போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக.,வைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் என்சிபி காவல் அளித்து, தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று காலை கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை, தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கோரிக்கையை ஏற்று ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
முன்னதாக, போதைக் கடத்தல் மாஃபியா கும்பல் தலைவன் ஜாஃபர் சாதிக்கை ஜெய்ப்பூர் சொகுசு விடுதியில் சுற்றிவளைத்து கைது செய்தது போதைத் தடுப்புப் பிரிவு. அவர் கடந்த இரு வாரங்களில் தமிழகத்தில் இருந்து வடமாநிலம் வரை சென்று, பாகிஸ்தானின் எல்லைப்புற மாநிலமான ராஜஸ்தான் வழியாக, பாகிஸ்தானுக்குத் தப்பிச் செல்லும் வழியில், கைது செய்யப்பட்டது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரின் வலையில் சிக்காமல் இருப்பதற்காக, திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து ஜாஃபர் சாதிக் பதுங்கியிருந்துள்ளார்.
சென்னையில் உள்ள என்.சி.பி. அதிகாரிகள் கொடுத்த தகவலை அடுத்து, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் தலைமறைவாக இருந்த சர்வதேச போதைக் கடத்தல் மாஃபியா கும்பல் ஜாஃபர் சாதிக்கை சுற்றி வளைத்துப் பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு போதை ரசாயனங்களை வெளிநாடுகளுக்குக் கடத்திய வழக்கில் சிக்கியுள்ள ஜாஃபர் சாதிக், தில்லிக்கு அழைத்துவரப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப் பட்டது. பின்னர் தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அவரை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது, என்.சி.பி., காவலில் எடுத்து விசாரிக்க 7 நாட்கள் அனுமதி அளித்தார் நீதிபதி.
ஜாஃபர் சாதிக் கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் குடோன் அமைத்து தனி நெட்வொர்க் மூலம் சென்னையிலிருந்து தில்லிக்கு சூடோஎஃபிட்ரினை அனுப்பியது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. அதேபோல், ஜாஃபர் சாதிக்கின் பணப் பரிமாற்ற பட்டியலை தயார் செய்துள்ள என்.சி.பி அதிகாரிகள், அவருக்கு உடந்தையாக இருந்த முக்கியப் புள்ளிகள் குறித்தும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக, போதை கடத்தல் மாஃபியா கும்பல் தலைவன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போதை கடத்தலில் கிடைத்த பணத்தை வைத்து அவர் என்ன வெல்லாம் செய்தார் என்பது குறித்தும் , அவருடன் தொடர்புடையவர்கள் குறித்தும் மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரி பரபரப்பு தகவல் வெளியிட்டார்.
2000 ஆயிரம் கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் வழக்கில் மத்திய போதை பொருள் தடுப்பு போலீசாரால் தேடப்பட்டு வந்த கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் என்கிற அப்துல் ரஹ்மான் தில்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போலீசில் சிக்காமல் இருக்க புது புது சிம்கார்டுகளை பயன்படுத்தினாலும், அவர் பயன் படுத்திய செல்போனின் சிக்னலை வைத்து போலீசார் சாமர்த்தியமாக சுற்றிவளைத்துள்ளனர்.
கைதான ஜாஃபர் சாதிக்கிடம் இருந்து திமுக.,வின் உறுப்பினர் அட்டையையும், எஸ்.டி.பி.ஐ கட்சி பிரமுகரின் விசிட்டிங் கார்டும் கைப்பற்றப்பட்டது. முகத்தை மூடி அழைத்துச் சென்ற ஜாபரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன என்று, மத்திய போதைப் பொருள் தடுப்புக் காவல் பிரிவு உயர் அதிகாரி ஞானேஸ்வர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.
கடந்த 3 ஆண்டுகளில் 45 முறை உணவுப் பொருள் எனக்கூறி மெத்தபெடமைன் தயாரிக்க பயன்படும் மூலம் பொருளான சூடோபெட்ரினை ஜாபர் கடத்தி இருப்பதாகவும், தமிழ் நாடு, தில்லி ஆகிய இடங்களில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு 3,500 கிலோ வரை போதைப் பொருளைக் கடத்தியதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
கடத்தல் மூலம் ஈட்டிய கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை ஜாபர் சாதிக் , அரசியல், சினிமா, ஓட்டல்கள், ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறையில் முதலீடு செய்திருப்பதாக தெரிவித்த அவர், போதைப் பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை முழுமையாக பயன்படுத்தி ‘மங்கை’ என்ற படத்தைத் தயாரித்திருப்பதாகவும், சென்னையில் ஓட்டல்கள் தொடங்கி இருப்பதாகவும் கூறினார்.
மேலும், போதைக் கடத்தல் பணத்தை அரசியல் பிரமுகர்களுக்கு நிதியாகக் கொடுத்துள்ளார் என்றும், ஏராளமான பிரமுகர்களுடன் ஜாபர் சாதிக் தொடர்பு வைத்திருப்பதாகவும் அவர்களை ஒவ்வொருவராக சம்மன் அனுப்பி விசாரிக்க இருப்பதாகவும் என்சிபி உயரதிகாரி ஞானேஸ்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
போதைப் பொருள் கடத்தல் மூலம் பெற்ற கோடிக்கணக்கான ரூபாய் பணம், திரையுலகிலும், அரசியலிலும் புழங்கி இருப்பதால இது குறித்து அமலாக்கத்துறை விசாரணையை முன்னெடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, ஜாஃபர் சாதிக் இன்று பிடிபடுவதற்கு முன்பே, ஜாபர் சாதிக் குறித்த தொடர்புகளை அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவுகள், ஆவணங்கள் மூலம் கண்டறிந்துள்ளனர். அப்போது, ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள், ஐஎஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க, அரபிக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்கு நிதியுதவி அளித்தனரா என்பது குறித்து, என்ஐஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்ட ஜாஃபர் சாதிக்கையும், அவரின் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் தில்லி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வலைவீசித் தேடி வந்தனர். அப்போது, ஜாபர் சாதிக்கின் எட்டு வங்கி கணக்குகள், முகமது சலீம் மற்றும் மைதீனின் ஆறு வங்கிக் கணக்குளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்க்க, மூவரும் நிதியுதவி செய்ததாக கண்டறியப்பட்டது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அவர்கள் தெரிவித்த தகவலின்படி, கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் 2022ல் குண்டு வெடிப்பு நடத்தி பலியான ஐஎஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின் தலைமையில் 12க்கும் மேற்பட்டோர் தற்கொலைப் படையினராக மாறி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனராம். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தமிழகம் முழுவதும் பல கட்டங்களாக சந்தேக நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என்.ஐ.ஏ., சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ததில், மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு, சென்னை, கோவையில் உள்ள அரபிக் கல்லூரியில் பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக அரபிக் கல்லூரிகளின் பேராசிரியர், முன்னாள் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில், சில பண பரிவர்த்தனைகள் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. அது பற்றிய விவரத்தை, தில்லி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தோம். அவர்கள் ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரின் வங்கிக் கணக்குளை ஆய்வு செய்து, பண பரிவர்த்தனை குறித்து நாங்கள் கொடுத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளனர்.
அதில், ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் அரபிக்கல்லூரி பேராசியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் வாயிலாக, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க, ஆயுதப் பயிற்சி அளிக்க நிதியுதவி செய்து இருப்பது தெரியவந்தது. இதனால், ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் மற்றும் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்று தெரிவித்திருந்தனர்.
முன்னதாக, ஜாபர் சாதிக் வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, வெவ்வேறு பெயர்களில் மூன்றுக்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகளை ஜாபர் சாதிக் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.
இதனால் தற்போது, என்சிபி., என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகள் ஜாபர் சாதிக் விவகாரத்தை வைத்து முழு விசாரணையைத் தொடங்கியுள்ளன. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.