
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
23ஆம் நாள் – தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான்
சென்னை – 27.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பாகிஸ்தான் அணியை (46.4 ஓவரில் 270, பாபர் ஆசம் 50, ஷகீல் 52, ஷதாப் கான் 43, ரிஸ்வான் 31, ஷம்சி 4/60, ஜேன்சன் 43/3, கோட்சி 2/42) தென் ஆப்பிரிக்க அணி (47.2 ஓவரில் 271/9,பவுமா 28, டிகாக் 24, டுஸ்ஸன் 21, மர்க்ரம் 91, டேவிட் மில்லர் 29, உதிரிகள் 21, ஷஹீன் ஷா அஃப்ரிதி 3/45, ரவுஃப் 2/62, வாசிம் 2/50, உஸ்மா மிர் 2/45) 1 விக்கட்டு வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற பாகிஸ்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷஃபீக் (9 ரன்), இமாம்-உல்-ஹக் (12 ரன்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த பாபர் ஆசம் (50 ரன்), ரிஸ்வான் (31 ரன்) இருவரும் ஓரளவிற்கு நிலைத்து ஆடினர். ஆனால் தங்கள் முயற்சிகளைப் பெரிய ஸ்கோராக மாற்ற அவர்களால் முடியவில்லை.
அவர்களுக்குப் பின்னர் ஆட வந்த இஃப்திகார் அகமது (21 ரன்), ஷகீல் (52 ரன்), ஷதாப் கான் (43 ரன்), நவாஸ் (24 ரன்) ஆகியோரும் நன்றாக ஆடினர், ஆயினும் பெரிய ஸ்கோர் எடுக்க வில்லை. அதனால் 50 ஓவர்கள் கூட ஆட முடியாமல் 46.4 ஓவரில் 270 ரன் எடுத்து பாகிஸ்தான் அணி இன்னிங்க்ஸை முடித்துக்கொண்டது.
தென் ஆப்பிரிக்க அணி விளையாட வந்தபோது அவர்களின் நிலையும் ஏறத்தாழ பாகிஸ்தான் அணியைப் போலவே இருந்தது. இரண்டாவதாக விளையாடும்போது எப்போதுமே சற்று தடுமாறக்கூடிய தென் ஆப்பிரிக்க அணி 40.2 ஆவது ஓவரில் 91 ரன்னுக்கு மர்க்ரம் ஆட்டமிழக்கும்போது 250 ரன்னில் இருந்தது.
மீதமுள்ள 21 ரன்னை எடுக்க தென் ஆப்பிரிக்க அணி மிகவும் தடுமாறியது. தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர்கள் 19 ரன் உதிரியாகக் கொடுத்தார்கள் என்றால் பாகிஸ்தான் அணி வீரர்கள் 21 ரன் உதிரியாகக் கொடுத்தனர்.
இறுதியில் வெற்றிக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது; பாகிஸ்தான் அணிக்கு ஒரு விக்கட் தேவைப்பட்டது. நடுவர்களை அதிகமுறை அவுட் கேட்டு பாகிஸ்தான் அணி டென்ஷனாக்கியது. தென் ஆப்பிரிக்க அணி உறுதியை இழக்காமல் ஆடி இறுதியில் வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக ஷம்சி (4 விக்கட்) அறிவிக்கப்பட்டார். இன்றைய வெற்றியோடு தென் ஆப்பிரிக்க அணி 10 புள்ளிகள் மற்றும் அதிக ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை ஏறத்தாழ இழந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.