அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டு, அயோத்யா தாம் என வைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தினைப் போல் பள பள என நவீனமாக்கப்பட்டுள்ள ரயில் நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட இந்த ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
உத்தரப் பிரேதச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ராமர் விக்ரஹத்தை கோவில் கருவறைக்கு எடுத்து வர உள்ளார்.
இந்த விழாவில் ஏராளமான அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், சாதுக்கள், மடாதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதையடுத்து தரிசனத்துக்காக ராமர் கோவிலுக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள நிலையில் அங்கு இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்வார்கள். இதனால் அயோத்தி ரயில்வே நிலையத்தை புனரமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பணி தற்போது முடிவடைந்து டிச. 30ம் தேதி இன்று பிரதமர் நரேந்திர மோடி புனரமைக்கப்பட்ட அயோத்தி தாம் ரயில் நிலையத்தை திறந்து வைத்தார்.
முன்னதாக இரு தினங்களுக்கு முன்னர், அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டது. அயோத்தி ரயில்வே சந்திப்பு (Ayodhya Railway Juction) என இருந்த நிலையில் அது அயோத்தி தாம் (Ayodhya Dham)என மாற்றம் செய்யப்பட்டது.
தாம் – என்பது புனிதத் தலத்தைக் குறிக்கும் வழிபாட்டு இடத்துக்குரிய சொல். அதனால் அயோத்தியை அயோத்தித் தலம் எனும் பொருளில் பெயர் மாற்றியிருக்கிறார்கள். தற்போது அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதால் அயோத்தி சந்திப்பு ரயில் நிலையத்தின் பெயரும் அயோத்தி தாம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று புனரமைக்கப்பட்ட ரயில் நிலையத்தையும், விமான நிலையத்தையும் திறந்து வைப்பது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்ததாவது…
உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், இணைப்பை மேம்படுத்தவும், ஸ்ரீராமரின் நகரமான அயோத்தியின் வளமான பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் எங்கள் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இந்த திசையில், புதிதாக கட்டப்பட்ட விமான நிலையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தை நாளை திறந்து வைக்கிறேன். இதனுடன், அயோத்தி, உ.பி., உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் மேலும் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, துவக்கி வைக்கும் பாக்கியத்தையும் பெறுவேன்.
அயோத்தி விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராமாயண காவியத்தைப் படைத்த மகரிஷியின் பெயர் விமான நிலையத்துக்கு சூட்டப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானது என்று கருத்துகள் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.