டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 500 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் ஆனார் அஸ்வின் ரவிச்சந்திரன். அவரது சாதனையைப் பாராட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில், இந்திய அணி 445 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியில், அந்த அணியின் வீரர் கிராலியை ஆட்டம் இழக்கச் செய்ததன் மூலம் இந்திய வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற, தொடர் 1 -1 என சமனில் உள்ளது.
இதை அடுத்து, இந்த இரு அணிகள் மோதும் 3வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. ‛டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித், பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா இருவரும் சதம் விளாச, முதல் நாளில் சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 110, குல்தீப் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.
இதன் பின் இன்று இரண்டாவது நாளாக ஆட்டம் தொடர்ந்தது. இதில் ஜடேஜா 112 ரன் எடுத்த நிலையிலும், குல்தீப் யாதவ் 4 ரன் எடுத்தும் ஆட்டம் இழந்தனர். எனினும் துருவ் ஜூரல், அஸ்வின் இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். துருவ் ஜூரல் 46 ரன்னும், அஸ்வின் 37 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க, பும்ரா அதிரடியாக விளையாடி 26 ரன்கள் எடுக்க, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 445 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணியின் உட் 4, ரேஹன் அஹமது 2, ஆண்டர்சன், ஹார்ட்லி, ஜோ ரூட், தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடக்கிய இங்கிலாந்து அணியில், ஸ்கோர் 89 ரன்னாக இருந்தபோது, அஸ்வின் சுழலில் கிராலி (15) கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் பெறும் 500வது விக்கெட்.
போப் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. டக்கெட் (133), ஜோ ரூட் (9) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அஸ்வின் 500
டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட் என்ற சாதனையை தனது 98வது டெஸ்டில் படைத்துள்ளார் அஸ்வின். இதன் மூலம் குறைந்த டெஸ்டில் 500 விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் 2வது இடத்தைப் பிடித்தார். முதலிடத்தில் இலங்கையின் முரளிதரன் (87) உள்ளார்.
குறைந்த பந்துகளில் 500 விக்கெட் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலிலும் 2வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெக்ராத் 25,528வது பந்தில் 500வது விக்கெட்டை வீழ்த்தினார். அஸ்வின், 25,714வது பந்தில் 500வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
பிரதமர் மோடி பாராட்டு
இதை அடுத்து அஸ்வினை பாராட்டி, பிரதமர் மோடி தனது ‛‛எக்ஸ்’ தளத்தில் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளார். அவரது திறமைக்கும் விடாமுயற்சிக்கும் இது சான்று, அஸ்வினுக்கு எனது வாழ்த்துக்கள்.