- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் ஜம்முவில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம்! துணைநிலை ஆளுநர் பங்கேற்பு!

ஜம்முவில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம்! துணைநிலை ஆளுநர் பங்கேற்பு!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பாலாஜி கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் தங்கள் நகரங்களில் உள்ள இந்தக் கோயில்களுக்குச் செல்லலாம் என்றார் அவர்.

#image_title
venkateshwara temple in jammu

ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலைப் போல், நாடு முழுதும் கோவில்களைக் கட்ட முடிவு செய்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதற்கான பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறது.

அதன்படி சென்னை, புதுடில்லி, ஹைதராபாத், புவனேஸ்வர், கன்னியாகுமரியைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலத்துக்கு வெளியே திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆறாவது கோயிலை ஜம்முவில் கட்டியுள்ளது. இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நேற்று நடைபெற்றது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முவில் அமைந்துள்ள இந்தத் திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகத்துக்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

ஜம்முவில் உள்ள மசீன் கிராமத்திலிருக்கும் தாவி நதிக்கரையில் 62 ஏக்கர் நிலத்தில், 30 கோடி ரூபாய் செலவில் ஏழுமலையானுக்கு கோவில் கட்டப்பட்டு வந்தது. இரண்டு ஆண்டுகளாக நடந்த பணிகள் முடிவடைந்ததை அடுத்து, தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்துடன் கட்டப்பட்ட ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை விமரிசையாக நடந்தது. காலை 10 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. இந்த விழாவில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், கிஷன் ரெட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, அர்ச்சகர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“ஏழுமலையான் கோவில், மாநிலத்தில் உள்ள மத சுற்றுலா தலங்களை வலுப்படுத்துவதுடன், ஆன்மிக சுற்றுலாவுக்கு ஊக்கமளித்து, பொருளாதாரத்தை உயர்த்தி புதிய வேலைவாய்ப்புகளை வழங்கும்,” என, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

ALSO READ:  செங்கோட்டையில் இலவச இயற்கை யோகா மருத்துவ முகாம்!
venkateshwara temple in jammu2

“ஜம்மு காஷ்மீர் மற்றும் நாட்டின் சனாதன தர்மத்தின் பயணத்தில் இது ஒரு வரலாற்று தருணம். கோயில் பக்தர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது” என்று திறப்பு விழாவில் உரையாற்றிய சின்ஹா கூறினார்.

மேலும், மாதா வைஷ்ணவி தேவி ஆலய வாரியம், ஸ்ரீ கைலாஷ் ஜோதிஷ் மற்றும் வேதிக் சன்ஸ்தான் மற்றும் பல நிறுவனங்கள் வேத கலாச்சாரம் மற்றும் மரபுகளை மேம்படுத்த மகத்தான பங்களிப்புகளை செய்து வருகின்றன என்றார். திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஒரு வேத பாடசாலை மற்றும் சுகாதார மையத்தை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.

ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் விஷ்ணுவின் வடிவமான வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலுக்கு தரிசனம் செய்ய குவிந்தனர். தொடக்க விழாவில் ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சில தவிர்க்க முடியாத வேலைகள் காரணமாக, அவரால் எங்களுடன் சேர முடியவில்லை. அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார், மேலும் ஜம்முவில் தனது எதிர்கால நிகழ்ச்சி ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸ்வாமியை தரிசனம் செய்த பிறகே தொடங்கும் என்று என்னிடம் கூறினார் என்றார் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா.

ALSO READ:  மழை வேண்டி உசிலம்பட்டி அருகே பெருமாள் கோயிலில் மாபெரும் அன்னதானம்!

கிஷன் ரெட்டி பேசிய போது, மக்கள், ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மற்றும் ஸ்ரீ வேங்கடேஸ்வராவின் அனைத்து பக்தர்களுக்கும் வாழ்த்து தெரிவிப்பதாகவும், ஜம்முவில் உள்ள கோயில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒன்று என்ற செய்தியை உலகுக்கு எடுத்துச் செல்லும். இது ஆன்மீகம் மற்றும் சனாதன மரபுகளின் மையமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

“ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் பிரகாசமான எதிர்காலத்தை எதிர்நோக்கி உள்ளது. சமூக-பொருளாதார வளர்ச்சியின் பணிக்கு பங்களிப்பது மற்றும் சாமானியர்களின் பங்கேற்பையும் அதிகாரமளிப்பையும் உறுதி செய்வது எங்கள் கூட்டுப் பொறுப்பாகும்,”என்று அவர் கூறினார்.

இதேபோல், இது வேற்றுமையில் ஒற்றுமை என்பதன் கொண்டாட்டம் என்று டாக்டர் சிங் கூறினார். “மொழி மற்றும் கலாச்சாரம் எதுவாக இருந்தாலும், நமது நம்பிக்கை மற்றும் பக்தி, இதயத்தின் தூய்மை மற்றும் நம்பிக்கையின் நிலத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவை ஒன்றுதான்” என்று அவர் கூறினார்.

கோவில்களை அமைப்பதன் மூலம் நாடு முழுவதும் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு மதிப்பு சேர்க்கிறது. இது நம்பிக்கையின் மையமாக மட்டுமல்லாமல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாகவும் இருக்கும். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் வளர்ச்சிப் பயணத்தில் இது ஒரு வரலாற்று நாள், புதிய மைல்கல்லை எழுதும் என்று டாக்டர் சிங் பேசினார்.

ALSO READ:  திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம்? ஹிந்துக்கள் அதிர்ச்சி!

“ஜம்மு காஷ்மீரில் இந்தக் கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இரண்டு வருட காலத்தில் இது நிறைவடைந்துள்ளது. இப்போது மக்கள் ஜம்முவில் பிரார்த்தனையைச் செலுத்தலாம். மாதா வைஷ்ணோதேவிக்கு செல்பவர்கள் இங்கு தரிசனம் செய்யலாம்” என்று டிடிடி தலைவர் ஒய் வி சுபா ரெட்டி கூறினார்.

யூனியன் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா, பாபா அமர்நாத், மாதா வைஷ்ணோ தேவி, மாதா சாரதா, ஷிவ் கோரி, ஆதி சங்கராச்சாரியார் கோயில், ஹஸ்ரத்பால் மற்றும் பிற முக்கிய மத ஸ்தலங்கள் மற்றும் சூஃபி கோவில்கள் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஜம்மு காஷ்மீரை கலாசார மையமாகவும் மேம்படுத்தும் நாட்டின் ஆன்மீக தலைநகரம் ஆகும் என்றார் அவர்.

ரூ.30 கோடி மதிப்பில் 62 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட இக்கோயில், ஜம்மு பகுதியில் உள்ள மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக உள்ளது. இது, யூனியன் பிரதேசத்தில் மத மற்றும் புனித யாத்திரை சுற்றுலாவை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்முவில் உள்ள கோவிலை ஆய்வு செய்த ரெட்டி, “திருமலையில் எந்த முறை மற்றும் நடைமுறை பின்பற்றப்படுகிறதோ, அதுவும் இங்கேயும் பின்பற்றப்படும்” என்றார்.

கோவிலின் கட்டுமானமானது நாடு முழுவதும் பல பாலாஜி கோவில்களை நிறுவுவதற்கான திதிதேவஸ்தானத்தின் பரந்த முயற்சியின் ஒரு பகுதி. டிடிடி நாடு முழுவதும் பாலாஜி கோவில்களை கட்டி வருகிறது. எனவே, ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பாலாஜி கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் தங்கள் நகரங்களில் உள்ள இந்தக் கோயில்களுக்குச் செல்லலாம் என்றார் அவர்.

தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version