- இனி தட்கலில் டிக்கெட் போட வேண்டாம்!
- ரயில்வே முன்பதிவில் மிகப் பெரிய மாற்றம்!
- இனிமேல் AI தொழில்நுட்பம் மூலம் கன்பார்ம் டிக்கெட் எளிதாகிறது
ரயில்வே முன்பதிவு காலம் இப்போது 120 நாட்களில் இருந்து 60 நாட்களாகக் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அடுத்த கட்டமாக ஏஐ தொழில்நுட்பத்தை ரயில்வே டிக்கெட்டிங் பிரிவில் பயன்படுத்த இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அதிகபட்ச நபர்களுக்கு கன்பார்ம் டிக்கெட் கிடைக்கும்.
இரயில்களில் பயணிகள் சேவையை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியானது. அதாவது ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாகக் குறைக்கப்பட்டது.
வரும் நவ.1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. இதற்கிடையே அடுத்த கட்டமாக ரயில்வே டிக்கெட்டிங் முறையில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாகவும் இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஏஐ மாடல்: டிக்கெட்டிங் முறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் ரயில்வே நிர்வாகம் தீவிரமாக உள்ளது. ஏற்கனவே உணவு செக்கிங் உள்ளிட்ட சில பிரிவுகளில் ரயில்வே நிர்வாகம் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது.
அதாவது உணவு தயாரிக்கும் இடத்தில் எந்தவளவுக்குத் தூய்மை கடைப்பிடிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிய உணவு தயாரிக்கும் கூடங்களில் ஏஐ கேமரா பொருத்தப்படும். அந்த கேமரா தூய்மை உரிய முறையில் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யும். முதலில் புனேவில் மட்டுமே இதைச் சோதனை அடிப்படையில் செயல்படுத்தியுள்ளனர்.
அதேபோல ஏசி வகுப்புகளில் வழங்கப்படும் பெட்ஷீட்கள் தூய்மையாக உள்ளதா என்பதைக் கண்டறியவும் ஏஐ கேமரா பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சூழலில் தான் அடுத்த கட்டமாக ரயில்வே டிக்கிடிங்கில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது.
வரும் மேஜர் மாற்றம்: ரயில்களில் எங்கு சீட்கள் புல் ஆகி உள்ளது என்பதைக் கண்காணிக்க இந்த ஏஐ மாடல் உதவும்.
இது குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷணவ் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “ஏஐ மாடலை பயன்படுத்துவது ரயில் பயணிகளுக்கு உதவியாக இருக்கும். இப்படி தான் குறிப்பிட்ட ஒரு ரூட்டில் ஏஐ மாடலை பயன்படுத்தினோம். அதன் பிறகு அந்த ரூட்டில் கன்பாரம் ஆன டிக்கெட்கள் 30%க்கு மேல் அதிகரித்திவிட்டது” என்றார்.
இது எப்படிச் செயல்படும் என்பதை விளக்கிய அமைச்சர் அஸ்வினி வைஷணவ், “பொதுவாக இப்போது ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு முதலாவது சார்ட் ரெடி செய்யப்படுகிறது.
இந்த இடத்தில் தான் ஏஐ உள்ளே வருகிறது. கன்பாரம் ஆன டிக்கெட்களை ஆய்வு செய்யும் ஏஐ மாடல் 2, 3 ஸ்டேஷன்களுக்கு பிறகு எத்தனை சீட் காலியாக இருக்கும் என்பதை நமக்குக் காட்டுகிறது. அதை வைத்துக் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு சீட் வழங்க முடியும்” என்றார்
ரயில்வே திட்டம்: ஏஐ மாடல் இந்த டேட்டாவை படித்து இருக்கை குறித்த முக்கிய தகவல்களை அளிப்பதால்.. இதன் மூலம் அதிகபட்ச பயணிகளுக்கு கன்பார்ம் டிக்கெட் வழங்க முடியும் என்கிறார்கள்.
தற்போது வெயிட்டிங் லிஸ்ட் கிளியர் செய்யும் போது ஸ்டேஷன் ரீதியாக சீட் பிரிக்கப்பட்டு, அவை ஒதுக்கப்படுகிறது. இதில் தான் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டிக்கெட் தேவை அதிகமாக இருக்கும் நிலையங்களைக் கண்டறிந்து அதற்கேற்ப டிக்கெட் வழங்க திட்டமிட்டுள்ளது.