இந்தியாவில் நேற்று முதல் அமல்படுத்தப் பட்ட குடியுரிமைச் சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்பதை பலரும் தெளிவாக விளக்கி வருகின்றனர். இது குறித்து நன்கு சிந்தித்து, இச்சட்டத்தின் தன்மையை, நன்மையை இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர்.
குடியுரிமை (திருத்தம்) சட்டம் 2019 – CAA குடியுரிமைச் சட்டம், 1955 ஐ திருத்துகிறது. இந்தச் சட்டம் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட, அந்நாடுகளின் சிறுபான்மை சமூகத்தவரான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் பார்சிகளுக்கானது.
டிசம்பர் 31, 2014 அல்லது அதற்கும் முன் இந்தியாவுக்குள் நுழைந்து இங்கே தங்கியுள்ள இந்த சமூகங்களைச் சேர்ந்த எந்தவொரு நபரும் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள் என்று இச்சட்டம் கூறுகிறது.
தற்போது இந்தியாவில் உள்ள 18 கோடி இந்திய முஸ்லீம்களும், இந்தியர்களாகவே கருதப்பட்டு, அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படுகிறது. சொல்லப் போனால், இந்துக்களைக் காட்டிலும், சிறுபான்மை சமூகம் என்ற அளவில் பல்வேறு சலுகைகளும் உரிமைகளும் வழங்கப் படுகின்றன. எனவே, CAA க்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
முக்கியமாக, மக்களை பீதியில் தள்ளக் கூடிய சமூகவிரோதிகள் சிலரின் கூற்றுப்படி, இந்தச் சட்டத்திற்குப் பிறகு எந்தவொரு இந்தியக் குடிமகனும் தனது குடியுரிமையை நிரூபிக்க, எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கும்படி கேட்கப்பட மாட்டார்கள் என்பதே உண்மை!
மேலும், இச்சட்டம் இயற்கைமயமாக்கல் சட்டங்களை ரத்து செய்யவில்லை. எனவே, எந்தவொரு வெளிநாட்டிலிருந்தும் குடியேறிய முஸ்லீம்கள் உட்பட, இந்தியக் குடிமகனாக இருக்க விரும்பும் எந்தவொரு நபரும், தற்போதுள்ள சட்டங்களின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
குடியுரிமைச் சட்டத்தின் 6-வது பிரிவின் கீழ் இந்தியக் குடியுரிமையைப் பெற உலகில் எங்கிருந்தும் முஸ்லிம்களுக்கு எந்தத் தடையும் இல்லை. சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவதையும் இந்த சட்டம் கையாளவில்லை. எனவே CAA முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற கவலையை முஸ்லிம்கள் மற்றும் மாணவர்கள் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
மேற்கூறிய இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாத்தின் பதிப்பைப் பின்பற்றியதற்காக துன்புறுத்தப்படும் எந்தவொரு முஸ்லிமும், தற்போதுள்ள சட்டங்களின் கீழ் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதை CAA தடுக்கவில்லை.
CAA-சட்டத்தின் பல்வேறு நோக்கங்களில் முக்கியமான ஒன்று, சட்ட விரோத குடியேறிகளின் ஊடுருவலை தடுத்து நிறுத்துவது என்பதே!
இது வரும் காலத்தில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும். சிஏஏ மூன்று இஸ்லாமிய நாடுகளின் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு, இயற்கைமயமாக்கல் செயல்பாட்டில் ஒரு சிறப்பு அந்தஸ்தை வழங்கினாலும், மற்ற சமூகங்கள் பொது புகலிட நடைமுறையைப் பெறுவதைத் தடுக்காது.
முஸ்லீம் தலைவர்களில் சிலர், இந்தச் சட்டத்தின் நன்மை தரும் விளைவுகளைப் புரிந்துகொண்டு, CAA வை வைத்து முஸ்லிம்களை தவறாக வழிநடத்தும் பிரிவினைவாத சக்திகளிடமிருந்து முஸ்லிம்கள் விலகி இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.