வாகன உரிமம் – அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு.
இலகு ரக வாகன உரிமம் பெற்றவர்கள் 7500 கிலோவிற்கு மிகாமல் இருக்கும் சரக்கு வாகனங்களை ஓட்டலாம் என்று, 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. போக்குவரத்து வாகன ஓட்டுநர்களுக்கு இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கும் விதமாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு இந்தத் தீர்ப்பு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், சரக்கு வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு காப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் மறுத்து வந்தன.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், குறிப்பிட்ட விபத்தில் வாகனம் ஓட்டிய நபர் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தார். ஆனால், அவர் ஓட்டிச் சென்ற வாகனம் போக்குவரத்து வாகனம் என்பதால், அதற்கான காப்பீட்டுப் பணத்தை வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் மறுப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
இலகு ரக வாகனத்திற்கும், போக்குவரத்து வாகனத்திற்கும் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை. இதற்காக தனித்தனி ஓட்டுநர் உரிமம் வைத்து இருந்தாலும், இலகு ரக உரிமம் வைத்துள்ளவர்கள் 7,500 கிலோ வரை எடைகொண்ட வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதி உள்ளது.
சில வாகன விபத்துகளில் போக்குவரத்து வாகனத்தை இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் இயக்கி விபத்தில் சிக்கும்போது இதைக் காரணம் காட்டி காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டுப் பணத்தை வழங்க மறுப்பது சட்ட விரோதம் – என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.