனது சதுப்பு நிலங்களின் பொருட்டு ஆற்றியிருக்கும் பணிகளை நீங்கள் தெரிந்து கொள்ளுதல் நலமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஈரநிலங்கள், சதுப்புநிலங்கள் என்றால் என்ன என்று சில நேயர்கள் நினைக்கலாம்.
ஈரநிலப் பகுதிகள், அதாவது எங்கே சகதியைப் போன்ற நிலம் இருக்கிறதோ, எங்கே ஆண்டுமுழுக்க நீர் நிரம்பி இருக்கிறதோ, அது தான் ஈரநிலமாகும். சில தினங்கள் கழித்து, ஃபெப்ருவரி மாதம் 2ஆம் தேதியன்று உலக சதுப்புநில நாள் வரவிருக்கிறது. நமது பூமியின் இருப்பிற்காக சதுப்புநிலங்கள் மிகவும் அவசியமானவை, ஏனென்றால், இவற்றைச் சார்ந்த பல பறவைகளும், உயிரினங்களும் இருக்கின்றன. இவை உயிரினப் பன்முகத்தன்மையை நிறைவு செய்வதோடு, வெள்ளக் கட்டுப்படுத்தலையும், நிலத்தடி நீரை மீள்நிரப்புவதையும் உறுதி செய்கின்றன. Ramsar Sites, ராம்சர் இடங்கள் போன்ற சதுப்புநிலப் பகுதிகள், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.
ஈரநிலங்கள் அல்லது சதுப்புநிலங்கள், எந்தவொரு தேசத்திலும் இருக்கலாம் ஆனால், இவை பல அளவீடுகளை எல்லாம் கடந்த பிறகு தான், Ramsar Sites என்று அறிவிக்கப்படுகின்றன. அங்கே 20,000 அல்லது அதைவிடவும் அதிகமான நீர்ப் பறவைகள் இருக்க வேண்டும். வட்டார மீன் இனங்கள் பெரிய எண்ணிக்கையில் அங்கே இருத்தல் அவசியம். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழித்து, அமுதப் பெருவிழாவின் போது ராம்சர் அங்கீகாரம் பெற்ற இடங்களோடு தொடர்புடைய மேலும் ஒரு நல்ல தகவலை
நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நமது தேசத்தில் இப்போது ராம்ஸர் இடங்களின் மொத்த எண்ணிக்கை 75 ஆகியிருக்கிறது, ஆனால் 2014ற்கு முன்பாக தேசத்தில் வெறும் 26 ராம்ஸர் இடங்கள் மட்டுமே இருந்தன. இதற்காக வட்டார சமுதாயங்கள் பாராட்டுக்கு உரியவர்கள்; இவர்கள் தாம் இந்த உயிரினப் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தளித்திருக்கிறார்கள். இது இயற்கையோடு கூட நல்லிணக்கத்தோடு வாழும் நமது பலநூற்றாண்டுக்கால பழைமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்குக் கிடைத்த ஒரு மரியாதை ஆகும். பாரதத்தின் இந்த சதுப்பு நிலங்கள் நமது இயற்கைத் திறன்களுக்கான எடுத்துக்காட்டுகள். ஓடிஷாவின் சில்கா ஏரி, 40க்கும் அதிகமான நீர்ப் பறவை இனங்களுக்கு புகலிடமாக விளங்குகிறது.
கயிபுல்-லம்ஜாஊ, கோக்டாக்கை, சதுப்புநில மானின் ஒரே இயற்கை வாழ்விடமாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டின் வேடந்தாங்கல், 2022ஆம் ஆண்டிலே ராம்ஸர் சைட் என்று அறிவிக்கப்பட்டது. இங்கே பறவைகளின் எண்ணிக்கையைப் பாதுகாக்கும் மொத்தப் பாராட்டும் அக்கம்பக்கத்தில் இருக்கும் விவசாயிகளையே சாரும். கஷ்மீரத்தில் பஞ்ஜாத் நாக் சமுதாயத்தினரின் வருடாந்திர fruit blossom எனப்படும் பழங்களின் மலர்ச்சித் திருவிழாவில், விசேஷமான வகையிலே கிராமத்தின் நீர்நிலைகளின் தூய்மைப்படுத்தலுக்காக ஒரு நாளை ஒதுக்குகிறார்கள்.
உலகின் ராம்ஸர் இடங்களிலே அதிகபட்ச தனித்தன்மை வாய்ந்த கலாச்சார மரபும் இருக்கிறது. மணிப்பூரின் லோக்டாக் மற்றும் புனிதமான நீர்நிலையான ரேணுகாவோடு, அந்தப் பகுதியின் கலாச்சாரத்தின் ஆழமான பந்தம் உள்ளது. இதைப் போலவே சாம்பரின் தொடர்பு அன்னை துர்க்கா தேவியின் அவதாரமான சாகம்பரி தேவியோடும் இருக்கிறது. பாரதத்திலே ஈரநிலங்களின் இந்த பரவலாக்கம், ராம்ஸர் பகுதிகளுக்கு அருகிலே வசிப்போரின் காரணமாகவும் அமைந்திருக்கிறது. நான் இந்த மக்கள் அனைவருக்கும் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன், மனதின் குரல் நேயர்களின் தரப்பிலிருந்து உங்களுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.