
ஐ.பி.எல் 2025 – முதல் ஆட்டம் – கே கே ஆர் vs ஆர் சி பி – கொல்கொத்தா – 22.03.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை (174/8, அஜிங்க்யா ரஹானே 56, சுனில் நரேன் 44, ரகுவன்ஷி 30, க்ருணால் பாண்ட்யா 3/29, ஹேசல்வுட் 2/22, யஷ் தயால், ரசிக் சலாம், சுயேஷ் ஷர்மா தலா ஒரு விக்கட்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி (16.2 ஓவர்களில் மூன்று விக்கட் இழப்பிற்கு 177 ரன், பில் சால்ட் 56, விராட் கோலி ஆட்டமிழக்காமல் 59, ரஜத் படிதர் 34, லியம் லிவிங்க்ஸ்டோன் 15, வருண் சக்ரவர்த்தி 1/43, சுனில் நரேன் 1/27, வைபவ் அரோரா 1/42) ஏழு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி இன்று கொல்கொத்தாவில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்ச்ரஸ் பெங்களூரு அணியும் கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடின. கொல்கொத்தா அணியில் அஜிங்க்யா ரஹானே அணித்தலைவராக இருந்தார். பெங்களூரு அணிக்கு ரஜத் படிதர் அணித்தலைவராக இருந்தார்.
பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. கொல்கொத்தா அணியின் தொடக்க வீரரான க்விண்டன் டி காக் (4 ரன்) முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சுனில் நரேன் (26 பந்துகளில் 44 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) உடன் அஜிங்க்யா ரஹானே (31 பந்துகளில் 44 ரன், 6 ஃபோர், 4 சிக்சர்) இணைந்து ஆடி 10 ஓவர் முடிவில் அணியின் ஸ்கோரை 2 விக்கட் இழப்பிற்கு 109 ரன் என்ற நிலைக்குக் கொண்டுவந்தனர். மிக மெதுவாக ஆடக்கூடிய, சிறந்த டெஸ்ட் மட்டையாளராகக் கருதப்படும் ரஹானே இன்று அதிரடியாக ஆடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 10ஆவது ஓவர் முடிவில் சுனிலும் 11ஆவது ஓவரில் ரஹானேயும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ரன் ரேட் கட்டுப்படுத்தப்பட்டது. சில விக்கட்டுகளும் வேகமாக வீழ்ந்தன. 20 ஓவர் முடிவில் எட்டு விக்கடுகள் இழப்பிற்கு கொல்கொத்தா அணி 174 ரன் எடுத்தது.
அதன் பின்னர் ஆட வந்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (31 பந்துகளில் 56 ரன், 9 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் விராட் கோலி (36 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 59 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மிகச் சிறப்பான தொடக்கம் தந்தனர். அதன் பின்னர் ஆடவந்த தேவதத் படிக்கல் (இம்பாக்ட் பிளேயர்) (10 பந்துகளில் 10 ரன்), ரஜத் படிதர் (16 பந்துகளில் 34 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் லியம் லிவிங்க்ஸ்டோன் (5 பந்துகளில் 15 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோரும் சிறப்பாக ஆடி 16.2 ஓவர்களில் மூன்று விக்கட் இழப்பிற்கு 177 ரன் அடித்து பெங்களூரு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
பெங்களூரு அணியின் சுழல் பந்துவீச்சாளர், தனது பந்துவீச்சின் மூலம் மூன்று விக்கட் எடுத்த க்ருணால் பாண்ட்யா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.