
17வது இந்திய கூட்டுறவு மாநாட்டை இன்று தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவை தன்னம்பிக்கை கொண்டதாக மாற்றுவதில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.
இன்று நாம் உலகிலேயே அதிக பால் உற்பத்தியாளர் என்றால் அதற்கு பால் கூட்டுறவு சங்கங்களே காரணம். சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றால் அதற்கு கூட்டுறவு நிறுவனங்களும் காரணமாக இருக்கலாம் என்றார்.
மேலும், கார்ப்பரேட் துறை போன்ற வசதிகளும், தளங்களும் கூட்டுறவுகளுக்கு வழங்கப்படுகின்றன. விவசாயிகளின் நலன் மற்றும் விவசாயத்திற்காக மத்திய அரசு ஆண்டுக்கு 6.5 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. பிரதம மந்திரி கிசான் திட்டத்தின்கீழ் கோடிக்கணக்கான விவசாயிகள் பலன் பெற்று வருகின்றனர்… என்று மத்திய அரசின் ஊக்கமளிப்பை கோடிட்டுக் காட்டினார்.
கோடிக்கணக்கான சிறு விவசாயிகள் இடைத்தரகர்கள் குறுக்கீடு இல்லாமல் பலன் பெறுகின்றனர் என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவை தன்னம்பிக்கை கொண்டதாக மாற்றுவதில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று உறுதிபடக் கூறினார்.
2014ஆம் ஆண்டுக்கு முன், விவசாயிகள் தங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து உதவி கிடைப்பது மிகக் குறைவு என்றும், சிறிதளவு கிடைத்தாலும் அது இடைத்தரகர்களின் கணக்கில் சேரும் என்றும் அடிக்கடி கூறி வந்தனர். நாட்டின் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் அரசின் திட்டங்களின் பலன்களை இழந்து தவித்தனர்.
கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில் விவசாயத்திற்காக ரூ.90 ஆயிரம் கோடி செலவிட்டார்கள். நாம் பிரதம மந்திரி கிசான் திட்டத்திற்காக மட்டுமே அதைவிட 3 மடங்கு அதிகமாக செலவு செய்துள்ளோம். 9 ஆண்டுகளில் சர்க்கரை ஆலைகளில் இருந்து ரூ.70 ஆயிரம் கோடி மதிப்புள்ள எத்தனால் வாங்கப்பட்டுள்ளது, என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள் இறக்குமதியை குறைக்க வேண்டும். அவற்றின் உற்பத்தி இங்கே பெருக வேண்டும் என்றார்.
அமிர்தக்கால – நேரத்தில், நாட்டின் கிராமங்கள் மற்றும் நாட்டின் விவசாயிகளின் திறனை அதிகரிக்கும் வகையில், நாட்டின் கூட்டுறவுத் துறையின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா, தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற தீர்மானத்திற்கு அரசும், கூட்டுறவு அமைப்புகளும் இணைந்து இரட்டை பலம் தரும் என்றார்.
தில்லியில், இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தியக் கூட்டுறவு மாநாடு, சர்வதேச கூட்டுறவு தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது. இதில் தொடக்க கூட்டுறவு சங்கம் முதல் தேசிய அளவிலான கூட்டுறவு அமைப்பைச் சேர்ந்த 3600க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள், சர்வதேச கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு அமைச்சகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் கூட்டுறவு சங்கங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், முன்னுள்ள சவால்கள் என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.