தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மற்ற தேர்தல் ஆணையர்களை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 3 பேர் குழுவினரே நியமனம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையர் நியமன குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக கேபினட் அமைச்சர் ஒருவரை நியமித்து ‘’தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் (சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா 2023‘ என்ற புதிய திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.
அரசின் திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார்.