
ஐ.பி.எல் 2023 – 20ஆம் நாள் – 19.04.2023
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
ஐ.பி.எல் 2023 தொடரின் 20ஆம் நாளான நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ அணி வென்றது. லக்னோ அணி (154/7, கைல் மேயர்ஸ் 51, கே.எல். ராகுல் 39, நிக்கோலஸ் பூரன் 29, ஸ்டொயினிஸ் 21, அஷ்வின் 2/23) ராஜஸ்தான் அணியை (144/6, ஜெய்ஸ்வால் 44, பட்லர் 40, படிக்கல் 26, பராக் 15, ஆவேஷ் கான் 3/25, ஸ்டொயினிஸ் 2/28) 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் மேயர்ஸ் இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த படோனி 1 ரன்னிலும், ஹூடா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டாய்னிஸ் களமிறங்கிய நிலையில், மேயர்ஸ் அரை சதம் அடித்தார். ஆனால் 51 ரன்களில் மேயர்ஸ் அவுட் ஆனார். இதனால் லக்னோ அணி 104 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அடுத்ததாக நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். பூரனும் ஸ்டாய்னிஸூம் அதிரடியாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். ஸ்டாய்னிஸ் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து குருணால் பாண்டியா களமிறங்கினார். 19.5 ஓவரில் பூரன் 28 ரன்களில் ரன் அவுட் ஆனார். கடைசி பந்தில் யுத்வீர் 1 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்களையும், போல்ட், சந்தீப், ஹோல்டர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஷ்வால் மற்றும் பட்லர் களமிறங்கினார். இருவரும் லக்னோ பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன் சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ஜெய்ஷ்வால் 44 ரன்களில் அவுட் ஆனார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும். ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்கும்போது ராஜஸ்தான் அணி 11.3 ஓவரில் 87 ரன் எடுத்திருந்தது. மீதமுள்ள 9.3 ஓவரில் 68 ரன்கள் எடுக்க வேண்டும்; கையில் 9 விக்கட்டுகள் உள்ளன. இருப்பினும் இலக்கை அடையமுடியாமல் ராஜஸ்தான் அணி தோவியைத் தழுவியது.
சஞ்சு சாம்சன் (2 ரன்), ஹெட்மயர் (2 ரன்) விரைவாக ஆட்டமிழந்தனர். படிக்கல் – ரியான் ஜோடி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தது. இருப்பினும் கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை அவேஷ் கான் வீசினார். முதல் 2 பந்துகளில் பவுண்டரியுடன் ரியான் 5 ரன்கள் சேர்த்தார். 3 ஆவது பந்தில் படிக்கல் ஆட்டமிழந்தார். அவர் 26 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த துருவ் டக் அவுட் ஆனார். இதனால் கடைசி 2 பந்துகளில் ராஜஸ்தான் அணிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்து வந்த அஸ்வின் 2 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்ததால், ராஜஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது.
ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அசத்தல் வெற்றிப் பெற்றுள்ளது. மார்க்கஸ் ஸ்டொயினிஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.