ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
24ஆம் நாள் – இரண்டு ஆட்டங்கள் – 27.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையே தர்மசலாவில் பகல்நேர ஆட்டமாக நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் நெதர்லாந்து, வங்கதேச அணிகளுக்கிடையே கொல்கொத்தாவில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.
ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து
ஆஸ்திரேலிய அணி (49.2 ஓவரில் 388, ட்ராவிஸ் ஹெட் 109, வார்னர் 81, கிளன் மேக்ஸ்வெல் 41, இங்கிலிஸ் 38, பேட் கம்மின்ஸ் 37, மிட்சல் மார்ஷ் 36, போல்ட் 3/77, கிளன் பிலிப்ஸ் 3/37, சாண்ட்னர் 2/80) நியூசிலாந்து அணியை (383/9, ரச்சின் ரவீந்த்ரா 116, டேரில் மிட்சல் 54, ஜேம்ஸ் நிஷம் 58, வில் யங் 32, ஆடம் சாம்பா 3/74, பேட் கம்மின்ஸ் 2/66, ஜோஷ் ஹேசல்வுட் 2/70, மேக்ஸ்வெல் 1/62) 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற நியூசிலாந்து ஆஸ்திரேலிய அணியை மட்டையாடச் சொன்னது. ஆஸ்திரேலியா தனது 50 ஓவர்களில் 388 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களே 19 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்தனர். டிராவிஸ் ஹெட் தனது முதல் உலகக் கோப்பை ஆட்டத்தில் தனது நாட்டின் மூன்றாவது வேகமான உலகக் கோப்பை சதத்தைப் பெற்றார். அவர் கை உடைந்த நிலையில் இருந்து மீண்டு வந்ததால், உலகக் கோப்பை போட்டிகளுக்கான எந்தவித தயாரிப்பும் இல்லாமல் இன்று ஆடவந்தார்.
உலகக் கோப்பையில் அனைவரும் எதிர்பார்த்த ஆஸ்திரேலியா இதுதான். அவர்கள் உலகக் கோப்பை ஆட்டங்களில் ஆடி வருகிறார்கள் என்ற செய்தி மற்ற அணிகளுக்கு இன்று அனுப்பப்பட்டிருக்கிறது. நல்ல வேளை இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஏற்கனவே ஆடிவிட்டது.
ஹெட் தனது இன்னிங்ஸின் பின் பகுதியில் ஆடுகளம் சுழற்பந்துக்குச் சாதகமாக மாறிக் கொண்டிருப்பதைக் கண்டதாகக் கூறினார். அதனால் நியூசிலாந்து மீண்டும் எழுச்சி பெற்றது. க்ளென் பிலிப்ஸ் தொடந்து 10 பந்துகள் ரன் ஏதும் கொடுக்காமல் வீசினார். மேலும் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இன்னிங்ஸ் முடிந்ததும் ஹெட் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோர் பந்து வீசும்போது ஆஸ்திரேலிய அணியின் மொத்த ஸ்கோரை தரும் அழுத்தத்தைவிட அழுத்தம் அதிகமாகி இவரிகளை எதிர்கொள்ள கடினமாக இருப்பார்கள் என ஆடம் சம்பா கூறினார். 49ஆவது ஓவரில் போல்ட் மூன்று விக்கட்டுகள் எடுத்தார். 48ஆவது ஓவரில் கம்மின்ஸ் நாலு சிக்சர் அடித்தார். இரண்டுமுறை அவரது கேட்ச் தவற விடப்பட்டது. அதற்கு முன்னர் ட்ராவிஸ் ஹெட் தந்த இரண்டு கேட்சுகளையும் நியூசிலாந்து அணி தவறவிட்டது.
பதிலுக்கு நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் விளையாடி 9 விக்கட் இழப்பிற்கு 383 ரன் எடுத்து 5 ரன்னில் தோல்வியைச் சந்தித்தது. என்ன ஒரு விளையாட்டு! இந்த விளையாட்டைப் பார்த்த அனைவருக்கும் (என்னையும் சேர்த்து) இதயத்துடிப்பு எகிறியிருக்கும். ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றிக்காக கடைசி பந்து வரை முயன்றது. 389 ரன்களை எடுக்க அவர்கள் போராடியதே ஒரு கதையைச் சொல்கிறது. இருப்பினும், அவர்கள் வெற்றியைப் பெறத் தயாராக இருந்தபோதும், கூட்டாண்மை வலுவாக இருந்தபோதும் அவர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த விதம்தான் அவர்களைத் தோல்விக்குத் தள்ளியது. இதற்கான அத்தனை பெருமையும் ரச்சின் ரவீந்திரா-வைச் சேர்ந்தது. அவர் கிட்டத்தட்ட தனித்து நின்று நியூசிலாந்தை ஒரு அசாத்தியமான வெற்றியின் விளிம்பிற்கு கொண்டு வந்தார். மிட்செலும் அரைசதம் அடித்தார். மற்ற பேட்டர்கள் எவரும் விரும்பிய அளவுக்கு ரவீந்திராவை ஆதரிக்கவில்லை என்ற உண்மையை நியூசிலாந்து அணி வீரர்கள் ஒப்புக்கொள்வார்கள்.
மறுபுறம், ஆஸ்திரேலியா, எல்லோரையும் விட நிம்மதியாக இருக்கும். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 388 ரன்கள் எடுத்தது; ஹேசில்வுட் மற்றும் சாம்பா ஆகியோர் நன்றாகப் பந்துசியது; ஆகியவை அவர்களுக்கு நல்ல பலனைக் கொடுத்தன. ட்ராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
நெதர்லாந்து vs வங்கதேசம்
நெதர்லாந்து அணி (229, ஸ்காட் எட்வர்ட்ஸ் 68, வெஸ்ஸி பாரேஸி 41, எங்கல்ப்ரக்ட் 35, ஷோரிஃபுல் இஸ்லாம் 2/51, டஸ்கின் அகமது 2/43, முஸ்தஃபிசுர் ரஹ்மான் 2/36, மெஹதி ஹசன் 2/40) வங்கதேச அணியை (42.2 ஓவர்களில் 142, மிராஸ் 35, மகமதுல்லா 20, ரஹ்மான் 20, பால் வான் மீகிரன் 4/23, லீட் 2/25) 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற நெதர்லாந்து அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 229 ரன்கள் எடுத்தது. ஆரம்ப விக்கெட்டுகளை நெதர்லாந்து அணி இழந்த பிறகு, ஸ்காட் எட்வர்ட்ஸ் மீட்பு பணியை வழிநடத்தினார். வெஸ்லி பாரேசி மற்றும் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் ஆகியோரும் சிறப்பாகச் செயல்பட்டனர்.. பங்களாதேஷுக்கு அதிகப் பயன்தரும் வகையில் பந்துவீசியவர்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் தான். தஸ்கின் அகமது மற்றும் ஷோரிஃபுல் இஸ்லாம் ஆகியோர் மீண்டும் பவர்பிளே விக்கெட்டுகளைப் பெற்றனர். அவர்கள் தலா இருவரையும், முஸ்தாபிசுர் ரஹ்மானும் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தனர். லோகன் வான் பீக் நெதர்லாந்தின் இன்னிங்ஸை வேகத்துடன் ஆடியபோதிலும் மஹேதி ஹசன் இரண்டு தாமதமான விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
230 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடதொடங்கிய வங்கதேச அணி ஒரு மோசமான சரிவைச் சந்தித்தது. தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ் (3 ரன்), தன்சிட் ஹசன் (15 ரன்) முதல் 6 ஓவருக்குள் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த ஷண்டோ (9 ரன்), ஷாகிப் (5 ரன்), ரஹீம் (1 ரன்) சொற்ப ரன்னில் ஆட்ட்மிழக்க, அவர்களுடன் நன்றாக ஆடிக்கொண்டிருந்த மிராஸும் (35 ரன்) ஆட்டமிழந்தார். அந்நிலையில் வங்கதேச அணி 6 விக்கட் இழப்பிற்கு 70 ரன் எடுத்திருந்தது. அப்போதே அந்த அணியின் தோல்வி முடிவாகிவிட்டது. அதன் பின்னர் வந்த வீரர்கள் தோல்வியை 43ஆவது ஓவர் வரை தள்ளிப் போட்டனர். இறுதியில் வங்கதேச அணி 142 ரன்னுக்கு ஆடமிழந்து 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பால் வான் மீகிரன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றம் இல்லை. தென் ஆப்பிரிக்கா முதலிடம்; இந்தியா இரண்டாமிடம்; நியூசிலாந்து 3; ஆஸ்திரேலியா 4. நாளை இந்தியா இங்கிலாந்து அணிகள் லக்னோவில் மோதுகின்றன.