
2500 மோசடி கடன் செயலிகள் நீக்கப்பட்டிருப்பதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் கடன் வழங்கும் செயலிகள் – லோன் ஆப்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது:
லோன் ஆப்கள் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள், மக்களை மோசடி செய்து வருவதாக நாடு முழுவதும் புகார்கள் வருகின்றன. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகளுடன் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தன.
கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 4 ஆயிரம் கடன் ஆப்களை கூகுள் ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில், 2500க்கும் மேற்பட்ட மோசடி கடன் ஆப்களை தனது ‘பிளே ஸ்டோரில்’ இருந்து நீக்கியும், முடக்கியும் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, வங்கிகள் ஆகியவை நடவடிக்கை எடுத்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.