
–முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் —
ஜூன் மாதம் 4ஆம் நாள் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் மே மாத இறுதியில் அரபிக்கடலில் ஒரு புயல் உருவாக சாத்தியக்கூறுகள் உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்ததைப் போல ஜூன் 1 ஆம் தேதி, அரபிக் கடலில் புயல் தோன்ற ஏதுவாக காற்றுச் சுழற்சி உருவானது. குளோபல் ஃபோர்காஸ்ட் சிஸ்டம் (GFS) மற்றும் நடுத்தர தூர வானிலை முன்னறிவிப்புகளுக்கான ஐரோப்பிய மையம் (European Centre for Medium-Range Weather Forecasts – ECMWF) போன்ற உலகளாவிய கணினி முன்னறிவிப்பு மாதிரிகள் புயல் உருவாகும் சாத்தியத்தை பரிந்துரைத்தன. ஜூன் 5 அன்று அரபிக்கடலில் ஒரு காற்றுச் சுழற்சி உருவானது.
அதே நாளில், இந்தச் சுழற்சியின் விளைவாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (low pressure area) உருவானது. அடுத்த நாள், அது கணிசமாக தீவிரமடைந்து ஒரு காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக் (depression) வலுப்பெற்றது.
கூட்டு டைபூன் எச்சரிக்கை மையம் (Joint Typoon Warning Centre – JTWC) கணினி வழிகாட்டல்கள் புயல் உருவானதாக அறிவித்தபோதும் இந்திய வானிலை மையம் (IMD) காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (deep depression), அதைத் தொடர்ந்து புயலாகவும் (cyclone) மாற்றியது. இது பிபோர்ஜாய் என்று பெயர் பெற்றது. பிபர்ஜாய் என்ற பெயர் வங்கதேசம் தந்த பெயராகும்; இதன் பொருள் பேரழிவு.
JTWC பின்னர் கணினியில் வழிகாட்டல்கள்படி, இதனை புயல்-02A என வகைப்படுத்தியது. தாழ்நிலை சுழற்சி மையத்தை (Low level circulation centre – LLCC) மறைக்கும் மத்திய அடர்த்தியான மேகமூட்டத்தில் (Central Dense Organisation – CDO) இடிமுகில்கள் உருவாகத்தொடங்கின.
ஆறு மணி நேரம் கழித்து, அதன் வெப்பச்சலனம் ஒரு புதிய கண்ணுடன் CDO ஆக பரிணமித்ததால், பிபோர்ஜாய் (Biparjoy) சீராக வலுவடைந்து, மணிக்கு 130 கிலோமீட்டர் வேக காற்றுத் தொகுதியைப் பெற்றது. இருப்பினும் ஜூன் 7 அன்று 00:00 UTC அளவில், IMD பிபோர்ஜாய், தீவிரப் புயலாக (severe cyclonic storm) வலுப்பெற்றது எனச் சொன்னது.
இச்சமயத்தில் பிபோர்ஜாய் தீவிரப் புயலின் மேகங்களின் உச்சியிலிருந்து காற்று விரிவடைந்தது. இதன் விளைவாக புயலில் இருந்து மேல்-நிலை வெளியேற்றம் மற்றும் தாழ்நிலை காற்று குவிதல் அதிகரித்து, 07.06.2023 அன்று காலை 1130 மணிக்குள் மிகத் தீவிரப் புயலாக (very severe cyclonic storm) மேம்படுத்தப்பட்டது.
இந்நிலையில், உயர் மட்டத்தில் ஏற்பட்ட மிதமான கிழக்கு செங்குத்து காற்றின் கத்தரிப்பு காரணமாக சூறாவளி வெட்டப்பட்டது. இதனை ஆங்கிலத்தில் ஷியர் (shear) எனச் சொல்வார்கள். இதனால் புயல் படிப்படியாக வலுவிழக்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால் அதற்கு எதிர்மாறாக பிபோர்ஜாய் வேகமாக தீவிரமடைந்து ஜூன் 11 அன்று சில மணி நேரங்கள் அதி தீவிரப் புயலாக (extremely severe cyclonic storm) அதன் உச்ச தீவிரத்தை அடைந்தது, அதிகபட்சமாக மணிக்கு 165 கிலோமீட்டர் காற்று வேகத்தியப் பெற்றது.
அதன் பின்னர் வெட்டு குறைந்துள்ளது; வெப்பச்சலன அமைப்பு மற்றும் பரப்பளவு அதிகரித்தது; தெற்குப் பகுதியில் செயற்கைக்கோள் படங்களில் பேண்டிங் அம்சங்கள் பெருகிய முறையில் தெளிவாகின்றன.
தற்போது அதாவது இன்று, 14 ஜூன், 2023 மாலை 1730 மணி அளவில் குஜராத்தில் உள்ள பூஜ் நகர புயல் எச்சரிக்கை ராடார் அடிப்படையிலும், செயற்கைகோள் படங்களின் அடிப்படையிலும் பிபோர்ஜாய் மிகத் தீவிரப் புயல் (very severe cyclonic storm) குஜராத், போர்பந்தருக்கு மேற்கே சுமார் 310 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது; கடந்த ஆறு மணி நேரமாக மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து வருகிறாது; புயலுக்குள் செல்லும் காற்று நிலப்பகுதிகளின் வழியே செல்வதால், புயல் மெதுவாக வலுவிழந்து வருகிறது.
இப்புயல் நாளை மாலை (சுமார் 1730 மணி அளவில்) குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே கரையைக் கடக்க வாய்புள்ளது. அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 120 முதல் 130 கிலோமீட்டர் வரை வீசலாம்.
குஜராத்தில் கட்ச், தேவபூமி துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர், மோர்பி, ஜுனாகட், ராஜ்கோட் ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்படலாம்.