தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
சியாவர் ராம் சந்த்ர கீ ஜய்!
எனதருமை நாட்டுமக்களே!! ராம் ராம்!!
வாழ்க்கையின் சில கணங்கள், இறைவனின் ஆசிகளாலேயே நிறைவடைகின்றன, மெய்யானவையாகின்றன. இன்று பாரத நாட்டவர்களான நம்மனைவரைக்கும், உலகெங்கும் பரவியிருக்கும் இராம பக்தர்களுக்கும், இப்படிப்பட்டதொரு பவித்திரமான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.
அனைத்துத் திசைகளிலும், பிரபு ஸ்ரீ இராமச்சந்திரனின் பக்தியின், அற்புதமான சூழல் நிலவுகிறது. நாலாபுறங்களிலுமே, ராமநாமத்தின் எதிரொலியைக் கேட்க முடிகிறது. ராமபஜனையின், அற்புதமான, சௌந்தர்யம் நிறைந்திருக்கிறது. அனைவருமே ஜனவரி மாதம், 22ஆம் தேதிக்காக காத்திருக்கின்றார்கள். அந்த வரலாற்றுப்பூர்வமான புனிதமான கணத்திற்காகப் பார்த்திருக்கின்றார்கள்.
ஆனால் இப்போது, அயோத்தியிலே, ராம் லலாவின் பிராணபிரதிஷ்டைக்கு இன்னும், 11 நாட்களே எஞ்சியிருக்கின்றன. என்னுடைய பெரும்பேறு என்னவென்றால், எனக்கும் கூட, இந்தப் புண்ணியமான சந்தர்ப்பத்தில் பங்கெடுக்கும், வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்னைப் பொறுத்தமட்டில், இது கற்பனைக்கு எட்டாத, அனுபவத்திற்கான வேளை. நான் உணர்ச்சிப் பெருக்கில் இருக்கிறேன்.
உணர்ச்சிகளால் நெகிழ்ந்து போயிருக்கிறேன். முதன்முறையாக என் வாழ்க்கையிலே, இதுபோன்ற ஒரு உணர்ச்சி வெள்ளத்தை அனுபவிக்கிறேன். நான் வித்தியாசமான உணர்வுகளின் சங்கமத்தை எதிர்கொண்டு வருகிறேன். என்னுடைய உள்மனத்தின் இந்த உணர்வுப் பயணம், என்னை நான், வெளிப்படுத்துவதற்காக அல்ல. அனுபவிப்பதற்கான தருணம்.
நான் விரும்பினாலும் கூட, இதன் ஆழம் இதன் பரந்துபட்ட தன்மை, இதன் தீவிரத்தைக் கூட, சொறகளில் வடிக்க இயலவில்லை. என்னுடைய இந்த நிலையை, உங்களால் நன்கு புரிந்து கொள்ள முடியும்.
எந்தக் கனவினை, பற்பல தலைமுறைகளும், பல்லாண்டுகளாகவே, ஒரு உறுதிப்பாடாக, தங்களுடைய இதயத்திலே பூட்டி வாழ்ந்தார்களோ, அது இன்று, நனவாகும் வேளையிலே இருந்து அனுபவிக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கிறது. இறைவன் எனக்கு, பாரதநாட்டவர் அனைவரின் பிரதிநிதியாக இருக்கும், கருவியாக ஆக்கியிருக்கிறான்.
நிமித்தமாத்ரம், பாவ சவ்ய சாசின். இது மிகப்பெரிய பொறுப்பாகும். நமது சாஸ்திரங்களிலே கூட, என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால், நாம், இறைவனை வணங்குதற்கு, அவனைப் பூஜிப்பதற்குக்கூட, நமக்குள்ளே இறையுணர்வை விழிப்படையச் செய்ய வேண்டும். இதன் பொருட்டு, சாஸ்திரங்களிலே, விரதங்களும் தீவிரமான நியமங்களும் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றை, பிராண பிரதிஷ்டைக்கு முன்பாக கடைப்பிடிக்க வேண்டும். அந்த வகையிலே, ஆன்மீகப் பயணத்தின் தவம்புரியும் ஆன்மாக்கள், மேலும் மகா புருஷர்களிடமிருந்து, எனக்கு கிடைத்த வழிகாட்டுதல்படி, அவர்களும் கூட யமநியமங்களை அறிவுறுத்தினார்கள். அதன் வழி நின்று, நான் இன்றிலிருந்து, 11 நாட்களுக்கு, விசேஷமான அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க இருக்கிறேன்.
இந்த பவித்திரமான வேளையிலே, நான் இறைவனிடத்திலே வேண்டிக் கொள்கிறேன், ரிஷிகள்-முனிவர்களின் புனித பாதங்களில் பணிகிறேன், மேலும், இறைவனின் வடிவங்களான மகேசர்களான குடிமக்கள், அவர்களிடத்திலும் நான் வேண்டிக் கொள்கிறேன், நீங்கள் அனைவரும், எனக்கு நல்லாசி வழங்குங்கள். இதனால், நான் மனதால் வாக்கால் செயலால், எந்த ஒரு குறைபாடும் என் தரப்பில் இல்லாதிருக்க வேண்டும்.
நண்பர்களே, என்னுடைய பேறு என்னவென்றால், 11 நாட்கள் என்ற இந்த என்னுடைய அனுஷ்டானத்தை, நான் நாசிக் தலத்தின், பஞ்சவடியிலிருந்து தொடங்குகிறேன். பஞ்சவடி, எப்படிப்பட்ட பவித்திரமான பூமி என்றால், அங்கே, பிரபு ஸ்ரீ இராமன், கணிசமான காலத்தைக் கழித்தார்.
மேலும் இன்று, என் விஷயத்தில், ஒரு சுகமான தற்செயல் நிகழ்வு, இன்றைய தினம், ஸ்வாமி விவேகானந்தரின் ஜன்ம தினமும் ஆகும் என்பதே. நம்முடைய ஸ்வாமி விவேகானந்தர் தானே, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, அடிமைத்தளையில் சிக்குண்டிருந்த பாரதீய ஆன்மாவைத் தட்டி எழுப்பினார்!! இன்று, அதே தன்னம்பிக்கை, மகோன்னதமான இராமர் கோயிலின் வடிவிலே, நம்முடைய அடையாளமாக ஆகி, அனைவரின் கண் முன்பும் துலங்குகிறது.
மேலும், சர்க்கரைப் பந்தலில் தேன்மாரியைப் பாருங்கள்!! இன்று, அன்னை ஜீஜாபாயின் பிறந்த நாளும் ஆகும். மாதா ஜீஜாபாய்!!….. இவர் தாம், சத்ரபதி சிவாஜி மகாராஜரின் வடிவினிலே, ஒரு மகாபுருஷனை ஈன்றெடுத்தார். இன்று நாம், நமது பாரதத்தை, ஒன்றுபட்ட பூமியாகப் பார்க்கிறோமென்றால், இதிலே, அன்னை ஜீஜாபாய்க்கு ஒரு மகத்தான பங்களிப்பு இருக்கிறது.
மேலும் நண்பர்களே, நான் அன்னை ஜீஜாபாய் பற்றிய புனிதமான நினைவுகளை மனதில் கொள்ளும் வேளையிலே, எனக்கு என்னுடைய, தாயைப் பற்றிய நினைவு வருவதென்பது, மிகவும் இயல்பான ஒன்றாகும். என்னுடைய தாய், வாழ்க்கையின் இறுதிக்கட்டம் வரை, ஜபமாலையை உருட்டிக் கொண்டு, சீதாராமனைப் பற்றியே நினைந்த வண்ணம் இருந்தார்.
நண்பர்களே, பிராண பிரதிஷ்டையின் மங்கலமான வேளை, சராசரத்தின் படைப்பின் விழிப்புநிறந்த கணம், ஆன்மீக அனுபவத்தின் இந்த மஹோத்சவம், கர்ப்பகிருகத்திலே, அந்தக் கணத்திலே, என்னதான் நடக்காது!! நண்பர்களே, உடல் அளவிலே அந்த பவித்திரமான கணத்தின் சாட்சியாக என்னவோ நான் அங்கே இருப்பேன். ஆனால், என் மனத்திலே, என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும், 140 கோடி நாட்டுமக்களும் என்னுடனே இருப்பார்கள். நீங்கள் என்னுடன் கூட இருப்பீர்கள், அனைத்து இராமபக்தர்களும் என்னுடனே இருப்பார்கள்.
மேலும், அந்த விழிப்புநிறைந்த கணம், நம்மனைவரின், நேரடி அனுபவமாக இருக்கும். நான் என்னுடன் கூட, இராமர் கோயிலுக்காக, தங்களுடைய இன்னுயிரை சமர்ப்பித்த, எண்ணிலடங்கா, ஆளுமைகளிடமிருந்து, உத்வேகம் பெற்றுச் செல்வேன். அன்பு தவம் நிறைந்த அந்த மாமனிதர்கள், 500 ஆண்டுக்கால பொறுமை, ஆழ்ந்த பொறுமை நிறைந்த அந்தக் காலம், எண்ணற்ற தியாகம் மற்றும் தவத்தின் சம்பவங்கள், கொடையாளிகளின் உயிர்த்தியாகிகளின் வரலாறு, இவர்களின் எத்தனையோ பேர்களின், பெயரைக் கூட அறிவார்களில்லை.
ஆனால், இவர்களின் வாழ்க்கையின் ஒரே இலக்கு என்று சொன்னால், மகத்தான இராமர் கோயிலின் நிர்மாணமாகவே இருந்து வந்திருக்கிறது. இப்படிப்பட்ட கணக்கில்லாத மனிதர்களின், நினைவுகள் எல்லாம் என்னுள்ளே இருக்கும். 140 கோடி நாட்டுமக்கள், அந்தக் கணத்தில் என்னோடு இணையும் போது, அப்போது நான், உங்களிடமிருந்து சக்தி பெற்று, கர்ப்பகிருகத்தில் பிரவேசிக்கும் போது, அப்போது என்னுள்ளும் கூட, ஏற்படும் உணர்வு, நான் தனியாள் இல்லை, நீங்கள் அனைவரும் என்னோடு கூடவே இருக்கிறீர்கள் என்பது தான்.
நண்பர்களே, இந்த 11 நாட்கள், தனிப்பட்ட முறையிலே, நான் விதிகளைக் கடைப்பிடிப்பது உறுதி. ஆனால் என் உணர்வுலகில், நீங்கள் அனைவரும் கலந்து கரைந்திருக்கிறீர்கள். என் வேண்டுதல் எல்லாம், நீங்களும் கூட, மனதார, என்னோடு இணைந்திருங்கள் என்பது தான். ராம் லலாவின் திருப்பாதாங்களில், நான் உங்களின் உணர்வுகளையும், எனக்குள் பொங்கும் உணர்வுகளை, அர்ப்பணிப்பது போலவே, அதே சிரத்தையோடு அர்ப்பணிப்பேன்.
நண்பர்களே, நாம் அனைவரும் ஒரு சத்தியத்தை நன்கறிவோம். அதாவது இறைவன் உருவமற்றவன். ஆனால், இறைவன், வடிவத்தோடும் கூட, நம்முடைய ஆன்மீகப் பயணத்திற்கு பலம் அளிப்பவன். மகேசர்களான மக்களிடத்திலே, இறைவனின் வடிவத்தைக் காண முடியும். இதை நான் நேரடியாகக் கண்டும் இருக்கிறேன், உணர்ந்தும் இருக்கிறேன். ஆனால், இறைவன் வடிவில் இருக்கும் இதே மக்கள், சொற்களில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது, ஆசியளிக்கும் போது, அப்போது என்னிலும் கூட, புதிய சக்தி பெருக்கெடுத்து ஓடுகிறது.
இன்று எனக்கு, உங்களின் நல்லாசிகளின் தேவை இருக்கிறது. ஆகையினாலே, நான் வேண்டுவதெல்லாம், சொற்களில், எழுத்துக்களில், உங்களின் உணர்வுகளைக் கண்டிப்பாக வெளிப்படுத்துங்கள். கண்டிப்பாக உங்கள் ஆசிகளை எனக்குத் தாருங்கள்!! உங்களின் ஆசிகளின், ஒவ்வொரு சொல்லும், எனக்கு, சொல் அல்ல, மந்திரம் ஆகும். மந்திரத்தின் சக்தி என்ற முறையிலே, இது கண்டிப்பாகச் செயல்படும்.
நீங்கள் உங்கள் சொற்களிலே, உங்களின் உணர்வுகளை, நமோ செயலியின் வாயிலாக, நேரடியாக என்னிடம் கொண்டு சேர்க்க முடியும். வாருங்கள்!! நாமனைவரும், பிரபு இராமனின் பக்தியில் மூழ்கித் திளைப்போம்!! இந்த உணர்வோடு கூட, இராம பக்தர்களான உங்கள் அனைவருக்கும், கோடானுகோடி தெண்டன் சமர்ப்பிக்கிறேன்!!
ஜய் சியாராம்!! ஜய் சியாராம்!! ஜய் சியாராம்!!
Source: All India Radio, Chennai