ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, 2024 ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. சுமார் ₹ 1.8 லட்சம் கோடி மதிப்புள்ள ₹ 2,000 நோட்டுகள் மீண்டும் வங்கி முறைக்கு திரும்பியிருப்பதாக RBI ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறினார்.
மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆர்பிஐ நிதிக் கொள்கை குறித்து கூறியபோது…
சர்வதேச பொருளாதார நிலை சிக்கலில் இருந்தாலும், இந்திய பொருளாதாரம் மற்றும் நிதித்துறை வலிமையாகவும், துடிப்புடனும் உள்ளது என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
ரெபோ வட்டி வகிதத்தில் மாற்றம் கிடையாது என்று குறிப்பிட்ட அவர், அது 6.5 சதவீதமாகவே நீடிக்கிறது என்றார். மேலும், பணவீக்க உயர்வை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று குறிப்பிட்ட அவர், மொத்த பணவீக்க உயர்வு 4 சதவீதமாக நீடித்து வருகிறது. ஆண்டு முழுவதும் இப்படியே இருக்கும் என்றே கணித்துள்ளோம் என குறிப்பிட்டார்.
உலக அரசியல் நிலவரம் காரணமாக, பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது என்றும், உள்நாட்டு தேவை நிலை, வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கிறது, அந்நிய செலாவணி போதுமான அளவு கையிருப்பில் உள்ளது என்று நம்பிக்கை தரும் தகவல்களைக் குறிப்பிட்டார்.
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும். 2ம் காலாண்டில் 6.5 சதவீதமாகவும், 3ம் காலாண்டில் 6 சதவீதமாகவும், 4ம் நிதியாண்டில் 5.7 சதவீதமாகவும் இருக்கும் என்றும், 2024ம் நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சுமார் 50% அல்லது ₹1.8 லட்சம் கோடி மதிப்புள்ள ₹2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துவிட்டன என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார்.
புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 50% வங்கிகளில் திரும்பி வந்துவிட்டது. இவற்றை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக மத்திய வங்கி அறிவித்த பிறகு இதுவரை ₹1.8 லட்சம் கோடி மதிப்புள்ள ₹2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துள்ளதாக அவர் கூறினார். இது மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் 3.62 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகளில் 50% ஆகும்.
எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, 85% ரூபாய் 2,000 கரன்சி நோட்டுகள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட்டாக திரும்பி வருவதாக தாஸ் கூறினார்.