— கு.வை. பாலசுப்பிரமணியன் —
மகளிர் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்ற ஐந்து அணிகளில் மும்பை, உ.பி., டெல்லி ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்குத் தேர்வாயின. டெல்லி அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தேர்வானது.
மும்பை அணியும் உ.பி. அணியும் எலிமினேட்டர் போட்டியில் 24ஆம் தேதி மோதின. இதில் மும்பை அணி முதலில் அதிரடியாக ஆடி 182/4 ரன் கள் குவித்தது. பின்னர் ஆடிய உ.பி. அணி 110 ரன் கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதிய மாபெரும் இறுதி போட்டி மார்ச் 26 ஆம் தேதியன்று மும்பையில் இருக்கும் ப்ராபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு துவங்கியது. அதில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஷபாலி வர்மா 11 (4) ரன்கள் விளாசி அவுட்டான நிலையில் அடுத்து வந்த கேப்ஸி 0, ஜெனிமா ரோட்ரிகஸ் 9, மரிசன் கேப் 18 (21) என முக்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
போதாக்குறைக்கு மறுபுறம் போராடிய கேப்டன் மெக் லென்னிங் 5 பவுண்டரியுடன் 35 (29) ரன்களில் ரன் அவுட்டாகி சென்றார். அதனால் 75/6 என்ற ஸ்கோருடன் தடுமாறிய அந்த அணியை கடைசி நேரத்தில் சீக்கா பாண்டே (3 பவுண்டரி 1 சிக்சருடன் 27, 17 பந்துகள்) ராதா யாதவ் (2 பவுண்டரி 2 சிக்சருடன் 27, 12 பந்துகள்) இருவரும் ரன் குவித்து நல்ல பினிஷிங் கொடுத்து ஓரளவு காப்பாற்றினர். இருப்பினும் 20 ஓவரில் டெல்லி போராடி 131/9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மும்பை சார்பில் அதிகபட்சமாக ஹெய்லே மேத்யூஸ் மற்றும் இஸி ஓங் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து 132 என்று சுலபமான இலக்கை துரத்திய மும்பைக்கு ஹெய்லே மேத்தியூஸ் 13 (12) யாஷ்க்கா பாட்டியா 4 (3) என தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 23/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணியை அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹெர்மன்ப்ரீத் கௌர் பொறுப்புடன் செயல்பட்டு 5 பவுண்டரியுடன் 37 (39) ரன்கள் குவித்து காப்பாற்றிய போது முக்கிய நேரத்தில் ரன் அவுட்டானார்.
அதன் காரணமாக போட்டியில் பரபரப்பு ஏற்பட்டாலும் இலக்கு குறைவாக இருந்ததால் அவருடன் மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட நட் ஸ்கீவர் (7 பவுண்டரியுடன் 60* ரன், 55 பந்துகள்) எமிலியா கெர் (14* ரன் எட்டு பந்துகளில்) நன்றாக ஆடினர். அதனால் 19.3 ஓவரில் 134/3 ரன்கள் எடுத்த மும்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
ஆட்ட நாயகியாக நேட் சிவிர் ப்ரண்டும் தொடர் நாயகியாக ஹெய்லி மேத்யூஸும் அறிவிக்கப்பட்டார்கள். அதிக ரன் கள் அடித்த வீராங்கனை மேக் லேனிங்; அதிக விக்கட்டுகள் எடுத்தவர் ஹெய்லி மேத்யூஸ்