
இன்றைக்கு இந்தியா உலகளவில் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான சந்தையாக தற்போது புதிய உச்சத்தை தொட்டு அதனையும் தாண்டிச் சென்றுக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி பெங்களூரு விமான கண் காட்சி துவக்க விழாவில் பேசியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள எலஹங்கா விமானப்படைத் தளத்தில் மேக் இன் இந்தியா, வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி சர்வதேச விமான கண்காட்சி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். அந்த வகையில் இந்தாண்டுக்கான கண்காட்சி இன்று முதல் பிப்.17 வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது,
புதிய இந்தியாவின் திறமைக்கு, வளர்ச்சிக்கு பெங்களூருவில் நடைபெறும் இந்த கண்காட்சியே சாட்சி. இந்தியா தற்போது புதிய உச்சத்தை தொட்டு, அதனையும் தாண்டிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த கண்காட்சியில் சுமார் 100 நாடுகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இது இந்தியா மீது உலக நாடுகள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளதை காட்டுகிறது. இதனை வெறும் நிகழ்ச்சியாகக் கருதிய காலமும் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக, நாடு இந்த எண்ணத்தை மாற்றியுள்ளது.
இன்று இது வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல இந்தியாவின் பலமும் கூட. இது இந்திய பாதுகாப்பு துறையின் நோக்கம் மற்றும் தன்னம்பிக்கையில் கவனம் செலுத்துகிறது. இன்றைக்கு இந்தியா உலகளவில் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான சந்தையாக மட்டுமல்லாமல், ஆற்றல் மிகுந்த பாதுகாப்பு கூட்டாளியாகவும் உள்ளது.
21ம் நூற்றாண்டின் புதிய இந்தியா இப்போது எந்த வாய்ப்பையும் இழக்காது, கடின உழைப்பில் பின்தங்கிவிடாது. எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். சீர்திருத்த பாதையில், ஒவ்வொரு துறையிலும் புரட்சியை கொண்டு வருகிறோம்.
பல தசாப்தங்களாக மிகப்பெரிய பாதுகாப்பு இறக்குமதியாளராக இருந்த நாடு இப்போது 75 நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது. 2024-25க்குள் பாதுகாப்பு ஏற்றுமதியில் 5 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.