ஐ.பி.எல் 2023 – 18ஆம் நாள் – 17.04.2023
எப்போது இந்த நிலை. ரிங்கூ சிங் பரிதாபம்
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஐ.பி.எல் 2023 தொடரின் 18ஆம் நாளான நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் கேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னஸ்வாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி வென்றது. சென்னை அணி (226/6, கான்வே 83, ஷிவம் டூபே 52, ரஹானே 37, பந்து வீசிய ஆறு பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கட்) பெங்களூரு அணியை (218/8, ட்யூ ப்ளேசிஸ் 62, மேக்ஸ்வெல் 76, தினேஷ் கார்த்திக் 28, பிரபுதேசாய் 19, துஷார் தேஷ்பாண்டே 3/45, ) 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி சென்னை அணியை முதலில் மட்டையாடச் சொன்னது. சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அஜிங்க்யா ரஹானே (20 பந்துகள் 37 ரன்) மற்றொரு தொடக்க வீரர் கான்வேயுடன் இணைந்து ஆடினார். அதன் பின்னர் ஆடவந்த ஷிவம் டூபே 27 பந்துகளில் 52 ரன் அடித்தார். கான்வே 16ஆவது ஓவர் வரை விளையாடி 45 பந்துகளில் 83 ரன் சேர்த்தார். அதன் பின்னர் அம்பாதி ராயடு (14 ரன்), மொயின் அலி (19 ரன்), ஜதேஜா (10 ரன்) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இதனால் 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு சென்னை அணி 226 ரன் எடுத்திருந்தது. சென்னை அணி மட்டையாளர்கள் 12 ஃபோர், 17 சிக்சர்கள் அடித்தனர்.
அதன்பின்னர் ஆடவந்த பெங்களூரு அணிக்கு முதல் ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது, விராட் கோலி 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மஹிபாலும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ட்யூ ப்ளேசிஸ், மேக்ஸ்வெல் இருவரும் அதிரடியாக ஆடினர். இருப்பினும் மேக்ஸ்வெல் (76 ரன்) 13ஆவது ஓவரிலும், ட்யூ ப்ளேசிஸ் (62) 14ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். ஷபாஸ் அகமது மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருக்கும் இது சிறந்த வாய்ப்பு; இருந்தபோதிலும் இவர்கள் இருவரும் 17 மற்றும் 18ஆவது ஓவர்களில் ஆட்டமிழந்தனர். அப்போது 17 பந்துகளில் 35 ரன்கள் எடுக்கவேண்டியிருந்தது. ஆனால் அனுபவமில்லாத பெங்களூரு வீரர்களால் இலக்கை அடைய முடியவில்லை. இதனால் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
கான்வே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.