― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாவளர்ச்சி அடைந்த பாரதத்தின் அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு!

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு!

- Advertisement -
pim modi speech in new parliament

ஒவ்வொரு தேசத்தின் வளர்ச்சிப் பயணத்திலும், எப்படிப்பட்ட சில கணங்கள் வருகின்றது என்றால், இவை அனைத்துக் காலத்திலுமே, அமரத்துவம் பெற்று விடுகின்றன.   சில தேதிகள், காலத்தின் நெற்றியிலே, அழிக்கமுடியாத முத்திரையை விட்டுச் செல்கின்றன.   இன்று மே மாதம் 28ஆம் தேதி, 2023ஆம் ஆண்டின் இந்த தினம், இப்படிப்பட்டதொரு சுபமான சந்தர்ப்பம் ஆகும்.   தேசம், சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுக்காலம் நிறைவேறிய பிறகு,  அமுதக்காலத்தைக் கொண்டாடி வருகிறது.   இந்த அமுதக்காலத்திலே, பாரதநாட்டு மக்களெல்லாம், தங்களுடைய ஜனநாயகத்திற்கு, புதிய நாடாளுமன்றம் என்ற இந்த,  வெகுமதியினை அளித்திருக்கின்றார்கள்.    இன்று காலையிலே தான், நாடாளுமன்ற வளாகத்திலே, அனைத்துச் சமயப் பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டது.   நான் நாட்டுமக்கள் அனைவருக்கும், பாரதநாட்டு ஜனநாயகத்தினுடைய, இந்தப் பொன்னான வேளையை ஒட்டி, பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

நண்பர்களே, இது ஏதோ, ஒரு கட்டிடம் மட்டுமல்ல.  இது 140 கோடி நாட்டு மக்களினுடைய, எதிர்பார்ப்புக்களின், மற்றும் கனவுகளின் பிரதிபலிப்பாகும்.   இது உலகினுக்கு, பாரதத்தின் திடமான உறுதிப்பாட்டினுடைய, செய்தியை அளிக்கின்றது.   நம்முடைய ஜனநாயகத்தின் ஆலயமாகும் இது.   இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், திட்டங்களை கொள்கைகளை அமலாக்கத்தோடு, உள்ள விருப்பங்களுக்கு, உரு அளிக்கும் வகையில், தீர்மானத்திற்கு, உயிர் அளிக்கக் கூடிய, முக்கியமான கட்டமாகத் திகழும்.   இந்தப் புதிய கட்டிடம், நம்முடைய சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளுக்கு, வடிவம் கொடுக்கும் சாதனமாக விளங்கும்.  இந்தப் புதிய கட்டிடம், தற்சார்பு பாரதத்தினுடைய, சூரியோதயத்தின் சாட்சியாக விளங்கும்.  இந்தப் புதிய கட்டிடம், வளர்ச்சியடைந்த பாரதத்தின் உறுதிப்பாடுகளினுடைய, மெய்ப்பித்தல், அரங்கேறுவதைக் கண்குளிரக் காணும்.  இந்தப் புதிய கட்டிடம், நூதனம் மற்றும் புராதனம் இரண்டும், ஒருங்கே இருப்பதற்கான ஆதர்சமாகவும் விளங்கும்.   

நண்பர்களே, புதிய பாதையிலே பயணித்தால் மட்டுமே, புதிய இலக்குகளை எட்ட முடியும்.  இன்று, புதிய பாரதம், புதிய இலக்குகளைத் தீர்மானித்துக் கொண்டிருக்கிறது.  புதிய பாதையை அமைத்து வருகிறது.  புதிய உற்சாகம் புதிய தெம்பு இருக்கிறது.  புதிய பயணம் இது புதிய சிந்தனை இது.  திசை புதியது, பார்வை புதியது.  உறுதிப்பாடு புதியது, நம்பிக்கை புதியது.   மேலும் இன்று, இன்று மீண்டும் ஒருமுறை, உலகம் முழுமையும், பாரதத்தை, பாரதத்தின் திடமான உறுதிப்பாட்டினை, பாரதவாசிகளின் தீவிரத்தை, பாரத நாட்டுமக்களின் ஒருமித்த பேரார்வத்தை, மரியாதை, மற்றும் நம்பிக்கை நிரம்பிய உணர்வோடு கவனிக்கிறது.  பாரதம் முன்னேறிப் பயணிக்கும் போது, உலகமே முன்னேறிப் பயணிக்கிறது.  நாடாளுமன்றத்தின் இந்தப் புதிய கட்டிடம், பாரதத்தின் வளர்ச்சியோடு கூட, உலகின் வளர்ச்சிக்கும் அறைகூவல் விடுக்கும். 

நண்பர்களே, இன்று இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்திலே, சில நேரம் முன்பாக, நாடாளுமன்றத்தின் இந்தப் புதிய கட்டிடத்திலே, பவித்திரமான செங்கோலும் நிர்மாணம் செய்யப்பட்டிருக்கிறது.  மாபெரும் சோழ சாம்ராஜ்ஜியத்திலே, செங்கோலினை, கடமைப் பாதையின், சேவைப்பாதையின், தேசப்பாதையின் அடையாளமாகக் கருதப்பட்டது.  ராஜாஜி, மேலும் புனித ஆதீனங்களின் வழிகாட்டுதலின் பேரிலே, இதே செங்கோல் தான், ஆட்சியதிகாரம் கைமாறியதன் அடையாளமாகத் திகழ்ந்தது.  தமிழ்நாட்டிலிருந்து விசேஷமாக, இங்கே வந்திருக்கும், ஆதீனங்கள் அனைவரும், இன்று காலையில், நாடாளுமன்றக் கட்டிடத்திலே நமக்கு ஆசிகள் வழங்க வந்திருந்தார்கள்.  நான் அவர்களுக்கு மீண்டும், சிரத்தைகலந்த வணக்கங்களைத் தெரிவிக்கிறேன்.  அவர்களுடைய வழிகாட்டுதலின் பேரிலே தான், மக்களவையிலே, இந்தப் பவித்திரமான செங்கோல் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.  கடந்த நாட்களிலே, ஊடகங்களிலே, இதோடு தொடர்புடைய பல தகவல்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டன.  நான் இவைபற்றி, ஆழமாக இங்கே பேச விரும்பவில்லை.  ஆனால் நான் திடமாக நம்புகிறேன், இது நம்முடைய பெரும்பேறாகும், அதாவது இந்தப் பவித்திரமான செங்கோலினுடைய, கண்ணியத்தினைத், திரும்பக் கொடுக்க முடிந்திருக்கிறது.  அதனுடைய கௌரவம் மரியாதையை, மீட்டுத் தர முடிந்திருக்கிறது.  எப்போதெல்லாம், இந்த நாடாளுமன்ற அவையினிலே செயல்பாடுகள் துவங்கப்படுமோ, செங்கோல், அப்போதெல்லாம் நமக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வரும்.   

நண்பர்களே, பாரதம் ஒரு ஜனநாயக நாடு மட்டுமல்ல, மாறாக, ஜனநாயகத்தின் பிறப்பிடமும் ஆகும்.  மதர் ஆஃப் டெமோக்ரசியும் ஆகும்.  பாரதம் இன்று, உலகளாவிய ஜனநாயகத்தினுடைய, மிகப்பெரிய ஆதாரமாகும்.  ஜனநாயகம் என்பது நம்மைப் பொறுத்த மட்டிலே, ஒரு அமைப்பு மட்டுமே அல்ல.  இது ஒரு கலாச்சாரம், இது ஒரு கருத்து, இது ஒரு பாரம்பரியம்.  நமது வேதங்கள், நமக்கெல்லாம், சபாக்கள் மற்றும் சமிதிக்களின், ஜனநாயக ஆதர்சத்தைக் கற்பிக்கிறது.  மஹாபாரதம் போன்ற நூல்களிலே, குடியாட்சி மற்றும் குடியரசுகள் பற்றிய விவரங்கள் இருக்கின்றன.   வைசாலி போன்ற குடியரசுகளிலே, நாம் வாழ்ந்து காட்டியிருக்கிறோம்.   நாம் எல்லாம் பகவான் பசவேஸ்வரரின், அனுபவ மண்டபத்தை நமது கௌரவமாகக் கொண்டிருக்கிறோம்.  தமிழ்நாட்டில் கிடைத்த, பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, இன்றும் கூட, அனைவரையும் திகைப்பில் ஆழ்த்துகிறது.  நம்முடைய ஜனநாயகம் தான் நமக்கெல்லாம் கருத்தூக்கம்.  நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் தான், நமது உறுதிப்பாடாகும்.  இந்த உத்வேகம், இந்த உறுதிப்பாட்டின் மிக உயர்வான பிரதிநிதி, ஒன்று உண்டு என்றால், இதோ இந்த நாடாளுமன்றமே ஆகும்.  மேலும் இந்த நாடாளுமன்றம், தேசத்தின் எந்த நிறைவான பாரம்பரியத்தின் பிரதிநிதியாக இருக்கிறது என்றால், எதைப் பறைசாற்றுகிறது என்றால், शेते निपद्य-मानस्य, चराति चरतो भगः – ஷே தே நிபத்யமானஸ்ய, ஷே தே நிபத்ய மானஸ்ய, சராதி சரதோ பக:, சரைவேதி சரைவேதி சரைவேதி.  இதன் பொருள் என்னவென்றால், யார் தடைப்படுகிறார்களோ, அவர்களின் எதிர்காலமும் தடைப்பட்டுப் போகும்.  ஆனால் யார் பயணிக்கிறார்களோ, அவர்களின் எதிர்காலமும் முன்னேறுகிறது உயரங்களைத் தொடுகிறது.  ஆகையினாலே பயணித்துக் கொண்டேயிரு.  பயணித்துக் கொண்டேயிரு.  அடிமைத்தனத்திற்குப் பிறகு, நமது பாரதநாடு, பல்வற்றை இழந்த பிறகே, தனது புதிய பயணத்தைத் தொடங்கியது.  இந்தப் பயணம், ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களைக் கடந்த பிறகு, ஏராளமான சவால்களைக் கடந்த பிறகு, சுதந்திரத்தின் அமுதக்காலத்திலே பிரவேசித்து விட்டது.  சுதந்திரத்தின் இந்த அமுதக்காலம், மரபுகளை தன்னுள் அடக்கிக் கொண்டு, வளர்ச்சியின் புதிய இலக்குகளைத் தீர்மானிக்கும், அமுதக்காலமாகும்.  சுதந்திரத்தின் இந்த அமுதக்காலம், தேசத்திற்குப் புதியதொரு திசையை அளிக்கும் அமுதக்காலமாகும்.  சுதந்திரத்தின் இந்த அமுதக்காலம், அளவில்லாக் கனவுகளுக்கும், கணக்கில்லா எதிர்பார்ப்புக்களுக்கும், உயிர்ப்பளிக்கும் அமுதக்காலமாகும்.   இந்த அமுதக்காலத்தின் அறைகூவல் என்னவென்றால், இந்த அமுதக்காலத்தின் அறைகூவல் என்னவென்றால், முக்த மாத்ரு பூமிக்கு, முக்த மாத்ரு பூமிக்கு, புதிய கௌரவம் தேவையே.  புது விழாவினுக்குப்புதிய உயிர்ப்பும் நமக்குத் தேவையே.   முக்த கீத ஒலிக்கென, முக்த கீத ஒலிக்கென புதிய ராகம் தேவையே.  புது விழாவினுக்குப்புதிய, உயிர்ப்பும் நமக்குத் தேவையே.  ஆகையினாலே தான், பாரதத்தின் எதிர்காலத்தினை, ஒளிமயமாக்கவல்ல, இந்தப் பணியிடமுமே கூட, அதேயளவு நவீனமானதாக இருக்க வேண்டும்.  புதியதாக இருக்க வேண்டும்.

நண்பர்களே ஒரு காலத்திலே, பாரதநாடு, உலகத்தின் அதிகபட்ச தன்னிறைவு உடைய, மற்றும் செழிப்புமிக்க நாடுகளின் வரிசையில் இடம் பெற்றிருந்தது.  பாரதத்தின் நகரங்கள் தொடங்கி மாளிகைகள் வரை, பாரதத்தின் கோயில்கள் தொடங்கி கடவுள்கள் வரை, பாரதத்தின் வாஸ்து, பாரதத்தினுடைய, நிபுணத்துவத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.  சிந்துசமவெளியின் நகரமைப்புத் தொடங்கி, மௌரியர்கள் காலத்துத் தூண்கள் தூபிகள் வரை, சோழ அரசர்கள் சமைத்த, மகத்தான ஆலயங்கள் தொடங்கி, நீர்நிலைகள் மற்றும் நீரணைகள் வரை, பாரதத்தின் திறமை, உலகெங்கிலுமிருந்தும் வரும் பயணிகளுக்கு, வியப்பை அளித்தது.  ஆனால், பலநூற்றாண்டுக்கால அடிமைத்தனமானது, நம்மிடமிருந்து நம்முடைய, இந்த கௌரவத்தைக் களவாண்டது.  இப்படியும் ஒரு காலகட்டம் வந்தது, அப்போது நாம், பிற நாடுகளில் செய்யப்பட்ட கட்டுமானங்களைப் பார்த்து, மதிமயங்கிப் போனோம்.  21ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புதிய பாரதம், பெரும் நம்பிக்கையுணர்வு, நிரம்பியிருக்கும் பாரதம்.   இப்போது, அந்த அடிமைத்தன எண்ணத்தை, விடுத்துப் பயணிக்கிறது.  இன்று பாரதம், பண்டைய காலத்தின் அந்த கௌரவமயமான பெருக்கினை, மீண்டும் ஒருமுறை, தன்பக்கமாகத் திருப்பி விடுகிறது.  மேலும் நாடாளுமன்றத்தின் இந்தப் புதிய கட்டிடம், இந்த முயற்சியின் உயிர்ப்புடைய… அடையாளமாக இருக்கிறது.  இன்று, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் காணும் வேளையில், நாட்டுமக்கள் அனைவரும், பெருமிதம் பொங்க இருக்கிறார்கள்.  இந்த அவையினிலே, மரபும் இருக்கிறது, வாஸ்துவும் இருக்கிறது.  இதிலே கலையும் இருக்கிறது, கலைத்திறனும் இருக்கிறது.  இதிலே கலாச்சாரமும் இருக்கிறது, அரசியல் சட்டத்தின் கண்ணியமும் இருக்கிறது. 

நீங்களே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், மக்களவையின் உள்ளார்ந்த அம்ஸத்தை….. இங்கேயும் பாருங்கள் இங்கேயும் பாருங்கள்.  தேசியப் பறவை, மயிலை ஆதாரமாகக் கொண்டது.  மாநிலங்களவையின் உள்ளர்ந்த அம்ஸம், தேசிய மலரான, தாமரையை ஆதாரமாகக் கொண்டது.  மேலும் அவையின் முற்றத்திலே, நம்முடைய தேசிய மரமான, ஆலமரமும் உண்டு.  நமது தேசத்தினுடைய, பல்வேறு பாகங்களின் பன்முகத்தன்மையை, இந்தப் புதிய கட்டிடமானது, தனக்குள்ளே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.  இதிலே, ராஜஸ்தானத்திலிருந்து தருவிக்கப்பட்ட கிரனைட் கற்கள், மற்றும் மணற்கற்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.  இங்கே நீங்கள் காணக்கூடிய மரவேலைப்பாடு, இது மஹாராஷ்டிரத்திலிருந்து வந்திருக்கிறது.  உபியினுடைய, பதோஹியின் கைவினைஞர்கள், தங்கள் கைகளினால் இந்தக் கம்பளங்களை நெய்திருக்கிறார்கள்.  ஒரு வகையிலே பார்த்தால், இந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு அணுவிலும், ஒரே பாரதம் உன்னத பாரதத்தினை நம்மால் காண முடியும்.  நண்பர்களே, அவையின் பழைய கட்டிடத்திலே, அனைவருக்குமே, தங்களுடைய செயல்களை நிறைவேற்றுவது என்பது, எத்தனை சிரமமானதாக இருந்து என்பதை, நாமனைவருமே நன்கறிவோம்.  தொழில்நுட்பத்தோடு தொடர்புடைய பிரச்சனைகள் இருந்தன.  அமர்வதோடு தொடர்புடைய பிரச்சனைகள் இருந்தன.  ஆகையினாலே தான், கடந்த ஒண்ணரை இரண்டு தசாப்தங்களாகவே இது குறித்த விவாதங்கள் நடைபெற்று வந்தன.  அதாவது தேசத்திற்கு, ஒரு புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கான தேவை இருக்கிறது என்று.  நாம் மேலும் ஒன்றையும் கவனிக்க வேண்டும்.  வரவிருக்கின்ற காலத்திலே, இருக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், அவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், அவர்கள் எங்கே அமர்வார்கள்?  ஆகையினாலே தான், இது காலத்தின் கட்டாயம், அதாவது நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தை உருவாக்க வேண்டும் என்பது.  எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, இந்த மகத்தான கட்டிடம், அதிநவீன வசதிகளோடு நிரம்பியிருக்கிறது.  நீங்களே கவனிக்கலாம், இந்தச் சமயம் இந்த அரங்கிலே, சூரியனின் கதிர்கள் நேரடியாக நுழைகின்றன.  மின்சாரம் மிகக்குறைவாகவே செலவாக வேண்டும், அனைத்துவிதமான அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் இருக்க வேண்டும், இவையனைத்தும் குறித்து இதிலே கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.

நண்பர்களே, இன்று காலையில் தான் நான், இந்த நாடாளுமன்றத்தை கட்டியெழுப்பிய, தொழிலாளர் சகோதரர்களின் ஒரு குழுவைச் சந்தித்தேன்.  இந்த நாடாளுமன்ற வளாகம் கிட்டத்தட்ட, 60,000, 60,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பணியைப் புரிந்திருக்கிறது.   அவர்கள் எல்லாம், இந்தப் புதிய கட்டிடத்திற்காக, தங்களுடைய வியர்வையைச் சிந்தியிருக்கின்றார்கள்.  எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது, இவர்களின் உழைப்பிற்கு அர்ப்பணிக்கும் வகையிலே, ஒரு டிஜிட்டல் கேலரியும் கூட, நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.  உலகிலே இப்படி முதன்முறையாக நடந்திருக்கலாம்.   நாடாளுமன்றத்தை உருவாக்குவதிலே, இப்போது அவர்களுடைய பங்களிப்பும் கூட, நீங்கா இடம் பிடித்து விட்டது.

நண்பர்களே, எந்த ஒரு வல்லுநரும், கடந்த 9 ஆண்டுகள் குறித்த மதிபிபீட்டைச் செய்தார் என்றால், அதிலே தெரிய வரும், இந்த 9 ஆண்டுகள், பாரதத்திலே, புத்தாக்கம் செய்யப்பட்டிருக்கிறது, ஏழைகள் நலனிலே செயல்பட்டிருக்கிறது என்பது.  இன்று நமக்கு, நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் எழுப்பப்பட்டதிலே பெருமிதம் இருக்கிறது.  அதே நேரம் எனக்கு, கடந்த 9 ஆண்டுகளிலே, ஏழைகளினுடைய, 4 கோடி இல்லங்கள் உருவாக்கப்பட்ட சந்தோஷமும் கூடவே இருக்கிறது.  இன்று நாம், இந்த மகத்தான கட்டிடத்தைக் கண்டு, நாம் தலை நிமிர்த்தும் வேளையிலே, என் மனதினிலே, கடந்த 9 ஆண்டுகளிலே கட்டப்பட்ட, 11 கோடி கழிப்பறைகள் குறித்தும் கூட, சந்தோஷம் இருக்கிறது.  இவை தாம், பெண்களின் கண்ணியத்தைக் காத்தளித்திருக்கின்றன.  அவர்களுடைய தலையை நிமிரச் செய்திருக்கின்றன.  இன்று நாம், இந்த நாடாளுமன்றத்திலே, வசதிகளைப் பற்றிப் பேசும் வேளையிலே, எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது, கடந்த இந்த 9 ஆண்டுகளிலே நாம், கிராமங்களை இணைத்து வைக்க, 4 இலட்சம் கிலோமீட்டர்களுக்கும் அதிகமான சாலைகளை உருவாக்கியிருக்கிறோம்.  இன்று நாம் இந்த சூழலுக்கு நேசமான கட்டிடத்தைக் கண்டும் மகிழும் வேளையிலே, எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது, அதாவது நாம், ஒவ்வொரு சொட்டு நீரையும் பாதுகாக்க, 50,000த்திற்கும் மேற்பட்ட, அமுத நீர்நிலைகளை உருவாக்கியிருக்கிறோம்.  இன்று நாம் இந்த புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின், மக்களவை மாநிலங்களவைகளைப் பார்த்து, கொண்டாடும் வேளையிலே, எனக்கு சந்தோஷமாக இருக்கிறது, அதாவது நாம், 30,000த்திற்கும் மேற்பட்ட, புதிய பஞ்சாயத்துக் கட்டிடங்களையும் உருவாக்கியிருக்கிறோம்.  அதாவது, பஞ்சாயத்துக் கட்டிடங்கள் தொடங்கி நாடாளுமன்றக் கட்டிடம் வரை, நம்முடைய அர்ப்பணிப்பு, ஒன்றே ஒன்று தான்.  நம்முடைய உத்வேகம், ஒன்றே ஒன்று தான்.  நாட்டின் முன்னேற்றம்.  நாட்டுமக்களின் முன்னேற்றம். 

நண்பர்களே, உங்களுக்கு கவனமிருக்கலாம்.  ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று, செங்கோட்டையிலிருந்து நான் கூறியிருந்தேன்.   இது தான் வேளை.  சரியான வேளை.  ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும், இப்படிப்பட்ட ஒரு வேளை வரும், அப்போது தேசத்தின் உணர்வு, புதுத்தெம்போடு விழிப்படையும்.  பாரதத்திலே, சுதந்திரத்திற்கு 25 ஆண்டுகள் முன்பாக 47க்கு 25 ஆண்டுகள் முன்பான காலம் அது.  சுதந்திரத்திற்கு 25 ஆண்டுகள் முன்பாக இப்படிப்பட்ட காலம் வந்தது.  காந்தியடிகளின், ஒத்துழையாமை இயக்கம், தேசம் முழுவதிலும், ஒரு நம்பிக்கையை நிரப்பியிருந்தது.  காந்தியடிகள், சுயராஜ்ஜியம் என்ற உறுதிப்பாட்டோடு, பாரதநாட்டவர் அனைவரையும் இணைத்து விட்டார்கள்.  அந்தக் காலகட்டத்திலே, ஒவ்வொரு இந்தியரும், சுதந்திரத்திற்காக, உடல்பொருள் ஆவியோடு கலந்து விட்டார்கள்.  இதன் விளைவினை நாம், 1947இலே, பாரதத்தின் சுதந்திரம் என்ற வகையிலே பார்த்தோம்.  சுதந்திரத்தின் இந்த அமுதக்காலமுமே கூட, பாரதத்தின் வரலாற்றிலே அப்படிப்பட்ட ஒரு காலகட்டம் தான்.  இன்றிலிருந்து 5 ஆண்டுகள் கழித்து, பாரதம், தன்னுடைய சுதந்திரத்தின், 100 ஆண்டுகளை நிறைவு செய்யும்.  நம் வசம் கூட, 25 ஆண்டுகள் என்ற காலகட்டம் இருக்கிறது.   இந்த 25 ஆண்டுகளிலே நாம் இணைந்து, பாரதத்தை, வளர்ந்த நாடாக ஆக்க வேண்டும்.  இலக்கு பெரியது.  இலக்கு கடினமானதும் கூட.  ஆனால் நாட்டுமக்கள் ஒவ்வொருவரும், இதன் பொருட்டு, உடல்பொருளாவியை அளிக்க வேண்டும், புதிய சபதமேற்க வேண்டும் புதிய உறுதியேற்க வேண்டும் புதிய வேகம் பெற வேண்டும்.  சரித்திரம் சாட்சியாக இருக்கிறது, அதாவது பாரதீயர்களான நம்முடைய நம்பிக்கை, பாரத நாட்டோடு மட்டுமே குறுகி இருப்பதில்லை.  நமது சுதந்திரப் போராட்டமானது, மேலும் பல நாடுகளிலுமே, அந்தக் காலத்திலே, ஒரு புதிய விழிப்புணர்வை எழுப்பியிருந்தது.  நம்முடைய சுதந்திரப் போராட்டத்தாலே, பாரதம் சுதந்திரம் அடைந்தது தான்.  அதோடு கூடவே, உலகின் இன்னும் அநேக நாடுகளும், சுதந்திரப் பாதையில் பயணித்தன.  பாரதத்தின் நம்பிக்கையானது, பிற நாடுகளுக்கும் கூட, பிற நாடுகளின் நம்பிக்கைக்கும் கூட, உதவிகரமாக இருந்தது.  அந்த வகையிலே, பாரதம் போன்ற பன்முகத்தன்மை நிரம்பிய தேசம், இத்தனை பெரிய மக்கட்தொகை கொண்ட தேசம், இத்தனை அதிக சவால்களோடு போராடும் தேசம், ஒரு நம்பிக்கையோடு முன்னேறிச் செல்லும் போது, அப்போது இதனால், உலகின் அநேக தேசங்களுக்கும் உத்வேகம் பிறப்பெடுக்கிறது.  பாரதத்தின் அனைத்து வெற்றிகளும், இனிவரும் நாட்களிலே, உலகின் பல்வேறு நிலப்பகுதிகளிலே, பல்வேறு தேசங்களின் வெற்றியினுடைய, உத்வேகத்தின் காரணமாகப் பார்க்கப்படும்.  இன்று நமது பாரதம், விரைவாக ஏழ்மையைத் தொலைக்கும் வேளையில், அப்போது இது, பல நாடுகளுக்கும், ஏழ்மையிலிருந்து வெளிவரும் கருத்தூக்கத்தையும் அளிக்கிறது.  வளர்ந்த நாடாகும் பாரதத்தின் உறுதிப்பாடு, மேலும் பல நாடுகளின் உறுதிப்பாடாக ஆகும்.  ஆகையினாலே, பாரதத்தின் பொறுப்பானது, மேலும் பெரியதாக ஆகிறது.

மேலும் நண்பர்களே, வெற்றிக்கான முதல் விதிமுறை, வெற்றிக்கான முதல் விதிமுறை, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை தான்.  இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், இந்த நம்பிக்கைக்குப் புதிய பலத்தை அளிக்க இருக்கிறது.  வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதில், நம்மனைவருக்கும் உத்வேக காரணியாக இருக்கும்.  இந்த நாடாளுமன்றக் கட்டிடம், ஒவ்வொரு இந்தியரின் கடமையுணர்வை விழிப்படையச் செய்யும்.  எனக்கு நம்பிக்கை இருக்கிறது, இந்த நாடாளுமன்றத்திலே,  அமரவிருக்கும் அவை உறுப்பினர்கள், இவர்கள் புதிய உத்வேகத்தோடு, மக்களாட்சி முறைக்குப் புதிய திசையளிக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.  நாம், தேசத்திற்கே முதன்மை என்ற உணர்வோடு முன்னேறிச் செல்ல வேண்டும்.  இதம் ராஷ்ட்ராய, இதம் ந மம.  நாம் கடமைப் பாதையை அனைத்திற்கும் மேலாதாகக் கொள்ள வேண்டும்.   कर्तव्यमेव कर्तव्यं, अकर्तव्यं, न कर्तव्यं.  நாம், நமது வழிமுறைகளால் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.  यद्यदा-चरति श्रेष्ठः तत्तदेव इतरो जनः.  நாம் தொடர்ந்து, நம்மிடத்திலே மேம்பாடுகளை ஏற்படுத்தி வர வேண்டும்.   उद्धरेत् आत्मना, आत्मानम्।  நாம், நமது புதிய பாதையை நாமே அமைத்துக் கொள்ள வேண்டும். अप्प दीपो भव:  நாம், நம்மையே அர்ப்பணிக்க வேண்டும், சமர்ப்பிக்க வேண்டும். तपसों हि परम नास्ति, तपसा विन्दते महत।    நாம் மக்கள் நலன் ஒன்றையே, நமது வாழ்க்கை மந்திரமாகக் கொள்ள வேண்டும்.  लोकहितं मम करणीयम्, நாம் நாடாளுமன்றத்தின் இந்தப் புதிய கட்டிடத்திலே, நமது கடமைகளை நாம் நேர்மையாக நிறைவேற்றும் போது, நாட்டுமக்களிடையேயும் கூட புதிய உத்வேகம் பிறக்கும். 

நண்பர்களே, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு, இந்தப் புதிய நாடாளுமன்றமானது, ஒரு புதிய சக்தியை, ஒரு புதிய பலத்தினை அளிக்க இருக்கிறது.  நமது தொழிலாளர்கள், தங்களுடைய வியர்வை சிந்த, இந்த நாடாளுமன்றத்தை, இத்தனை மகத்தானதாக ஆக்கியிருக்கிறார்கள்.  இப்போது, உறுப்பினர்களான நம்மனைவரின் கடமை, இதனை, நம்முடைய அர்ப்பணிப்பால், மேலும் அதிக திவ்யமானதாக ஆக்குவோம்.  ஒரு நாடு என்ற வகையிலே, நாமனைவரும், 140 கோடி பாரதீயர்களின் உறுதிப்பாடு மட்டுமே, இந்தப் புதிய நாடாளுமன்றத்தின் பிராண பிரதிஷ்டை ஆகும்.  இங்கே மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முடிவும், வரவிருக்கும் நூற்றாண்டுகளை மெருகூட்ட செம்மையாக்க வல்லது.  இங்கே மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முடிவும், வரவிருக்கும் தலைமுறைகளுக்கு அதிகாரத்தை அளிக்கும்.  இங்கே மேற்கொள்ளப்படும் ஒவொரு முடிவும், பாரதத்தின் பிரகாசமான எதிர்காலத்தின் ஆதாரமாக மாறும்.  ஏழைகள், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், என சமூகத்தின் அனைத்து பின் தங்கிய குடும்பத்தின், அதிகாரமளித்தலும், பின் தங்கியோர் முன்னேறும் பாதையும், இதைக் கடந்தே செல்கிறது. இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லும், ஒவ்வொரு சுவரும், இதன் ஒவ்வொரு அணுவும், ஏழைகளின் நலனுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது.  அடுத்த 25 ஆண்டுகளிலே, நாடாளுமன்றத்தின் இந்தப் புதிய கட்டிடத்தில் ஏற்படுத்தப்படும் புதிய சட்டங்கள், பாரதத்தை வளர்ந்த பாரதமாக ஆக்கும். இந்த நாடாளுமன்றத்தில் உருவாக்கப்படும் சட்டங்கள், பாரதத்தை ஏழ்மையிலிருந்து வெளியே கொண்டு செல்வதில் உதவியாக இருக்கும்.  இந்த நாடாளுமன்றத்தில் உருவாக்கப்படும் சட்டங்கள், தேசத்தின் இளைஞர்களுக்குப் பெண்களுக்குப் புதிய சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுக்கும்.  எனக்கு நம்பிக்கை இருக்கிறது, நாடாளுமன்றத்தின் இந்தப் புதிய கட்டிடம், புதிய பாரதத்தின் உருவாக்கத்தின் ஆதாரமாக விளங்கும். ஒரு தன்னிறைவான சக்திபடைத்த வளர்ந்த பாரதம், நீதி, நியாயம், சத்தியம், கண்ணியம் மற்றும் கடமைப்பாதையிலே, மேலும் அதிக சக்தியோடு பயணிக்கும் பாரதம். நான் பாரதவாசிகள் அனைவருக்கும், புதிய நாடாளுமன்றத்தின் பொருட்டு, மீண்டும் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.  நன்றி!

  • தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version