புது தில்லி:
உத்தரப் பிரதேசம் மற்றும் பீஹாரில் மூன்று மக்களவை மற்றும் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் இன்று நடக்கின்றன. இந்தத் தேர்தல்கள் மூலம் மாநிலத்தில் மாறிய கூட்டணிக்கு மக்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பது தெளிவாகும்.
உ.பி.யில் கோராக்பூர், பஹல்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மௌரியா ஆகியோர் முதல்வர் மற்றும் துணை முதல்வராகப் பொறுப்பேற்றனர். எனவே இந்த இரு தொகுதிகளும் காலியாகின. இதை அடுத்து இந்த இரு மக்களவைத் தொகுதிகளுக்கும் பீஹாரில் அரேரியா மக்களவைத் தொகுதிக்கும் என மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.
அடுத்து, பீஹாரில் ஜகனாபாத், பஹாபூவா என இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தேர்தல் முதல்வர் நிதீஷின் கௌரவத்துக்கு சவால் விடும்படியாக உள்ளது. காரணம், பீகாரில் ஆட்சியில் இருந்த நிதிஷ், ராஷ்ட்ரீய ஜனதாதள கூட்டணியை முறித்துவிட்டு ஒரே நாள் இரவில் பாஜக.,வுடன் கூட்டணி வைத்து ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார். இந்தக் கூட்டணியை மக்கள் ரசித்து விரும்பி ஏற்றுக் கொண்டார்களா என்பதை இந்த இடைத்தேர்தல் காட்டிக் கொடுத்துவிடும் என்று கூறுகிறார்கள் அரசியல் மட்டத்தில். எனவே இந்த மூன்று மக்களவை, இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.