ஆசிய கோப்பை 2023
இந்தியா அபார வெற்றி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஆகஸ்டு 17 முதல் செப்டம்பர் 17 வரை நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.
இன்று கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் இலங்கை பூவா தலையா வென்று முதலில் மட்டையாட முடிவுசெய்தது. ஆனால் 15.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து இலங்கை அணி 50 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.
இது இலங்கை அணியின் மிகக் குறைவான மொத்த ரன்களில் இரண்டாமிடத்தைப் பிடிக்கிறது. இதற்கு முன்னர் 2012ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் 43 ரன்கள் எடுத்தது முதலிடம் வகிக்கும் குறைவான மொத்த ஸ்கோராகும்.
இந்திய அணியில் ஷுப்மன் கில், இஷான் கிஷன் இருவரும் சேர்ந்து 6.1 ஓவரில் 51 ரன் அடித்து எளிதில் வெற்றியைப் பெற்றுத் தந்தனர். முகம்மது சிராஜ் 7 ஓவர் வீசி 21 ரன் கொடுத்து 6 விக்கட் வீழ்த்தினார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அந்தத் தொகையை (சுமார் 4.15 லட்சம்) மழை நேரத்தில் விளையாட்டு மைதானத்தை நன்றாகப் பராமரித்த மைதான ஊழியர்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.
முன்னதாக இப்போட்டியில் பங்குபெற்ற அணிகள் இரண்டு குரூப்புகளாகப் பிரிக்கப்பட்டன. குரூப் Aஇல் பாகிஸ்தான், இந்தியா, நேபால் ஆகிய அணிகள் இடம்பெற்றன. இந்தப்பிரிவில் இருந்து பாகிஸ்தானும் இந்தியாவும் அடுத்தசுற்றிற்குத் தகுதிபெற்றன.
இந்தச் சுற்றில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ஆட்டம் மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.
குரூப் B பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன. இப்பிரிவில் இருந்து இலங்கை அணியும், வங்கதேச அணியும் அடுத்த சுற்றுக்குத் தேர்வாயின.
அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றில் இந்தியா இலங்கை, பாகிஸ்தான் அணிகளை வென்று, வங்கதேச அணியிடம் தோற்றது. இலங்கை அணி பாகிஸ்தான், வங்கதேச அணிகளை வென்று, இந்திய அணியிடம் தோற்றது. பாகிஸ்தான் வங்கதேச அணியை வென்றது. இதனால் இந்திய அணியும் இலங்கை அணியும் இறுதிப் போட்டிக்குத் தேர்வாயின.
இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 6 ஆட்டங்கள் ஆடி 302 ரன் அடித்து இப்போட்டியின் அதிக ரன் அடித்த வீரர் ஆனார். சிராஜ், இலங்கையின் பதிரனா இருவரும் தலா 11 விக்கட்டுகள் எடுத்து அதிக விக்கட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்கள் ஆயினர்.
இந்தப் போட்டியில் விளையாடியதன் மூலம்
(1) ரோஹித் ஷர்மா 250 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரரானார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன் அடித்த வீரர்களில் ஒருவரானார்
(2) ஜதேஜா தனது 200ஆவது விக்கட்டை இப்போட்டியில் வீழ்த்தினார்.
(3) விராட் கோலி 267 ஒருநாள் போட்டிகளில் 13,000 ரன் அடித்தவீரரானார்.