
ஐ.பி.எல் 2023 – 19ஆம் நாள் – 18.04.2023
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஐ.பி.எல் 2023 தொடரின் 19ஆம் நாளான நேற்று மும்பை இண்டியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே ஹைதராபாதில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி வென்றது. மும்பை அணி (192/5, கிரீன் 64, இஷான் கிஷன் 38, திலக் வர்மா 37, ரோஹித் ஷர்மா 28, மார்கோ ஜேன்சன் 2/43) ஹைதராபாத் அணியை (19.5 ஓவரில் 178, மாயங்க் அகர்வால் 48, க்ளாசன் 36, மக்ரம் 22, மெரிடித் 2/33, பென்றாஃப் 2/33, பியுஷ் சாவ்லா 2/43, அர்ஜுன் டெண்டுல்கர் 1/18, கிரீன் 1/29) 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா 28 ரன்கள், இஷான் கிஷன் 38 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் களமிறங்கிய கேமரான் கிரீன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தார். மறுமுனையில் சூரியகுமார் யாதவ் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து கேமரான் கிரீனுடன் இணைந்த திலக் வர்மா, ஐதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
17 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 37 ரன்கள் விளாசிய நிலையில் அவர் ஆட்டமிழந்தார். டிம் டேவிட் 16 ரன்களில் அவுட் ஆனார். மறுமுனையில் அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்த கேமரான் கிரீன் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் சேர்க்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் சேர்த்தது.
ஐதராபாத் தரப்பில் மார்கோ ஜான்சென் 2 விக்கெட் எடுத்தார். புவனேஸ்வர் குமார், நடராஜன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது.
ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி ப்ரூக் 9 ரன்னில் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவருடைய இடத்தில் களமிறங்கிய ராகுல் திரிபாதி 7 ரன்னில் நாலாவது ஓவரில் அவுட்டானார். அணித்தலைவர் எய்டன் மர்க்ரம் 17 பந்துகளில் 2 ரன் அடித்து ஆட்டமிழந்தார். அவருக்குப் பதிலாக ஆடவந்த அபிஷேக் ஷர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
விக்கட்டுகள் விழுந்துகொண்டிருந்தாலும் ரன் ரேட் வெற்றி பெறக்கூடிய நிலையில் தான் இருந்தது. ஆயினும் இலக்கை அடையமுடியாமல் ஹதராபாத் அணி தோல்வியைத் தழுவியது.
முதல் ஆறு ஓவர்களில் ஹைதராபாத் அணி 42/2 (மும்பை 53/1), 7 முதல் 15 ஓவர்களில் 133/6 (மும்பை அணி 130/3); கடைசி ஐந்து ஓவர்களில் ஹைதராபாத் அணி 178 ஆல் அவுட் (மும்பை 192/3). 7 முதல் 15ஆவது ஓவர் வரை ஹதராபாத் அணி ந்ன்றாக விளையாடியிருந்தாலும் நிலையாக நின்று யாரேனும் இருவர் விளையாடியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். காமரூன் கிரீன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.