தெலுங்கில் : பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் : ராஜி ரகுநாதன்
- குவிந்த எதிரி நாடுகளின் வியூகங்களை அடித்துத் துரத்தி நம் தேசத்தின் பாதுகாப்பு அமைப்பை வலுவாக்குவது,
- படைவீரர்களின் பாதுகாப்பை அதிகப்படுத்துவது,
- அதிநவீன தொழில்நுட்பப் பாதுகாப்பு முறையில் பாதுகாப்புத் துறையைக் கட்டமைப்பது,
- நாட்டின் முழுமையையும் ஒற்றுமையையும் காப்பாற்றுவது,
- உலக நாடுகளில் தேசத்தின் கௌரவத்தை மேம்படுத்துவது,
- தேசத்தில் சாமானிய குடிமகனுக்குக் கூட தொழில்நுட்பம் கைவசம் இருப்பது,
- பொருளாதாரத் துறையை திடப்படுத்துவது,
- அமைதியும் பாதுகாப்பும் ஏற்படுத்துவது,
- விவசாய, வாணிப, வியாபாரத் துறைகளை பலப்படுத்துவது,
- நூறாண்டு காலங்களாக தீர்க்கப்படாமல் விவாதத்திற்கு உட்பட்ட பண்பாட்டுச் சின்னங்களை புனர் நிர்மாணம் செய்வது,
- மதங்களை தட்டிக் கொடுப்பதை விட்டு அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் முன்னேறுவதை நோக்கமாகக் கொள்வது,
- பிறர் வசத்தில் இருந்து வெளிவந்து சுய முழுமையை சாதிப்பது,
- மீண்டும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வஞ்சனையோ சதித்திட்டமோ ஆக்கிரமங்களோ பற்றி யோசிக்காமல் இருப்பது,
- ஒவ்வொரு முக்கியமான துறைகளிலும் நேர்மையானவர்களையும் சாமர்த்தியம் மிகுந்தவர்களையும் தேச முன்னேற்றத்தை சிந்திப்பவர்களையும் நியமிப்பது…
- — இப்படிப்பட்ட நல்ல குணங்களை சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.
இதனால் தேசம் பன்முகப்பட்ட அளவில் உலகிற்சிறந்த அற்புதமான முன்னேறும் தேசமாக வளருகிறது என்ற உண்மையை மறுக்க முடியாது.
ஆனால் தானாக முன்னேறும் பாரதத்தின் வளர்ச்சியையும் முன்னோடி நாடாக உலகில் உயர்வதையும் பொறுக்க இயலாத பகை நாடுகளும் மேல் நாடுகளும் இந்தியாவின் நிலைபெற்ற தன்மையைத் தளர்த்த வேண்டும் என்று தந்திர முயற்சிகளைச் செய்கிறார்கள்.
இவ்வாறு உறுதிப்பாட்டோடு இந்தியா வளர்ச்சி அடைந்தால் தம் மத அரசியல் இனி செல்லுபடியாகாது என்று எண்ணி பிறநாட்டு மத அரசாங்கங்களின் பண உதவியோடு இங்குள்ள மத வெறியர்களும் தீவிரவாத, பயங்கரவாத அமைப்புகளும் கலவரங்களைத் தூண்டி விடுகிறார்கள்.
தேசத்தின் போக்குவரத்து அமைப்பிகளிலும் சாலை – ரயில்வே மார்க்கங்களிலும் அழிவுகளையும் இம்சைகளையும் செய்வதோடுகூட மதத் தொடர்பான தாக்குதல்களுக்கும் கற்களை வீசுவதற்கும் முன் வருகிறார்கள்.
பதவி தாகம் கொண்ட ஊழல் தலைவர்களும் சில மாநிலக் கட்சிகளும் பிற மத தீவிரவாதிகளோடு கை கோர்த்து தேச முன்னேற்ற வாதத்தை, ஹிந்து வாதமாக பிரச்சாரம் செய்து ஹிந்துக்கள் மீது துவேஷத்தைத் தூண்டிவிட்டு அதன் மூலம் ஹிந்துவல்லாத பிற மதங்களின் உதவியைப் பெறும் நோக்கத்தில் மூழ்கியுள்ளார்கள்.
வெளிநாடுகளில் உள்ள தீவிர, பயங்கரவாதங்களின் உதவியைப் பெற்று, அவர்களின் வரவேற்பின் மூலம் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சொந்த தேம் குறித்து தீய பிரச்சாரத்தையும் அவதூறுகளையும் பரவச் செய்வதற்கும் பின்வாங்குவதில்லை.
உண்மைக்குப் புறம்பானவற்றையும் பொய்களையும் வெட்கமின்றி ஆடம்பரமாக அழுத்திக் கூறும் சாகசத்தைச் செய்கிறார்கள்.
இந்த அதிகாரப் பிரியர்களின் ஆணவம், தேசத்தின் புகழுக்கு மாசு கற்பிப்பதோடு தேசத்தின் நல்லமைப்பு ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி, இடிந்து விழும் ஆபத்தான குறிகளைக் காட்டுகிறது.
கூட்டு சேர்ந்த தேசிய எதிர்பாளர்களின் தரப்பில் நின்று பத்திரிக்கைத் துறையின் பஜனை கோஷ்டியும் உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கே முன்னுரிமையளித்து உண்மையைப் புறந்தள்ளி, குலம், இனம், வர்க்கம் போன்றவற்றின் வாதங்களையே உற்சாகப்படுகின்றன.
இந்தப் பின்னணியில் தேச குடிமக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கவனித்தால்….
தேசம் துண்டு துண்டாக ஆனாலும், முன்னேற்றத்திற்கு தடை ஏற்பட்டாலும் பரவாயில்லை. தம் மதமே நாட்டை ஆள வேண்டும் என்று எண்ணும் ஹிந்துவல்லாத பிறரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தேச நலனை விரும்பும் தேச பக்திக்கு ‘ஹிந்துத்துவா’ முத்திரை குத்தி நிந்தையும் குற்றச்சாட்டுகளும் பரப்புவதற்கு தயாராகிறார்கள். கலவரங்களைத் தூண்டுகிறார்கள்.
ஹிந்துக்களில் பலர் உதாசீனமாகவும் ஒதுங்கியும் அலட்சியமாகவும் இருக்கிறார்கள். மேலும் சிலர் அரசியல் ஆதாயத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கும் சுயநலவாதிகளாக உள்ளார்கள். ஓட்டு போடாதவர்கள் சிலர் என்றால் இலவசங்களுக்காகவும், மதுவுக்காகவும் ஆசைப்படுபவர்கள், நோட்டுக்கு ஓட்டு விற்பவர்கள் மேலும் சிலர்.
ஒவ்வொரு பிற மத அலுவலகமும் அரசியல் செயல்பாடுகளில் மூழ்கி தம்மதத்தவரே அனைத்து துறைகளிலும் இருப்பதற்கும் அதிகாரத்தைப் பிடிப்பதற்கும் ஏதுவாக மதத்தை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் மூழ்கியுள்ளார்கள். தங்களின் மத ஆதாயத்தை அதற்குப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் ஹிந்து ஆலயங்களில் தர்மப் பிரச்சாரமோ போதனைகளோ எதுவும் நடப்பதில்லை.
அதோடு பிறமதங்களை திருப்திபடுத்துவதற்காக ஹிந்து மதத்தை பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு இருக்கும் தலைவரகள் ஆளும் அரசுகளின் கைகளில் ஆலய அமைப்பு சிக்கியுள்ளது. ஆலயத்தின் ஆதாயங்கள் அக்கிரம வழியில் அரசியல் தலைவர்களுக்கும் பிற மதத்தவருக்கும் சென்று சேர்கின்றன. ஹிந்து ஆலயங்களில் ஹிந்து மதத்தின் வளச்சிக்கோ பாதுகாப்புக்கோ எடுக்கும் முயற்சிகள் எதுவுமில்லை.
பொருளாத வலிமை இல்லாத தன்னார்வு அமைப்புகளைச் சேர்ந்த சிலர் மட்டுமே சோசியல் மீடியாவில் வாதிப்பது, ஏதாவது பரிஷத்தின் நிழலிலோ சங்கத்தின் மறைவிலோ ஒளிந்து வீண் நிகழ்ச்சிகள் நடத்துவது போன்றவற்றை மட்டுமே காண முடிகிறது. ஹிந்துக்களில் சிலருக்கு இன்னுமும் பரிஷத், சங்க் போன்றவற்றின் மீது புரிதலோ சரியான அபிப்பிராயமோ இல்லை.
மறுபுறம் பீடாதிபதிகள் அரசியலில் இருந்து ஆபத்து வராமல் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே நேரத்தை செலவு செய்யவேண்டி வருகிறது. அவர்களின் பயம் அவர்களுடையது. இல்லாவிட்டால் ஏதாவது வீண்பழி சுமத்தி அரசியல் தலைவர்கள் இம்சை செய்யும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.
தேச நலன், தேச ஒற்றுமை, பாதுகாப்பு இவற்றை விரும்புபவர்கள் ஹிந்துத்துவவாதிகளாகக் கருதப்பட்டால் அனைவரும் ஹிந்துத்துவவாதிகளாகவே ஆவோம்.
பிற மதங்களின் மீது வெறுப்பு தேசபக்தி வாதமல்ல. ஹிந்துத்துவாவும் அல்ல. ஆனால் மத வெறியர்களிடம் இருந்தும் வெளிநாட்டு வியூகங்களிடம் இருந்தும் தேசத்தை காப்பாற்றுவதற்கு ஹிந்துக்கள் முன்னெழ வேண்டும். மதத்தோடு தொடர்பில்லாமல் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் ஒன்றுசேர வேண்டும்.
பிற மத ஆதரிப்பு, பொறுமை, ஒற்றுமையாக வாழ்வது போன்றவை இயல்பாகவே உள்ள இந்துக்களிடம் இருந்து என்றுமே எந்த மதத்திற்கும் ஆபத்து வராது. நாட்டுநலன் ஏற்படும். இதனை ஹிந்துக்களின் ஒற்றுமையுணர்வால்தான் நிரூபிக்க முடியும்.
(ருஷிபீடம் மாத இதழ் தலையங்கம், ஜூலை 2023)