பாரதத்தில் அண்மைக் காலமாக ரயில் கவிழ்ப்பு முயற்சிகள் அதிகரித்திருப்பது கவலை தரத்தக்க ஒன்று. இது குறிப்பாக, குறி வைத்துத் தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதச் செயல்களாக வெளிப்படுவது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை வெளிக்காட்டுகிறது. இவ்வாறு எண்ணுவதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.
கடந்த 3 மாதங்களில் ரயில்களைக் கவிழ்க்கும் முயற்சிகள் அதிகரித்து வருவதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை 18 முறை ரயிலைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகள் நடந்துள்ளதாகவும், ரயில்களைக் கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர்கள், சைக்கிள்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் சிமென்ட் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் மட்டும் 15 முறையும், செப்டம்பர் மாதம் முதல் பத்து நாட்களில் இதுவரை 3 முறையும் ரயிலைக் கவழ்க்க முயற்சிகள் நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், ரயில் கவிழ்ப்பு முயற்சிகள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் அதிகம் என்பது தெரியவந்துள்ளதால், இதன் பின்னணியில் எத்தகைய சதி வேலைகள், சதிவலைப் பின்னல்கள் உள்ளன என்பதைக் கண்டறிய வேண்டிய பொறுப்பும் பணியும் உளவுத் துறைகளுக்கு ஏற்பட்டுள்ளன. உ.பி.க்கு அடுத்த படியாக, பஞ்சாப், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ம.பி.,ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ரயில் கவிழ்ப்பு முயற்சிகள் நடந்துள்ளன. குறிப்பாக, நாட்டின் வட மாநிலங்களில் இத்தகைய முயற்சிகள் நடப்பது, மிகப் பெரும் கவலைகளை நாட்டில் ஏற்படுத்தியுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் சபர்மதி ரயில், கான்பூர் அருகே தண்டவாளத்தின் மீது வைக்கப்பட்ட பாறாங்கற்களைப் போன்ற கனமான பொருளின் மீது மோதியதில் 22 பெட்டிகள் தடம்புரண்டன. அதிர்ஷ்டவசமாக இதில் பயணிகள் எவரது உயிருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சிலர் லேசான காயங்களுடன் தேறினர்.
இது நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், தற்போது கான்பூரில் மீண்டும் பயணிகள் செல்லும் ரயிலை கவிழ்க்கும் நோக்கில், தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர் வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன் தினம், அதே கான்பூர் பகுதியில் தற்போது தண்டவாளத்தில் காஸ் சிலிண்டருடன், பெட்ரோல் கேன்கள், தீப்பெட்டிகள் இவற்றுடன் அபாயகரமான பொருள்களும் வைக்கப்பட்டு ரயிலைக் கவிழ்க்கவும் பெரும் விபத்து ஏற்படச் செய்யவும் முயற்சி நடந்துள்ளது.
உ.பி.,யின் பிரயாக்ராஜில் இருந்து ஹரியானாவின் பிவானிக்கு, காலிந்தி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு, வேகமாக சென்று கொண்டுஇருந்தது. கான்பூருக்கு அருகே, சிவ்ராஜ்பூர் என்ற இடத்திற்கு வந்த போது, ரயிலின் ஓட்டுநர் தீவிரக் கண்காணிப்புடன் ரயிலை இயக்கியபோது, ரயில் பாதையில் கேஸ் சிலிண்டர் உள்பட சில பொருள்களை கண்டு அதிர்ச்சி அடைந்து. சமயோசிதமாக செயல்பட்டு ரயிலை உடனடி பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார். இதனால் வேகமாக வந்து மோதி அதனால் ஏற்படும் மிகப்பெரும் விபத்தும் சேதமும் தவிர்க்கப்பட்டுள்ளது. உடனடி பிரேக் மூலம் ரயில் மெதுவாக வந்து தண்டவாளத்தில் இருந்த சமையல் காஸ் சிலிண்டர் மீது ரயில் இன்ஜின் மோதியது. இதில் காஸ் சிலிண்டர் துாக்கி வீசப்பட்டது. சிலிண்டர் வெடிக்காததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சிலிண்டர் மீது லேசாக இடித்து கீழே தள்ளியதால் பெரு விபத்து ஏற்படாமல் காக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கும் கான்பூர் உள்ளூர் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டதன் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து, உ.பி., சட்டம் – ஒழுங்கு கூடுதல் காவல் கமிஷனர் ஹரிஷ் சந்திரா தெரிவித்தபோது, தண்டவாளத்தில் சமையல் காஸ் சிலிண்டர் இருப்பதை பார்த்தவுடன், ரயில் டிரைவர், ‘எமர்ஜென்சி பிரேக்’ போட்டார். எனினும், சிலிண்டர் மீது ரயில் இன்ஜின் மோதியது. அதிர்ஷ்டவசமாக, சிலிண்டர் வெடிக்கவில்லை. அந்த சிலிண்டரை பறிமுதல் செய்துள்ளோம். சம்பவ இடத்தில் இருந்து பெட்ரோல் குண்டுகள், தீப்பெட்டிகளை கைப்பற்றினோம்.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதித் திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. எனினும் அவர்களின் இந்த திட்டம் முறியடிக்கப்பட்டு விட்டது. சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த நிலையில், சுவீட் பாக்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. இதை வைத்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ரயில்வே போலீசார், மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர். மேலும், தனிப்படை போலீசாரும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதில் சில குறிப்பிட்ட மத அமைப்பைச் சேர்ந்தோரிடம் விசாரிக்க உள்ளோம். இந்த நாசவேலையைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – என்று அவர் கூறினார்.
இது நாள் வரையில் சிறுவர்கள் விளையாட்டுக்காக வைக்கப்பட்டது மனநிலை சரியில்லாதவர்கள் கற்களை வைத்திருக்கிறார்கள்; Youtube வீடியோக்கள் ரிலீஸ்காக யாரோ இளைஞர்கள் சிலர் இவ்வாறு ரயில் பாதைகளில் அபாயகரமான பொருட்களை வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகளில் கூறப்பட்டு வந்ததை இப்போது நாம் தூசு தட்டி அவற்றின் பின்னணியை குறித்து ஆராய வேண்டியுள்ளது. ஏனென்றால் இவை ஒரு குறிப்பிட்ட ரீதியில் முக்கியமாக ரயில்களை குறி வைத்து ஒரு குறிப்பிட்ட கும்பலால் நடத்தப்பட்டு வரும் தாக்குதல் என்ற அனுமானத்துக்கு வர வேண்டி உள்ளது.
வந்தே பாரத் ரயில்களின் மீது கற்களை வீசும் போது அவ்வாறு கற்களை வீசியவர்களை பிடித்து கடுமையான தண்டனைகள் அளித்து அதனை பெரிய அளவில் செய்திகளில் பரப்பி விட்டிருந்தால் மற்றவர்களுக்கு அது குறித்த அச்ச உணர்வு சிறிதேனும் வந்திருக்கும். ஆனால் அவ்வாறு செய்யாமல் மென்மையான போக்கை கடைபிடித்தது, இது போன்ற தேச துரோக செயல்களுக்கு மேலும் ஊக்கம் அளிப்பதாகவே அமைந்து விடும் என்பதையே, ரயில் பாதைகளில் தற்போதைய கான்கிரீட் ஸ்லாப்புகள் வைக்கப்படுவதும் சிலிண்டர்கள் வைக்கப்படுவதும் நமக்குக் காட்டுகிறது.
ஏற்கெனவே ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து தொடக்க கட்ட விசாரணையில் இதுபோன்று ஏதோ ஒரு சதி செயல் என்றவாறு வெளிவந்திருந்ததையும், ஆனால் அதன் பின்னர் விசாரணை குறித்த தகவல்கள் முழுமையாக வெளிவராமல் போனதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. முக்கியமாக ரயில்வேயில் பணிபுரியும் சிலரின் நிர்வாகத் தவறு எனும் வகையில் செய்தி வெளியானாலும், பலரது உயிரிழப்பு தந்த பாடமும் இது போன்ற பயங்கரவாதப் பின்னணியில் அல்லது தொடர்பில் உள்ளவர்கள் ரயில்வே துறையில் பணியாற்றுவதால் சில சந்தேகங்கள் ஏற்படுவது இயல்பானதே!
இவ்வாறு ரயில்களை குறி வைத்து தாக்குவது நிச்சயம் ஒரு தேசத்துரோக செயலே. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எதிராக நடத்தப்படும் பயங்கரவாத செயல்களுக்கு இம்மியளவும் குறையாத ஒரு பயங்கரவாத செயலே!
2002 அக்ஷர்தாம் கோயில் குண்டுவெடிப்பு, பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு இவை போன்ற பயங்கரவாதச் செயல்களில் பின்னணியில் இருந்த பராதுல்லா கவ்ரி எனும் மத பயங்கரவாதி, இந்தியாவின் நாடி நரம்பாக இருக்கக் கூடிய அடிப்படைக் கட்டமைப்புகளைத் தகர்க்கும் சதிவேலைகளைச் செய்யுங்கள், ரயில்வே, ஆயில் பைப் லைன், கேஸ்பைப்லைன், மின்சார பைப்லைன் ரோடு நெட்வொர்க் இவை போன்றவற்றில் தடைகளை ஏற்படுத்துங்கள் என்று பகிரங்கமாக சொல்லி அவன் சார்ந்த மக்களுக்கு அழைப்பு விடுத்ததையும், இவற்றுக்கு பெரிய அளவில் ஆயுதங்கள் தேவையில்லை நாம் விரைவில் ஆட்சி அமைப்போம் என்று மத ரீதியாக அழைப்பு விடுத்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்க்கிறது.
ப்ரயாக் ராஜ் என்பது முக்கிய புண்ணியத் தலம், குறிப்பாக இந்துக்கள் அதிக அளவில் பயணிக்கிறார்கள். ஆன்மிக சுற்றுலாவாக பிரயாகைக்கு பயணிப்போர் அதிகம் உள்ள அந்த ரயிலைக் குறிவைத்து தாக்குதல் நடத்த சதிவேலையில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கும் ஒன்று. ரயில்களில் எல்லா தரப்பு மக்களும் பயணிப்பார்கள். இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்கள் உள்பட அனைத்து மதத்தவர், ஏழைகள் பணக்காரர்கள், வணிகர்கள், நாட்டின் சட்டங்களை இயற்றும் எம்.பி. எம்.எல்.ஏக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பயணிப்பார்கள் அவர்களை மனதில் கொண்டு குறி வைத்து ரயில்கள் மீது தாக்குதல் தொடுப்பது இந்த நாட்டின் மீதான பெரும் தாக்குதலே.
ரயில்களில் இந்தியர்கள் தான் பயணிப்பார்கள் என்று சொல்ல முடியாது வெளிநாட்டவரும் சுற்றுலாவாக வருபவர்களும் ரயில்களில் பயணிக்கிறார்கள் என்பதால் இதனை அவ்வளவு எளிதில் கடக்க முடியாது. காளிந்தி விரைவு ரயிலில் நடந்த சதி வேலையில் தடய அறிவியல் துறையும் விசாரணையில் இறங்கியுள்ளது இந்த நிகழ்வின் விபரீதத்தையே நமக்கு காட்டுகிறது .
வாராணசி – சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் கிடந்த பாறையில்இடித்து
22 பெட்டிகள் தடம்புரண்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ், கனமான பொருள் மீது இடித்திருக்கிறது. அந்தப் பொருளை எடுத்திருக்கிறோம். பாதுகாப்பு கருதி அது குறித்து தெளிவாக வெளியில் சொல்ல முடியாது என்று அவர் தெரிவித்ததை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
தற்போதுள்ள சட்டத்தின்படி பார்த்தால் இது போன்ற குற்றங்களை செய்து அவர்களுக்கு உபா சட்டத்தின் பேரில் மட்டுமே நடவடிக்கைகள் எடுக்க முடியும். ஆனால் நம் நாட்டு நீதிமன்றங்கள் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி குற்றவாளிகளை தப்பிக்க விடும் போக்கே மிகப் பெரும் அளவில் இருந்து வருகிறது. நீதிமன்றங்கள் இதன் மீது இறுகிப் பிடித்தால் மட்டுமே சதிச் செயல்களால் திட்டமிட்ட வகையில் செய்யப்படும் குற்றங்கள் தடுக்கப்படும் என்பது மட்டும் உறுதி.
வெளிநாடுகளில் இதுபோன்று நாட்டின் பொதுக்கட்டமைப்பை சேதப்படுத்தியவர்கள் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். அதுபோல் இங்கும் வா வேண்டும். நாட்டின் பொதுக் கட்டமைப்புகளை சேதப்படுத்துபவர்களை தண்டிப்பதற்கு என தனி சட்டம் வேண்டும். அதற்கான தனி கோர்ட் அமைக்கப்பட வேண்டும். இதில் பெயில் கொடுக்கக் கூடாது. க்ரிட்டிக்கல் இன்ஃப்ராஸ்டக்சர் பில் – கொண்டுவரப்பட வேண்டும் என்பதையே நாட்டின் பாதுகாப்பில் அக்கறை உள்ளவர்கள் முன் வைக்கிறார்கள்.
ரயில்வே அமைசகமும் மத்திய அரசும் இந்த விஷயத்தின் தீவிரத் தன்மை கருதி விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம் . மேலும் இது போன்ற சதி செயல்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை குறித்த விவரங்கள் புகைப்படங்களுடன் வெளிப்படையாக ஊடகங்களில் பகிரப்பட வேண்டும். வெறுமனே நடிகைகள், நடிகர்களின் போட்டோக்கள் செய்திகளை மட்டும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்ற ஊடகங்கள் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் கவனமும் பற்றும் கொண்டு யார் செய்கிறார்கள் என்ன பின்னணியில் செய்கிறார்கள் என்ற புகைப்படங்கள், தெளிவான விவரங்களையும் செய்திகள் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.