புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழையும் இந்த தருணத்தில், பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வோம் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, முதல் முறையாக நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்த போது படியில் தலையை வைத்து வணங்கினேன் என்று கூறினார். மேலும், இந்தியாவின் வளர்ச்சிகளுக்கு இந்த கட்டிடம் தான் அடித்தளமாக இருந்தது என்று, பழைய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.
இந்த அவையில் நகைச்சுவை, காரசாரமான விவாதங்கள், சண்டைகள் நடைபெற்றிருக்கின்றன. இந்த நாடாளுமன்றத்திற்கு பிரியா விடை கொடுப்பது மிகவும் உணர்ச்சிகரமான ஒரு தருணம். ஒரு ஏழை இந்த நாடாளுமன்றத்தில் நுழைய முடியும் என்று நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை என்று உணர்ச்சிகரமாகக் கூறினார் பிரதமர் மோடி.
இன்று தொடங்கிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அப்போது, தேசத்தின் வளர்ச்சிப் பணியில் நாட்டு மக்கள் தொடர்ந்து வியர்வை சிந்தி வருகின்றனர். வரலாற்று சிறப்புமிக்க பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு நாம் விடை கொடுக்க உள்ளோம். புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு சென்றாலும், இந்த கட்டடமும் நாட்டின் வளர்ச்சிக்காக செயல்படும். இந்தியா முழுவதும் மாற்றத்திற்கான அலை உருவாகியுள்ளது… என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும், இந்திய நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால செயல்பாடுகள் குறித்து பெருமிதம் கொள்கிறேன். G20 மாநாட்டின் வெற்றி இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் சொந்தம். நாம் முன் வைத்த பிரகடனத்தை G20 நாடுகள் ஏற்றுக்கொண்டது இந்தியாவின் பலத்தை காட்டுகிறது.
சுதந்திர போராட்டத்தின் சின்னமாக பழைய நாடாளுமன்றம் திகழ்கிறது. சுதந்திர இந்தியாவின் பல்வேறு பாரம்பரியங்களின் நினைவாக பழைய நாடாளுமன்றம் உள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் வியக்கின்றன. மேலும் சுயதன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாறி வருகிறது. இந்தியாவில் நடைபெற்ற G20 மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்கது… என்று தனது உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.