புது தில்லி: இந்தியாவுக்கு வந்துள்ளார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான். அவருடன் சனிக்கிழமை இன்று பிரதமர் மோடி முக்கிய பேச்சு நடத்தினார். இந்தப் பேச்சில் இரு நாடுகளுக்கு இடையே விண்வெளி, கடல் பாதுகாப்பு, ரயில்வே, அணு ஆயுதம், பொருளாதாரம், தொழில், சூரிய சக்தி பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் உள்பட 14 துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேக் இன் இந்தியா திட்டத்தில் பிரான்ஸ் நாட்டை முதலீடு செய்யுமாறும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது… இந்தியா, பிரான்ஸ் இடையே பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. தற்போது இரு நாடுகள் இடையிலான உறவு மேலும் வலுப்பட்டு வருகிறது. நமது இரு நாட்டு இளைஞர்களும் இரு நாட்டு கலாசாரத்தை முழுமையாக தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். மேக் இன் இந்தியா திட்டம் மூலம் நமது நாட்டு பாதுகாப்புத் துறையில் பிரான்ஸ் நாட்டு முதலீட்டை எதிர்பார்க்கிறோம். இந்தியக் கடல் பிராந்திய பகுதிகள் நிலைத்தன்மையை பெற்று வலுவாக உள்ளது. தற்போது இதுதொடர்பான முக்கிய ஒப்பந்தம் நிறைவேறியுள்ளது. பாதுகாப்பு, ராணுவம் மற்றும் அணுசக்தி துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளன. இதில் இருவரின் பங்களிப்பும் அதிகளவில் இருக்கும் என்றார்.
பின்னர் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பேசுகையில் உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம். மேலும் பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனை நாம் மிக கவனமாக கையாள வேண்டும். இதனால் பாதுகாப்பு துறையில் இந்தியாவும், பிரான்சும் மிக முக்கியமான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளோம். பயங்கரவாதத்துக்கு எதிராக போராட இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளன. பயங்கரவாதத்தை ஒழிப்பதே இருநாட்டின் இலக்கும். இந்த ஒப்பந்தங்களின் மூலம் இந்தியா மற்றும் பிரான்ஸின் பாதுகாப்புத்துறை புதிய உச்சத்தை அடைந்துள்ளது என்று பேசினார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்.
முன்னதாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நான்கு நாட்கள் அரசு முறைப் பயணமாக வெள்ளிக்கிழமை இரவு இந்தியா வந்தடைந்தார். அவருக்கு புதுதில்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்பு அளித்தார். பின்னர் தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை காலை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.