- Ads -
Home அரசியல் பலவீனமானவர்களுக்கு உதவ கடவுளும் முன்வருவதில்லை!: ஆர்.எஸ்.எஸ்., தலைவரின் விஜயதசமி உரை!

பலவீனமானவர்களுக்கு உதவ கடவுளும் முன்வருவதில்லை!: ஆர்.எஸ்.எஸ்., தலைவரின் விஜயதசமி உரை!

நூற்றாண்டு வருடம் நிறைவடைந்த பிறகு, சில விஷயங்களைக் கையிலெடுத்து அதில் அனைத்து அன்பர்களும் விறுவிறுப்புடன் செயல்படச் செய்ய ஸ்வயம்சேவகர்கள்

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின்  (ஆர்.எஸ்.எஸ்) சர்சங்கசாலக் டாக்டர்  மோகன் பாகவத் நிகழ்த்திய நாகபுரி விஜயதசமி (2024 அக்டோபர் 12) விழா பேருரை

இன்றைய விஜயதசமி நன்னாளில், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தனது பணியின் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கடந்த ஆண்டு இதே தினத்தில் நாம் மஹாராணி துர்காவதியை, அவர்களது ஒளிமயமான தியாக வாழ்வின் 500வது ஜெயந்தியை நினைவு கூர்ந்தோம். இந்த ஆண்டினை, ராணி அஹில்யாபாய் ஹோல்கர் அவர்களின் 300வது பிறந்த ஆண்டாக கொண்டாடி வருகிறோம். ராணி அஹில்யாபாய் திறன்மிக்க ஆளுகை தந்தவர். மக்கள் நலன் கருதும் கடமையுணர்வு பூண்ட அரசி.

நமது தர்மம் – கலாச்சாரம் – தேசம் குறித்து பெருமிதம் கொண்டவர். ஒழுக்கத்தின் மேன்மையை லட்சியமாக கொண்டவர். அரசியல் தந்திரம், போர்த்திறன் நன்கு அறிந்த ஆட்சியாளர். இக்கட்டான சூழ்நிலையிலும் கூட அற்புதமான திறமை காட்டி, நாட்டையும், வீட்டையும், சுயமாக காத்து, பாரதத்திற்கே உரிய பண்பின் அடிப்படையில், தனது ஆட்சி எல்லைக்கு வெளியேயுள்ள பல திருக்கோயில்களையும் புனர்நிர்மாணம் செய்தார், புதிதாகவும் ஆலயங்கள் எழுப்பினார். அதன் மூலம் சமுதாயத்தில் சமத்துவம், பண்பாடு ஆகியவற்றை அவர் காப்பாற்றியது, மாத்ரு சக்திக்கு இன்று வரை ஊக்கமளித்து வருகிறது. அத்துடன் அவரின் பணி, மாத்ருசக்தியின் திறமை மற்றும் தலைமை பண்பிற்கு ஒரு தலைசிறந்த உதாரணம்.

இது ஆரிய சமாஜத்தின் நிறுவனர் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200வது ஜெயந்தி ஆண்டும் கூட. அவர், நம் மக்கள் அன்னிய ஆதிக்கத்திலிருந்து விடுபடவும், கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நமது ஒழுக்கம், பண்பாடு மற்றும் சமுதாய பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட சிதைவுகளை சீர் செய்து, சமுதாயத்திற்கு அதன் அடிப்படை ஆதாரம் எது என்று புரிய வைத்து, நிலை நிறுத்தினார். பாரதத்தின் எழுச்சி வரலாற்றின் உந்து சக்தியாக விளங்கியவர்களில் அவர் பெயர் பிரதான இடத்தில் இருக்கிறது.

ராம ராஜ்யம் போன்ற சூழலை உண்டாக்க மக்களின் குணம், ஒழுக்கம், சுயதர்மத்தில் உறுதி போன்றவை அவசியம். அவ்வாறான பண்புகளையும், சமுதாய பொறுப்பையும் எல்லோரிடத்திலும் ஏற்படுத்த சத்சங்கம் நடத்த, பூஜனீய ஸ்ரீ அனுகூல சந்திர தாகூர் அவர்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இன்றைய வங்கதேசம் (அன்றைய வடக்கு வங்கம்) பாபனா என்ற இடத்தில் பிறந்த ஸ்ரீ அனுகூல் சந்திர தாகூர் ஹோமியோபதி மருத்துவர். தனது தாயிடமே ஆன்மிக சாதனாவுக்கான தீட்சை பெற்றவர். தனிப்பட்ட சொந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண தன்னை நாடி வருபவர்களிடம் இயல்பாக அவர் ஏற்படுத்திய மாற்றம், சேவை மனப்பான்மை ஏற்படுத்துதல் போன்றவை பின்னாளில் சத்சங்கமாக மாறியது. பிறகு 1925-ல் ஒரு தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. 2024 – 25 ஆண்டில் அந்த சத்சங்கத்தின் தலைமையிடமான தேவ்கரில் (ஜார்க்கண்ட் மாநிலம்) அதன் நூற்றாண்டு கொண்டாடப்படவுள்ளது. சேவை, பண்பாடு முன்னேற்றம் உள்ளிட்ட பல முன்னெடுப்புக்களோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

வரும் நவம்பர் 15 அன்று பகவான் பிர்சா முண்டாவின் 150-ம் ஆண்டு துவங்குகிறது. பட்டியல் சமூக, மலைவாழ், பழங்குடியின மக்களை அந்நிய சக்திகளின் அடிமைத்தனம், சுரண்டல், தாக்கத்திலிருந்து மீட்டு, இனத்தையும், பண்பாட்டையும் சுயதர்மத்தையும் பாதுகாக்க பாடுபட்ட, பகவான் பிர்சா முண்டாவை நினைவுகூர்வோம். தியாகமயமான அவரது வாழ்க்கைதான், பழங்குடியின மக்கள் தன்மான வளர்ச்சி, தேசியம் ஆகியவற்றில் பங்கேற்க முக்கிய காரணமாக அமைந்தது.

தனிப்பட்ட ஒழுக்கம், தேசிய ஒழுக்கம்

இவர்களை போன்று, சுயநலமின்றி, உறுதியோடு, தேசம், தர்மம், பண்பாடு, சமுதாயம் இவற்றின் நன்மைக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்களை, நாம் அவர்களின் பொது நல சேவைகளுக்காக மட்டும் நினைவுக்கூர்வதில்லை. மாறாக முன்னுதாரணமாக வாழ்ந்து, நமக்கெல்லாம் வழிகாட்டியிருக்கிறார்கள் என்பதற்காகவும் தான். வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு பகுதியில் பணியாற்றிய இத்தகைய மாமனிதர்களின் வாழ்வில் சில ஒற்றுமைகள் உள்ளன. பிறர் மீது வெறுப்பின்மை, பகையின்மை, பயமின்மை போன்றவை இவர்களது இயல்பாக இருந்துள்ளது. போராடும் கட்டாயம் எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் முழு ஆற்றலுடன், எதிர்த்து போராடினர். எனினும் ஒருபோதும் வெறுப்போ, பகைமையோ பாராட்டியதில்லை. அப்பழுக்கற்ற ஒழுக்கமே அவர்கள் வாழ்வின் இலக்கணமாக இருந்தது. அதன் காரணமாக தீயவர்களுக்கு அச்சுறுத்தலாகவும், நல்லவர்களுக்கு நம்பிக்கையளிப்பவர்களாகவும் இருந்தனர். நாமும் இன்றைய சூழ்நிலையில் அத்தகைய மனப்பாங்கை அடைய முயற்சி செய்ய வேண்டும். சூழ்நிலை சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும், தனிமனித ஒழுக்கம், தேசிய ஒழுக்கம் குறித்து அத்தகைய உறுதிப்பாடுதான், மங்கலத் தன்மை நல்லதன்மை இவற்றி
வெற்றிக்கான அடித்தளம்.

தேசத்தின் முன்னேற்றப் பாய்ச்சல்

இன்று மனித குலம் படுவேகப் பாய்ச்சலால் உலகியல் வளர்ச்சி காணும் காலம். அறிவியல், தொழில்நுட்பம் இவற்றின் உதவியுடன் வாழ்க்கையை வசதிகள் நிரம்பியதாக ஆக்கி விட்டோம். ஆனால் மறுபுறம் நமது சுயநலத்தால் ஏற்பட்ட குழப்பம், நம்மை வீழ்ச்சிப் பாதையில் தள்ளுகிறது. மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல், ஹமாஸ் படைகளுக்கு இடையேயான மோதல் இன்று எந்த அளவுக்குப் போயுள்ளது என்பதக் கண்கூடாகப் பார்க்கிறோம். நமது நாட்டிலும் நம்பிக்கைகள், அபிலாஷைகள் ஆகியவற்றுடன் சவால்களும், பிரச்சினைகளும் கூட தென்படுகின்றன.

ALSO READ:  IND Vs NZ: தொடரை வென்ற நியூசிலாந்து!

சங்கத்தின் விஜயதசமி உரையில் இந்த இரு விஷயங்கள் குறித்து இயன்ற அளவு விரிவாக பேசப்படுவதுண்டு. ஆனால் இன்று நான் சில சவால்களை பற்றி மட்டும் பேச விரும்புகிறேன். ஏனெனில் நம்பிக்கை, அபிலாஷை இவற்றை நிறைவேற்றுவதில் தேசம் வேகமெடுத்துள்ளது. அது தொடரும். கடந்த சில ஆண்டுகளாக உலக அரங்கில் பாரதம் ஒரு சிறந்த உறுதியான நாடாக நிலை பெற்றுள்ளதை பார்க்கிறோம். உலகம், நமது முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது. இயல்பாகவே பல துறைகளில் நம் பாரம்பரிய உணர்வுகளில் இழையோடும் சிந்தனைக்கு மரியாதை கூடியுள்ளது. “உலகம் ஒரு குடும்பம்” என்ற நமது உணர்வுக்கும், சுற்றுச்சூழல் பற்றிய நமது பார்வைக்கும் வரவேற்பு கிடைக்கிறது. யோகா போன்றவற்றை உலகம் தயக்கமின்றி ஏற்கிறது. சமுதாயத்தில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஸ்வ – (சுயம்) பற்றிய பெருமிதம் கூடியுள்ளது. பல துறைகளில் மெல்ல மெல்ல முன்னேறி வருகிறோம்.

ஜம்மு காஷ்மீர் உள்பட எல்லா இடங்களிலும் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேசத்தில் இளைஞர் சக்தி, மாத்ரு சக்தி, தொழில் முனைவோர், விவசாயிகள், உழைப்பாளிகள், ராணுவ வீரர்கள், ஆட்சி அதிகாரம் – நிர்வாகம் போன்றவை அனைத்தும் உறுதியுடன், கடமையுணர்வுடன் தங்களது பணிகளில் ஈடுபடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் தேச நலனை முன்வைத்து இவர்கள் அனைவரும் செய்த சாதனையால்தான், உலகத்தின் பார்வையில் பாரத தேசத்தின் கீர்த்தி, வலிமை, புகழ், அனைத்தும் தொடர்ந்து ஓங்கி வருகின்றன. ஆனால் நமது மனோதிடத்தை சோதிக்க சில ரகசிய சதிவேலைகளும் நடைபெறுகிறது. நம் முன் உள்ள சதிகளை நாம் சரிவர புரிந்து கொள்ள வேண்டும். தேசத்தின் இன்றைய சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்தால், அத்தகைய சவால்கள் நன்றாக விளங்கும். நாட்டின் நாலாபுறமும் அமைதியற்ற, கொந்தளிப்பான நிலையை தோற்றுவிக்கும் முயற்சி வேகமெடுப்பது தெரிய வரும்.

தேச விரோத கொடுஞ்செயல்கள்

உலக அளவில் பாரதம் முக்கியத்துவம் பெற்றுள்ளதை அடுத்து சில சக்திகளின் சுயலாப வேட்டை அடிவாங்குகிறது. அந்த சக்திகள் பாரதத்தின் வளர்ச்சியை முடக்கி கட்டுப்படுத்த முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே நடக்கிறது. தங்களை தாராள மனப்பான்மை உள்ளவர்களாகவும், ஜனநாயகவாதிகளாகவும், உலக அமைதிக்காக முனைவோர் எனவும் கூறிக்கொள்ளும் நாடுகளின் இந்த முனைப்பு அவர்களின் பாதுகாப்பு, சுயநலம் பற்றி கேள்வி எழுந்தவுடனேயே மாயமாகி விடுகிறது. பின்னர் அவர்கள் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவோ அல்லது அந்நாடுகளின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை சட்டவிரோத அல்லது வன்முறை வழிகளில் தூக்கியெறியவோ தயங்குவதில்லை. பாரதத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நடக்கும் நிகழ்வுகளைக் கவனித்தால், இவற்றை அனைவரும் புரிந்து கொள்ள முடியும். பொய்யும் புரட்டுமாக நடந்துகொண்டு பாரதத்தின் நன்மதிப்பைக் கெடுப்பதற்காக திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்படுவது தெளிவாகத் தெரிகிறது.

பங்களாதேஷில் இப்போது நடந்த புரட்சி, வன்முறை சம்பவங்களில், இது போன்ற முயற்சிகளுக்கும் பங்குள்ளது. ஆனால் ஹிந்து சமுதாயத்தின் மீது காரணமேயில்லாமல் கொடுமைகள் மீண்டும் கட்டவிழ்த்து விடபட்டுள்ளது. அந்த அட்டூழியங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அங்குள்ள ஹிந்து சமுதாயம் இந்த முறை ஒன்றிணைந்து, தங்களைத் தற்காத்துக் கொள்ள வீட்டை விட்டு வெளியே வந்ததால், ஓரளவு பாதுகாக்கப்பட்டது. ஆனால் இந்த கொடுமையான மதவெறி இருக்கும் வரை அங்குள்ள ஹிந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மை சமூகத்தினருக்கு ஆபத்து காத்திருக்கத்தான் செய்யும். அதனால்தான், அந்த நாட்டிலிருந்து பாரதத்திற்குள் சட்ட விரோதமாக ஊடுருவுவதும், அதனால் ஏற்படும் மக்கள் தொகை ஏற்றத்தாழ்வுகளும், நாட்டில் சாமானியர்களிடையே ஆழ்ந்த கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இந்த சட்டவிரோத ஊடுருவல் காரணமாக, பரஸ்பர நல்லிணக்கமும் நாட்டின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. வங்கதேசத்தில் சிறுபான்மையினராக மாறியுள்ள ஹிந்து சமுதாயத்திற்கு, பெருந்தன்மை, மனிதநேயம் நல்லெண்ணத்தை ஆதரிக்கும் அனைவரின் உதவியும் தேவைப்படும்; குறிப்பாக நமது அரசு உதவியும் உலகெங்கிலும் உள்ள ஹிந்துக்களின் உதவியும் தேவைப்படும்.

ஒற்றுமையில்லாமல் பலவீனமாக இருப்பது கொடூரக்காரர்களின் அட்டூழியங்களுக்கு அழைப்பு விடுப்பதாகும் என்ற பாடத்தையும் உலகெங்கும் உள்ள ஹிந்து சமுதாயம் கற்க வேண்டும். ஆனால் விஷயம் இத்துடன் நிற்கவில்லை. இப்போது பாரதத்திடமிருந்து தப்பிக்க பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இத்தகைய தோற்றத்தை உருவாக்குவதன் மூலம் எந்தெந்த நாடுகள் பாரதத்திற்கு அழுத்தம் கொடுக்க விரும்புகின்றன என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவை அரசு சம்பந்தமான விஷயங்கள். இடர்ப்பாடுகளை சந்தித்து வரும் சமுதாயத்தினருக்கு மிகவும் கவலையளிப்பது, சட்டத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி, அதிருப்தியை அராஜகமாக மாற்றும் முயற்சிகள் அதிகரித்து வருவது தான்.

ALSO READ:  மதுரையில் எஸ்.பி.பி., 4ம் ஆண்டு நினைவஞ்சலி!

இன்று ‘டீப் ஸ்டேட்’, ‘வோக்கிசம்’, ‘கலாச்சார மார்க்சிஸ்ட்’ பற்றி பேச்சு அடிபடுகிறது. உண்மையில், இவை, அனைத்து கலாச்சார மரபுகளுக்கும் எதிரானவை; பண்புகள், மரபுகள், உன்னதமான அல்லது மங்களகரமானதாகக் கருதப்படும் அனைத்தையும் முற்றிலும் அழிப்பது இந்த கூட்டத்தார் வேலைகளின் ஒரு பகுதியே. கல்வி முறை, கல்வி நிறுவனங்கள், தகவல் தொடர்பு ஊடகங்கள், அறிவுசார் உரையாடல் போன்ற மக்கள் கருத்தை உருவாக்கும் வழிமுறைகள் / நிறுவனங்கள் ஆகியவற்றைத் தங்கள் செல்வாக்கின் கீழ் கொண்டு வந்து, அவற்றின் மூலம் சமுதாயத்தின் எண்ணங்கள், மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளை அழிப்பது, இந்த முறையின் முதல் படியாகும். ஒன்றாக வாழும் ஒரு தேசத்தின் / சமுதாயத்தின், எந்தவொரு பகுதியும் அதன் தேவை / பிரச்சினை அடிப்படையில் உண்மையான அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட தனித்தன்மையை வைத்து பிரிந்திருக்க தூண்டப்படுகின்றன. அவர்கள் மனதில் வஞ்சிக்கப்பட்ட உணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதிருப்தியை வெளிப்படுத்துவதன் மூலம், அவர்கள் மற்ற சமூகங்களிலிருந்து வேறுபட்டவர்கள் என தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. சமுதாயத்தில் நிலவும் சிறிய பிரச்சினைகளை பெரிதாக்கி நேரடி மோதல்கள் உருவாக்கப்படுகின்றன. அமைப்பு, சட்டம், நிர்வாகம், அரசு போன்றவற்றின் மீது அவநம்பிக்கையையும் வெறுப்பையும் தீவிரப்படுத்துவதன் மூலம் அராஜக / பீதி சூழல் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த நாட்டின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது எளிதாகிறது.

பல கட்சிகளைக் கொண்ட ஜனநாயக ஆட்சி அமைப்பில், கட்சிகள் அதிகாரத்தை அடைய போட்டியிடுகின்றன. பரஸ்பர நல்லெண்ணம் அல்லது தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் காட்டிலும் தங்களது சுயநலம் முக்கியமானதாக ஆகிவிட்டால்; கட்சிகளுக்கிடையே நடக்கும் போட்டியில், சமுதாயத்தின் நல்லெண்ணமும், தேசத்தின் பெருமையும், ஒருமைப்பாடும் இரண்டாம் பட்சமாக கருதப்படும், அப்படியான கட்சி அரசியலில், ஒரு கட்சிக்கு ஆதரவாக நின்று, பேரழிவு திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே இவர்களின் செயல் முறை. இது கற்பனைக் கதையல்ல; உலகின் பல நாடுகளில் நடந்த உண்மை. மேற்கத்திய உலகின் முன்னேறிய நாடுகளில் இந்த மர்மப் புரட்சியின் விளைவாக, வாழ்க்கையின் நிலைத்தன்மை, சமூக அமைதி, நாட்டின் வளம், ஆகியவற்றுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதை தெளிவாகக் காணலாம். “அரபு நாடுகள் முதல் அண்டை நாடான வங்காளதேசத்தில் நடப்பது வரையில் இந்த முறையை நாம் காண்கிறோம். பாரதம் முழுவதும் – குறிப்பாக எல்லைப் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் இதே போன்ற கொடிய முயற்சிகளை நாம் காண்கிறோம்.

கலாச்சாரம் தரும் ஒருமை உணர்வு, உன்னத நாகரிகம் இவையே நமது தேசிய வாழ்க்கையின் வலுவான அஸ்திவாரம். நமது சமுதாய வாழ்க்கை உன்னதமான பண்புகளால் உந்தப்பட்டு ஊட்டம் பெறுகிறது. இத்தகைய நமது தேசிய வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது அழிக்கும் கொடும் சக்திகளை முன்கூட்டியே தடுத்து நிறுத்துவது அவசியம். விழிப்புணர்வுள்ள சமுதாயமே இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு நமது பண்பாட்டு ரீதியான வாழ்க்கைத் தத்துவ நெறியில், அரசியல் சாஸனம் காட்டும் முறையில் ஒரு ஜனநாயகத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். வலுவான கருத்து உருவாக்கி சிந்தனாமுறையில், கலாச்சாரத்தில் மாசு பரப்பும் இந்த சதியிலிருந்து சமுதாயத்தை காப்பது காலத்தின் தேவை.

கலாசார சீரழிவின் தீய விளைவு

பல்வேறு கருவிகளும் அமைப்புகளும் செய்து வரும் விபரீத பிரச்சாரம் பாரதத்தில், குறிப்பாக இளம் தலைமுறையினரின் மனம், சொல், செயலில், மிக மோசமான் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு காலத்தில் பெரியவர்கள் கையில் மட்டுமே இருந்த அலைபேசி, இன்று பல சிறார்களின் கைகளை அடைந்துவிட்டது. குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள், அவர்களால் என்னவெல்லாம் காணமுடியும் என்பதில் கட்டுப்பாடே இல்லை. இன்று அலைபேசி என்பது கண்ணியமற்ற விஷயங்களுக்காக வடிகாலாகிவிட்டது என்று கூறினாலும் மிகையாகாது. ஒலி ஒளி ஊடகங்களில் வரும் விளம்பரங்களும், அருவருக்கத்தக்க படக்காட்சிகளும், பாடல்களும் நமது சமுதாயத்திலும், வீடுகளிலும், குடும்பங்களிலும் ஏற்படுத்தும் தீமைகளைக் கட்டுப்படுத்த உடனடியாக சட்டம் இயற்றுவது அவசியம் என்று தோன்றுகிறது. இளைஞர்கள் மத்தியில் காட்டுத்தீயைப் போல் பரவி வரும் போதை பழக்கமும், சமுதாயத்தை உள்ளூர சூனியமாக்கி வருகிறது. சமுதாயத்தை நன்னெறிப்படுத்தும் பண்புப் பதிவுகளுக்குப் புத்துயிர் அளித்தாக வேண்டும்.

பண்பாடு சிதைக்கப்பட்டதால் “மாத்ருவத் பர தாரேஷு” (பிறர் மனையாளை தாயாக கருதுதல் … “பிறன்மனை நோக்காத பேராண்மை” கொண்ட சமுதாயமாய் இருந்த பலாத்காரங்களும் கற்பழிப்புக்களும் இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் நடப்பதைக் காண்கிறோம். கொல்கத்தாவிலுள்ள ‘ஆர். ஜி. கர்’ மருத்துவமனையில் நிகழ்ந்த விஷயம், நம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலைக்குனிவுக்கு ஆளாக்கிய வெட்கக்கேடான சம்பவங்களில் ஒன்று. இது போன்றவை தடுக்கப்படவேண்டும் என்றும், ஆர். ஜி. கரில் நடந்த சம்பவத்தை பாரபட்சமற்ற முறையில் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்றுகோரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ சகோதர சகோதரிகளுடன் ஒட்டுமொத்த சமுதாயமும் தோளோடு தோள் நின்றது. இது ஒருபுறம் இருக்க, குற்றப் பின்னணி கொண்டோர், அரசியல்வாதிகள் கலாசார சீரழிவு ஆகிய மூன்றுமாக எப்படி நம்மை சீரழிக்கின்றன என்பதற்கு அத்தாட்சி, குற்றத்தில் ஈடுபட்டவர்களை காக்க சிலர் செய்த கேவலமான முயற்சி.
பெண்ணை நாம் பார்க்கும் விதம், “மாத்ருவத் பர தாரேஷு” (பிறர் மனையாளை தாயாக கருதுதல்). இந்த கண்ணோட்டம் நம் கலாச்சாரம் நமக்கு அளித்த கொடை. நம் சமுதாயமும், குடும்பத்தினரும் பொழுதுபோக்கு ஊடகங்கள் மூலம் தம்மை அறியாமலே சில தீய விஷயங்களை எடுத்துக்கொண்டுவிடுகிறார்கள். ஆகையால் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்படாவிட்டால் அதற்கு சமுதாயம் கொடுக்கும் மிகப்பெரிய விலை, கலாச்சார சீரழிவு. குடும்பம், சமுதாயம், ஊடகங்கள் ஆகிய மூன்றின் மூலமும் நம் கலாச்சாரம் போற்றும் பண்புகளை எடுத்துச் சொல்லும் மரபுக்கு புத்துயிரூட்டவேண்டும்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா!

வலிமையே அவசியம்

இன்றைய பாரதத்தில் எங்கு பார்த்தாலும், பண்பைச் சிதைத்து பிளவு ஏற்படுத்தும் சக்திகளின் ஆட்டம் தென்படுகிறது. பொதுமக்களை சாதி, மதம், மாநிலம் என்று அவரவர் விசேஷத்தன்மையை வைத்து சிறுகூறுகளாக்கி மோத விடும் முயற்சி நடக்கிறது. மக்களை சிறு சிறு அடையாளங்களே முக்கியம் என சிறிய வட்டத்தில் முடங்கி குழம்பச் செய்து, பூதாகாரமாக வந்து அனைவரையும் விழுங்கும் ஆபத்து நம்மை சூழ்கிறது என்பதை நிலவரம் கைமீறிப் போகும் வரை மக்கள் அறியவிடாமல் செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதன் தாக்கம் முக்கியமாக பாரதத்தின் வடமேற்கு எல்லையில் அமைத்துள்ள பஞ்சாப், ஜம்மு, காஷ்மீர், லத்தாக் பகுதிகளிலும் கேரளா, தமிழ்நாடு ஆகிய கடல் எல்லை மாநிலங்களிலும் பிஹார் முதல் மணிப்பூர் வரையிலான கிழக்கு மண்டலப் பகுதிகளிலும் பாதித்திருக்கிறது. நான் முன்னே குறிப்பிட்ட எல்லா விஷயங்களின் பாதிப்பையும் இந்த அனைத்துப் பகுதிகளிலும் காணமுடிகிறது.

காரணமே இல்லாமல் தேசத்தில் வெறுப்பும் கசப்பும் தூண்டிவிடும் சம்பவங்கள் திடீரென அதிகரிப்பது தென்படுகிறது. எந்த நிலவரம் அல்லது எந்த கொள்கை பற்றியும் மனதில் அதிருப்தி இருக்கலாம். ஆனால் அதை வெளிப்படுத்த, அல்லது எதிர்க்க ஜனநாயக வரம்புக்குள் பல வழிவகைகள் உண்டு. இவற்றை புறக்கணித்து வன்முறையில் இறங்குவது, காரணமில்லாமல் சமுதாயத்தின் ஒரு சாராரைக் குறிவைத்து தாக்குவது பிதி ஏற்படுத்துதல் இவை எல்லாம் ரௌடித்தனமே அன்றி வேறெதுவும் இல்லை. திட்டமிட்டு தூண்டி விடும் செயலை பெருமதிப்பிற்குரிய டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர், “அராஜகத்தின் இலக்கணம்” (Grammar of Anarchy) என்று கூறுகிறார். சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்த விநாயக சதுர்த்தி ஊர்வலங்களில் நடந்த கல்வீச்சு சம்பவங்கள், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழல் ஆகியவை அராஜகத்தின் இலக்கணமே. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பட்டதும், அப்படியே நடந்தால் அதை உடனே கட்டுப்படுத்துவதும், ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உடனே தண்டனை பெற்றுத்தருவதும் ஆட்சியாளர்களின் கடமை அவர்களின் பணி அது. ஆனால் அரசு களத்திற்கு வரும் வரை, தங்கள் உயிர், உற்றார் உறவினரின்
உயிர், உடமைகளைக் காப்பது சமுதாயத்தின் பொறுப்பு. இதனால் சமூகம் எப்போதும் விழிப்புடனும் ஆயத்தமாகவும் இருக்கவேண்டும்; இம்மாதிரி தீய செயல் செய்வோரையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் அடையாளம் காண்பது அவசியமாகிறது.

இப்படி நிலவரத்தை சித்தரிப்பது, பயம் கொள்ள வைக்கவோ பயமுறுத்தவோ, மோதவோ அல்ல. சமுதாயம் எப்போதுமே விழிப்போடும் எச்சரிக்கையோடும் இருந்தால், தற்போது சில விஷமிகளால் ஊரில் தூண்டப்படும் கலகங்களை முளையிலேயே கிள்ளி எறிய முடியும். அப்படிச் செய்வதன் மூலம் நாட்டின் ஒற்றுமை பேணி, சூழலை அமைதிகரமாகவும், மகிழ்ச்சியாகவும், வளமாகவும், வலிமையாகவும் மாற்றுவது அனைவரின் ஆசை மட்டுமல்ல, அனைவர் கடமையும் கூட. ஹிந்து சமுதாயத்திற்கு இதில் அதிக பொறுப்பு உண்டு. சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட சூழல் நிலவ வேண்டும்; விழிப்புணர்வு வேண்டும்; எதுவானாலும் ஒருமனப்பட்டு ஒரே திசையில் செயல்பட வேண்டும். சமுதாயம் விழித்துக் கொண்டு, தன் சுய வலிமை கொண்டு தன் விதியை தானே தீர்மானிக்க ஆரம்பித்துவிட்டால் ஆன்றோர்கள், அமைப்புக்கள், சங்கங்கள், அரசு, ஆட்சி நிர்வாகத்தினர் என அனைவரும் நமக்கு உதவிகரம் ஆவார்கள். ஆரோக்கியமான உடலில் அரிப்பு முதலில் வருகிறது, இது ஒரு அபாய அறிவிப்பு மணி. அடுத்து நோய்கள் சுற்றி வளைக்கின்றன.

கடவுள் பலவீனமானவர்களுக்கு உதவ ஒருபோதும் வருவதில்லை என்று ஒரு பழமொழி உண்டு.

“அஸ்வம் நைவ கஜம் நைவ, வியாக்ரம் நைவ ச நைவ ச |
அஜாபுத்ரம் பலிம் தத்யாத், தேவோ துர்பல காதகஹ” ||

(குதிரை, யானை, புலி பலியிடப்படுவதில்லை, இல்லவே இல்லை. ஆட்டுக்குட்டியையே பலி கொடுப்பார்கள்; தேவதைகளும் பலவீனனையே பலியாய் கேட்கின்றன).

ஆகவேதான் நூற்றாண்டு வருடம் நிறைவடைந்த பிறகு, சில விஷயங்களைக் கையிலெடுத்து அதில் அனைத்து அன்பர்களும் விறுவிறுப்புடன் செயல்படச் செய்ய ஸ்வயம்சேவகர்கள் முயற்சி மேற்கொள்ள இருக்கிறார்கள்.

Dhinasari Reporter

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version