லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் திருமணம் முடிந்த மறுநாளே மணமக்கள் இருவரும் மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து ஒரே சிதையில் அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. இது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேசத்தின் பரூச் மாவட்டத்தில் உள்ள கைசர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பிரதாப் யாதவ் (வயது 22) என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா (வயது 20) என்ற பெண்ணை கடந்த மே மாதம் 30ஆம் தேதி உறவினர்கள் புடை சூழ திருமணம் செய்து கொண்டார். வரவேற்பு, ஊர்வலம், விருந்து உபசரிப்பு எல்லாம் உற்சாகமாகக் கழிந்த பின்னர், திருமணம் முடிந்த மறுநாளான மே 31ம் தேதி மணமகன் பிரதாப் வீட்டிற்கு மணமக்கள் இருவரும் வந்தனர்.
குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உற்சாகமாக அன்றைய பொழுதைக் கழித்த மணமக்கள் அன்றிரவு துாங்கச் சென்றனர். அதன் பின், மறுநாள் மதியம் வரை இவர்கள் இருந்த அறைக் கதவு திறக்கப் படவில்லை. என்னதான் திருமண அலுப்பில் உறங்கினாலும் மதியம் வரையிலுமா உறங்கிக் கொண்டிருப்பார்கள் என்று சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே மணமக்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் படுக்கயில் சடலமாகக் கிடந்தது உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மணமக்கள் இருவரின் உடல்களும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே உடற்கூராய்வு செய்த பின்னர் அளிக்கப் பட்ட அறிக்கையின்படி, மணமக்கள் இருவரும் ஒரே நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. இது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் உறவினர்கள் முன்னிலையில் இருவரின் உடல்களும் ஒரே சிதையில் வைத்து எரிக்கப்பட்டன.
மணமக்கள் இருவருக்கும் இதய நோய் பிரச்னைகள் எதுவும் இல்லாத நிலையில், ஒரே நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது பெரும் கேள்விக் குறியாகவே இருந்தது. இருவரது உடல்களின் முக்கிய உறுப்புகள் வழக்கு விசாரணைக்காக சேகரிக்கப்பட்டு, லக்னோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.