ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
19ஆம் நாள் – பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்
சென்னை – 23.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பாகிஸ்தான் அணியை (282/7, பாபர் ஆசம் 74, அப்துல்லா ஷஃபீக் 58, ஷதாப் கான் 40, இஃப்திகார் அகமது 40, நூர் அகமது 3/49, நவீன் உல் ஹக் 2/52) ஆப்கானிஸ்தான் 49 ஓவர்களில் 286/2 (இப்ராஹிம் சத்ரன் 87, குர்பாஸ் 65, ரஹ்மத் ஷா 77*, ஷஹிதி 48*) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற பாகிஸ்தான் அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. முதல் 10 ஓவர்களில் அந்த அணி 56 ரன் எடுத்தது. 11ஆவது ஓவர் முதல் பந்தில் இமாம் உல் ஹக் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் தொடக்க வீரர் ஷஃபிக் மற்றும் பாபர் ஆசம் இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஷஃபிக் 22.3ஆவது ஓவரில் 58 ரன்னுக்கு ஆட்டமிழக்க பாபர் 41.5 ஓவர் வரை ஆடி 74 ரன் எடுத்தார்.
ஷதாப் கான் மற்றும் இஃப்திகர் அகமது இருவரும் இணைந்து கடைசி 10 ஓவரில் பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். 42ஆவது ஓவரில் 206 ரன் என்ற நிலையில் இருந்த ஸ்கோரை 50 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 282 ரன் என்ற நிலைக்கு கொண்டு வந்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினர். ரஹ்மத்துல்லா குர்பாஸ் (65 ரன்) 21.1ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். இப்ராஹிம் சத்ரன் 33.3 ஓவரில் 87 ரன் அடித்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் ஆடவந்த ரஹ்மத் ஷா 77 ரன்களும் ஷஹீதி 48 ரன் களும் அடித்து, இறுதி வரை ஆடி ஆப்கானிஸ்தான் அணிக்கு 49 ஓவரில் வெற்றியைத் தேடித்தந்தனர். ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக் சுழற்சியை நன்கு செய்தனர். ஆனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் அதனைச் செய்யவில்லை.
இப்ராஹிம் சத்ரன் ஆட்டநாயகனாக அறிவிக்கப் பட்டார். இரண்டு முறை ஒரு உலகக் கோப்பைத் தொடரில் வெற்றி பெறுவது ஆப்கானிஸ்தான் அணிக்கு இது முதல் முறை. நாளை மும்பையில் வங்கதேச அணியும் இலங்கை அணியும் மோதவிருக்கின்றன.