- Ads -
Home இந்தியா பிரதமர், ஆளுநர் தமிழில் பொங்கல் வாழ்த்து!

பிரதமர், ஆளுநர் தமிழில் பொங்கல் வாழ்த்து!

பல தொழில் செய்து சுழலும் இவ்வுலகத்தில் ஏர்ப்பிடிக்கும் தொழிலை பின்பற்றி தான் உலகம் சுற்ற வேண்டியிருக்கிறது என்பது வள்ளுவன் வாக்கு.

தமிழகத்தில் நாளை கொண்டாடப்படவுள்ள மகர சங்கராந்தி, தைப்பொங்கல் பண்டிகை தொடர்பில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பொங்கல் செய்தி:

எனது அமைச்சரவை சகாவான திரு ஜி கிஷன் ரெட்டி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் பங்கேற்றேன். மிகச்சிறந்த கலாச்சார நிகழ்வையும் கண்டுகளித்தேன். இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சங்கராந்தியையும், பொங்கல் பண்டிகையையும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.

நமது கலாச்சாரத்தின் வேளாண் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஏராளமானதும், புதுப்பிக்கத்தக்கதுமான நன்றியின் கொண்டாட்டமாக இது விளங்குகிறது. சங்கராந்திக்கும், பொங்கல் பண்டிகைக்கும் எனது நல்வாழ்த்துகள். வரவிருக்கும் அறுவடை பருவத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

ஆளுநர் ரவீந்த்ர நாராயண் ரவி வெளியிட்ட வாழ்த்து செய்தி:

இந்த பொங்கல் திருநாளில், அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள தமிழ் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நாம் அறுவடையை கொண்டாடி, பூமித்தாயின் அளவற்ற ஆசீர்வாதங்களுக்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பழங்கால மரபுகளில் வேரூன்றி, உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, நமது வளமான ஆன்மிக மற்றும் கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிப்பதுடன், பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பேணும் பக்தியில் நம்மை ஒன்றிணைக்கிறது. பொங்கல் உணர்வு அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளத்தை ஊக்குவிக்கட்டும், மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியால் நம் வாழ்க்கையை வளப்படுத்தட்டும்.

ALSO READ:  முட்டாள்தனமான முதலாளித்துவம்!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட பொங்கல் செய்தி:

“தைத் திங்கள் பிறக்கட்டும், நம்மை சூழ்ந்துள்ள இருள் விலகட்டும்!”

தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சார அடையாளமாக திகழும் பொங்கலை கொண்டாடும் உலகெங்கும் உள்ள அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் எனது மனமார்ந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை” — என்றான் வள்ளுவன். பல தொழில் செய்து சுழலும் இவ்வுலகத்தில் ஏர்ப்பிடிக்கும் தொழிலை பின்பற்றி தான் உலகம் சுற்ற வேண்டியிருக்கிறது என்பது வள்ளுவன் வாக்கு.

விவசாயம் செய்து வாழும் நம் மக்கள் பயிர்களை அறுவடை செய்யும் காலத்தில் இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கலிட்டு வழிபடுகின்றனர். உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விழாவாகவும் பொங்கல் திகழ்கிறது.

போகிப் பண்டிகை தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என நான்கு நாட்கள் பொங்கல் திருநாளை மக்கள் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ALSO READ:  இரண்டாம் சோமவாரம்: மதுரை மாவட்ட கோயில்களில் 108 சங்காபிஷேகம்!

இயற்கையை போற்றி வணங்கும் நமது பாரத நாட்டின் கலாச்சார பெருமைமிகு பண்டிகையான பொங்கல் தினத்தை, வழக்கம்போல் இந்த ஆண்டும் உற்சாகமாக நாம் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பது நமது நம்பிக்கை. கல்வி, தொழில், வணிகம் என அனைத்து துறைகளிலும் புதிய வழிகளை தைத் திருநாள் நமக்கு உருவாக்கித் தரும் என நம்புகிறேன். இந்த தைத் திங்கள் நாளில் நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் செழிக்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக போலி திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், ஏழை எளிய மக்கள் என ஒவ்வொருவரும் அனுபவிக்கும் துயரங்கள் ஏராளம். பொங்கல் பண்டிகையை மக்கள் சிரமமின்றி கொண்டாட ஆண்டுதோறும் வழங்கும் பொங்கல் பரிசு பணத்தை கூட இந்த ஆண்டு திமுக அரசு வழங்க மறுத்துள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட பணமின்றி தவிக்கும் மக்கள் ரேஷன் கடைக்கு சென்று வாடிய முகத்துடன் திரும்பி வரும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி நமது உள்ளத்தை உலுக்குகின்றன.

ALSO READ:  ஆண்டாள் கோயிலில் திருப்பாவை முற்றோதல் மாநாடு!

வெற்று விளம்பரங்களுக்கு பணத்தை வாரியிறைத்து வீண் செலவு செய்யும் திமுக அரசுக்கு ஏழை எளிய மக்களை பற்றி கவலை இல்லை. யாருக்கும் பயனற்ற ஒரு குடும்ப ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் திறமை, தொழில், பொருளாதாரம், மனித வளம் அனைத்தும் வீணாகி வருகிறது. ஒரு கட்சியை சேர்ந்த, ஒரு சிலர் மட்டும் பணம் குவிப்பதற்காக நடக்கும் இந்த ஆட்சி, அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மக்களால் தூக்கி எறியப்படுவது உறுதி. தமிழகத்தை சூழ்ந்துள்ள தீய அரசியல் சக்தியை வீழ்த்தி தேசியத்தின் பாதையில் தமிழக மக்கள் அணிவகுத்து நிற்பார்கள்.

விரைவில் நல்லதொரு விடிவு காலம் பிறந்து தமிழகம் இழந்த பெருமைகளை எல்லாம் மீட்டெடுக்க பொங்கல் திருநாள் நமக்கு உத்வேகத்தை அளிக்கட்டும். அனைவரின் துயரங்களும் தீர வேண்டும். அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும். தைப்பொங்கல் திருநாள் எல்லா நன்மைகளையும் மக்களுக்கு வழங்கட்டும் என வேண்டி மக்கள் அனைவருக்கும் தை பொங்கல் வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version